(2846)
கோக்குல மன்னரை மூவெழுகால், ஒரு கூர்மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனமெங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமா னுசனை அடைந்தபின், என்
வாக்குரை யாது, என் மனம்நினை யாதினி மற்றொன்றையே.
(2847)
மற்றொரு பேறு மதியாது, அரங்கன் மலரடிக்காள்
உற்றவ ரேதனக் குற்றவ ராய்க்கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமா னுசனையிந் நானிலத்தே
பெற்றனன் பெற்றபின் மற்றறி யேனொரு பேதைமையே.
(2848)
பேதையர் வேதப் பொருளிதென் னுன்னிப் பிரமம்நன்றென்
றோதிமற் றெல்லா உயிரும் அஃதென்று உயிர்கள்மெய்விட்
டாதிப் பரனொடொன் றாமென்று சொல்லுமவ் வல்லலெல்லாம்
வாதில்வென் றான், எம் இராமா னுசன்மெய்ம் மதிக்கடலே.
(2849)
கடலள வாய திசையெட்டி னுள்ளும் கலியிருளே
மிடைதரு காலத் திராமா னுசன், மிக்க நான்மறையின்
சுடரொளி யாலவ் விருளைத் துரத்தில னேல்உயிரை
உடையவன், நாரணன் என்றறி வாரில்லை உற்றுணர்ந்தே.
(2850)
உணர்ந்தமெய்ஞ் ஞானியர் யோகந் தொறும்,திரு வாய்மொழியின்
மணந்தரும் இன்னிசை மன்னும் இடந்தொறும் மாமலராள்
புணர்ந்தபொன் மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும்
குணந்திகழ் கொண்டல் இராமானுசனெங் குலக்கொழுந்தே.
(2851)
கொழுந்துவிட் டோடிப் படரும்வெங் கோள்வினை யால்,நிரயத்
தழுந்தியிட் டேனைவந் தாட்கொண்ட பின்னும், அருமுனிவர்
தொழுந்தவத் தோனெம் இராமா னுசன்தொல் புகழ்சுடர்மிக்
கெழுந்தது,அத்தால்நல் லதிசயங் கண்ட திருநிலமே.
(2852)
இருந்தேன் இருவினைப் பாசம் கழற்றி இன்றியான்இறையும்
வருந்தேன் இனியெம் இராமானுசன்,மன்னு மாமலர்த்தாள்
பொருந்தா நிலையுடைப் புன்மையி னோர்க்கொன்றும் நன்மைசெய்யாப்
பொருந்தே வரைப்பரவும், பெரியோர்தம் கழல்பிடித்தே.
(2853)
பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கியசீர்
அடியைத் தொடரும் படிநல்க வேண்டும் அறுசமயச்
செடியைத் தொடரும் மருள்செறிந் தோர்சிதைந் தோடவந்திப்
படியைத் தொடரும் இராமா னுச! மிக்க பண்டிதனே!
(2854)
பண்டரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதமாய்
விண்டிட எங்கள் இராமா னுசமுனி வேழம் மெய்ம்மை
கொண்டநல் வேதக் கொழுந்தண்ட மேந்திக் குவலயத்தே
மண்டிவந் தேன்றது வாதியர் காள்! உங்கள் வாழ்வற்றதே.
(2855)
வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர்தம்
தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது, தத்துவநூல்
கூழற்றது குற்ற மெல்லாம் பதித்த குணத்தினர்க்கந்
நாழற்றது,நம் இராமா னுசந்தந்த ஞானத்திலே.
(2856)
ஞானம் கனிந்த நலங்கொண்டு நாடொரும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வி னை யேன்மனத்தில்
ஈனம் கடிந்த இராமா னுசன் தன்னை எய்தினர்க்குத்
தானம் கொடுப்பது தன்தக வென்னும் சரண்கொடுத்தே.