(2835)
பேறொன்று மற்றில்லை நின்சரண் அன்றி,அப்பேறளித்தற்
காறொன்று மில்லைமற் றச்சரண் அன்றி,என்றிப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத்தந்த செம்மைசொல்லால்
கூறும் பரமன்று இராமானுச! மெய்ம்மை கூறிடிலே.
(2836)
கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே
மாறன் பணித்த மரையுணர்ந் தோனை மதியிலியேன்
தேறும் படியென் மனம்புதுந் தானைத் திசையனைத்தும்
ஏறும் குணனை இராமா னுசனை இறைஞ்சினமே.
(2837)
இறைஞ்சப் படும்பரன் ஈசன் அரங்கனென்று இவ்வுலகத்
தறம்செப்பும் அண்ணல் இராமானுசன்,என்அருவினையின்
திறம்செற்றிரவும் பகலும் விடாதென்றன் சிந்தையுள்ளே
நிறைந்தொப் பறவிருந்தான், எனக் காரும் நிகரில்லையே!
(2838)
நிகரின்றி நின்றவென் நீசதைக்கு நின்னரு ளின்கணன்றிப்
புகலொன்று மில்லை அருட்குமஃ தேபுகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச! இனி நாம்பழுதே
அகலும் பொருளென், பயனிரு வோமுக்கு மானபின்னே?
(2839)
ஆனது செம்மை அறநெறி பொய்ம்மை அறுசமயம்
போனது பொன்றி யிறந்தது வெங்கலி பூங்கமலத்
தேனதி பாய்வயல் தென்னரங் கன்கழல் சென்னிவைத்துத்
தானதில் மன்னும் இராமா னுசனித் தலத்துதித்தே.
(2840)
உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்சமஞ்சிக்
கொதித்திட மாறி நடப்பன கொள்ளைவன் குற்றமெல்லாம்
பதித்தவென் புன்கவிப் பாவினம் பூண்டன பாவுதொல்சீர்
எதித்தலை நாதன் இராமா னுசன்றன் இணையடியே.
(2841)
அடியைத் தொடர்ந்தெழும் ஐவர்கட் காய்அன்று பாரதப்போர்
முடியப் பரிநெடுந் தேர்விடுங் கோனை முழுதுணர்ந்த
அடியர்க் கமுதம் இராமா னுசனென் னை ஆளவந்திப்
படியிற் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே.
(2842)
பார்த்தான் அறுசம யங்கள் பதைப்ப,இப்பார்முழுதும்
போர்த்தான் புகழ்கொண்டு புன்மையி னேனிடைத் தான்புகுந்து
தீர்த்தான் இருவினை தீர்த்தரங் கன்செய்ய தாளிணையோ
டார்த்தான் இவையெம் இராமா னுசன்செய்யும் அற்புதமே.
(2843)
அற்புதன் செம்மை இராமானுசன், என்னை ஆளவந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற்பல் லுயிர்களும் பல்லுல கியாவும் பரனதென்னும்
நற்பொருள் தன்னை, இந் நானிலத் தேவந்து நாட்டினனே.
(2844)
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது,தென் குருகைவள்ளல்
வாட்டமிலாவண் டமிழ்மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமா னுசன்றன் இயல்வுகண்டே.
(2845)
கண்டவர் சிந்தை கவரும் கடிபொழில் தென்னரங்கன்
தொண்டர் குலாவும் இராமா னுசனைத், தொகையிறந்த
பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித் தொழும், குடி யாமெங்கள் கோக்குலமே.