எங்களைப் பற்றி

நந்தா நரகத்து அழுந்தாமை வேண்டிடில் நானிலத்தீர்!*

என் தாதையான எதிராசனை நண்ணும் *என்றும் அவன்

அந்தாதி தன்னை அநுசந்தியும் அவன் தொண்டருடன் *

சிந்தாகுலம் கெடச் சேர்ந்திரும் முத்தி பின் சித்திக்குமே.

[ஆர்த்திப் பிரபந்தம்-49, மணவாள மாமுனிகள்]

எளிய பொருள்

இந்த மண்ணில் உள்ள மக்களே! எத்தனை அனுபவித்தாலும் முடிந்து விடாத ஸம்ஸாரம் என்ற நரகத்தில் சிக்காமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் என்ன செய்யவேண்டும்? என்னுடைய தந்தையான எம்பெருமானாரை அண்டி இருங்கள். மோக்ஷம் புகுவதற்கு ஏதுவாக உள்ள எம்பெருமானாரின் திருநாமத்தை ஒவ்வொரு பாசுரத்திலும் கூறும்படி அமைந்துள்ள “ப்ரபந்ந காயத்ரீ” என்னும் இராமானுச நூற்றந்தாதியை எப்போதும் கூறி வாருங்கள். எம்பெருமானாரின் திருவடிகளில் மட்டுமே ஆசை கொண்ட அடியார்களுடன், உங்கள் மனத்துன்பம் அனைத்தும் நீங்கும்படிச் சேர்ந்து இருங்கள். அதன் பின்னர் மோக்ஷம் என்பது எந்த ஐயமும் இன்றிச் சித்திக்கும்.

பிள்ளைலோகம் ஜீயர் வியாக்கியானம்.

“நந்தா நரகத் தழுந்தா வகை”, “நந்தாநெடு நரகத்திடை நணுகாவகை” [பெரிய திருமொழி] என்றபடியே ஒருகாலுமநுபவித்து முடியாததாய் “மற்றை நரகம்” என்னும்படி ஸம்ஸாகரமாகிற நரகத்திலே மக்நராகாமை யபேஷிதமாகில், நால்வகைப்பட்ட பூமியிலுண்டானவர்களே எனக்கு ஜநகரான வெம்பெருமனாரை ஆஸ்ரயிங்கோள். ஸர்வகாலத்திலும் மொக்ஷைகஹேதுவாயிருக்கிற வவர்திருநாமத்தைப் பாட்டுகள்தோறும் பரதிபாதிப்பதாய் அதேவ​ ப்ரபந்நஜநகாயத்திரியாயிருக்கிறவவர் விஷயமான நூற்றந்தாதிதனை அநுஸந்தியுங்கோள். “உன் தொண்டர்களுக்கே” [இராமானுச நூற்றந்தாதி] என்னும்படி அவர் திருவடிகளிலே சபலராய் தொண்டுபட்டிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுடன் தத் இதர ஸஹவாஸத்தாலுண்டான மநோதுக்கமெல்லாங்கெட ஒரு நீராகப் பொருந்தி யிருங்கோள். ஆனபினபு முக்தியானது ஸம்ஸயமற ஸித்திக்கும். இத்தாலிவருடைய வாஸ்ரயணாதிகளுக்குந்தானே, அநிஷ்டநிவ்ருத்தி பூர்வகேஷ்டிப்பராப்த்தியைப் பண்ணுமென்று கருத்து.

அவர்கள் ஆஸ்ரயிக்கிறோ மென்றாறியிருக்க, மீளவுமவர்களைக் குறித்து ஏன் காலத்தை வ்யர்த்தமே போக்குகிறிகோள்? அவர் திருநாமத்தை ஸ்மரிக்க, அதி துர்லபமான பலம் ஸித்திக்கு மென்கிறார்.

Dravidaveda

back to top