(3462)
மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்புநா னதஞ்சுவன்,
மன்னுடை இலங்கை யரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் னினியது கொண்டு செய்வதென்,
என்னுடைய பந்தும் சுழலும் தந்து போகு நம்பீ!
(3463)
போகுநம் பீ! உன்தாமரை புரைகண் ணிணையும் செவ்வாய் முறுவலும்,
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோ மேயாம்?,
தோகைமா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவியோசை வைத்தெழ,
ஆகள் போகவிட்டுப் குழலூது போயிருந்தே.
(3464)
போயி ருந்தும்நின் புள்ளுவம் அறியாத வர்க்குரை நம்பி! நின்செய்ய
வாயிருங் கனியுங் கண்களும் விபரீத மிந்நாள்,
வேயி ருந்தடந் தோளினா ரித்திரு வருள்பெறு வார்யவர் கொல்
மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே?
(3465)
ஆலி னீளிலை யேழுலக முண்டன்று நீகிடந் தாய்,உன் மாயங்கள்
மேலை வானவரு மறியா ரினியெம் பரமே?
வேலி னேர்த்தடங் கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்கவல் லாய்! எம்மைநீ கழறேலே.
(3466)
கழறேல் நம்பீ உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கறியும், திண்சக்கர
நீழறு தொல்படை யாய்.உனக் கொன்றுணர்த் துவன் நான்,
மழறு தேன்மொழி யார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க,எம்
குழறு பூவையோடும் கிளியோடும் குழகேலே.
(3467)
குழகி யெங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மமொன் றில்லை,
பழகி யாமிருப் போம்பர மேயித் திருவருள்கள்?,
அழகி யாரிவ் வுலகுமூன் றுக்கும் தேவிதமை தகுவார் பலருளர்,
கழக மேறேல் நம்பீ! உனக்கும் இளைதே கன்மமே.
(3468)
கன்மமன் றெங்கள் கையில் பாவை பறிப்பது கடல்ஞால முண்டிட்ட,
நின்மலா நெடியாய். உனக்கேலும் பிழைபிழையே,
வன்மமே சொல்லி யெம்மைநீ விளையாடுதி அதுகேட்கில்
என்னைமார், தன்ம பாவமென் னாரொரு நான்று தடிபிணக்கே.
(3469)
பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதி யாதது,ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தியினாய்,
இணக்கி யெம்மையெந் தோழிமார் விளையாடப் போதுமின் என போந்தோமை,
உணக்கி நீவளைத் தாலென்சொல் லாருக வாதவரே?
(3470)
உகவையால் நெஞ்சம் உள்ளுருகி உன்தாமரைத் தடங்கண் விழிகளின்,
அகவலைப் படுப்பான் அழித்தாயுன் திருவடியால்,
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறுங் கண்டு,நின்
முகவொளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.
(3471)
நின்றிலங்கு முடியினாய். இருபத்தோர் கால்அரசு களை கட்ட,
வென்றி நீண்மழுவா வியன்ஞாலம் முன்படைத்தாய்,
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கருமா ணிக்கச்சுடர்,
நின்றன்னால் நலிவே படுவோ மென்றும் ஆய்ச்சி யோமே.
(3472)
ஆய்ச்சி யாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள்,
சீற்ற முண்டழு கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்,
ஏத்திய தமிழ்மாலை யாயிரத்துள் இவையு மோர்பத் திசையோடும்,
நாத்தன்னால் நவில வுரைப்பார்க் கில்லை நல்குரவே.
