(3466)
கழறேல் நம்பீ உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கறியும், திண்சக்கர
நீழறு தொல்படை யாய்.உனக் கொன்றுணர்த் துவன் நான்,
மழறு தேன்மொழி யார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க,எம்
குழறு பூவையோடும் கிளியோடும் குழகேலே.
பதவுரை
| நம்பீ கழறேல் |
– |
பிரானே! மேலிட்டு வார்த்தைசொல்வதை எங்களிடம் வைத்துக்கொள் வேண்டா! |
| உன் கைதவம் |
– |
உனது கபடங்களை |
| மண்ணும் விண்ணும் நன்கு அறியும் |
– |
உபய விபூதியும் நன்றாக அறியும் |
| நிழறு |
– |
இஷ்டப்படி நடத்தப்பெறுகிற |
| திண் சக்கரம் தொல்படையாய் |
– |
திண்ணிய சக்கரமாகிற அநாதியான ஆயுதத்தை யுடையவனே! |
| உனக்கு நான் ஒன்று உணர்த்துவன் |
– |
உனக்கு நான் ஒருவிஷயம் அறிவிக்கக் கேளாய், |
| நின் அருள் சூடுவார் |
– |
உனது க்ருபைக்குப்பாத்திர பூதைகளான |
| மழறு தேன்மொழியார்கள் |
– |
மழலைத் தேன்மொழியார்களான மாதர்கள் |
| மனம் வாடி நிற்க |
– |
நெஞ்சுகொதித்து நிற்கும்படியாக |
| எம் குழறு பூவை யொடும் |
– |
அநக்ஷர ரஸமாகப்போசுவின்ற எமது பூவைப் பறவையோடும் |
| கிளியோடும் |
– |
கிளியோடும் |
| குழகேல் |
– |
லீலாரஸம் கொண்டாட வேண்டா நீ. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (கழறேல்நம்பி) கீழே ‘எம்மைநீ கழறேலே‘ என்று மறுத்துக் கூறினவளவிலும், கண்ணபிரான், ‘நங்காய்! கொய்யென்பதைக் கனவிலுமறியாத வென்னை நீ பச்சைப் பசும் பொய்யனாக எண்ணி இப்படி திரஸ்கரித்துத் தள்ளுவது தகுதியன்று, மத்யஸ்தர்களை வைத்துக்கொண்டு நான் மெய்யனோ பொய்யனோ வென்பதை நிர்ணயிக்கவேண்டுமத்தனை‘ என்று சொல்லிக்கொண்டு மீண்டும் மேலிட்டு வார்த்தைசொல்ல, “கழறேல் நம்பீ! உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கறியும்“ என்கிறாள். நிர்யணம்பெறாத விஷயத்திற்கன்னோ மத்யஸ்தர்களை வைத்துக்கொண்டு ஸாக்ஷிகளை விசாரித்துக்கொண்டும் தடுமாறவேண்டுவது, உன்னுடைய ஸங்கதி உபயவிபூதியிலும் ப்ரஸித்தமன்றோ? (கைதவமாவது – மாயச்செயல், இது வடசொல்) நீ லஞ்சகம் செய்வது இம்மண்ணுலகில் மாத்தரமேயோ? விண்ணுலகிலும் ப்ரஸித்தமன்றோ அது. “சூட்டுநன்மாலைகள் தூயனவேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபந்தராநிற்கவேயங்கு, ஒர்மாயையினால் ஈட்டிய வெண்ணெய் தொடுவுண்ணப்போந்து இமிலேற்று வன்கூன்கோட்டிடையாடினைகூத்து அடலாயர்தம் கொம்பினுக்கோ“ என்கிற திருவிருத்தப் பாசுரத்தின் பொருள் இங்கே அநுஸந்திக்கத்தக்கது.
உன் க்ருத்ரிமத்தை உபய விபூதியும் நன்கறியும் என்றவாறே, கண்ணபிரான் “அந்தோ! இங்ஙனே அலர்தூற்றிவிடுவது ஒரு வார்த்தையோ? விவேகியான வொருவனை ஸாக்ஷியிட்டு மூதலிக்கவேண்டாவோ?“ என்று கூற, அப்படியோ? ஸாக்ஷிகளுக்குக் குறையுண்டோ? ஸாக்ஷிகளை நாங்கள் தேடவேண்டுமோ? என் கையிலேயே ஸாக்ஷி விளங்காநின்றானே, ஆயுத மெடேனென்று ஆயுதமெடுத்தும், பகலை இரவாக்கியும் இங்ஙனோயாக நீ செய்த க்ருத்ரிமங்களுக்கு உடன்பட்டிருந்த திருவாழியாழ்வான் உன்கையிலேயே உள்ளானன்றோ? அவனைக் கேட்கலாமே யென்கிறாள் – திண்சக்கரநிழறு தொல்படையாய் என்கிறாள்.
இவள் இப்படிச் சொன்னவாறே ‘அந்தோ! இவள், நாம் வாயைத்திறந்து மறுமாற்றம் சொல்ல இடமில்லாதபடியாக இப்படி ஸாக்ஷியிட்டுவிட்டாளே, இனி நாம் என்செய்வது! என்று கவிழ்ந்துநின்றான் கண்ணபிரான். அந்த தீனதசையைக்கண்டு ‘பிரானே! கவிழ்தலையிட்டிருக்கவேண்டா, நீ எம்மையே அடிபணிந்தாயாகில் நீ மறுமாற்றம் சொல்லிப் பிழைக்க வேண்டிய வகைகளை நாமே உனக்குச் சொல்லித்தருகிறோம் வா என்றார்கள்.
ஸர்வஜ்ஞரான நமக்கும் இவர்கள் ஒன்று உணர்த்துவதாகச் சொல்லாநின்றார்களே!, இது என்ன அழகானபேச்சு! என்று உள்குழைந்த கண்ணபிரான் அந்தப் பேச்சின் இனிமையை எடுத்துரைத்துப் புகழத் தொடங்கினான் – “உங்களுடைய மொழி ஸாமான்யமாக இல்லையே, தேன்போலே இனிதாயிருக்கின்றதே!“ என்றான், அதற்குச் சொல்லுகிறார்கள் – அப்பா! தேன்மொழியார் நாங்கள் அல்லோம், நின்னருள் சூடும் தேன்மொழியார்கள் வேறேயுளர், எம்மை அவர்களாக ப்ரமிக்கிறாய் போலும், அந்தப்பரம் வேண்டாகாண் என்றார்கள் என்று சொல்லிவிட்டுத் தலைமறைய நின்றார்கள், இவனோடு இந்த ஸம்பாஷணை தானும் பாதுமென்று எண்ணி நின்றார்கள்,
அவ்வளவிலே அங்கே சில பூவைகளும் கிளிகளுமிருந்தன, அவற்றோடே லீலாரஸம் கொண்டாட ஆரம்பித்தான் கண்ணபிரான், அதுகண்டு “நின்ருள் சூடுவார்மனம்வாடி நிற்க எம் குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே“ என்கிறார்கள். நீ இங்கே வந்தது தெரிந்தாலே உன் காதலிமார்கள் வருந்துவார்கள், அதற்குமேலே எம்முடைய ஸம்பந்தம் பெற்ற வஸ்துக்களிலே நீ அபிநிவேசம் காட்டுகிறாயென்கிற இதுவும் தெரிந்தால் அவர்களுடைய வருத்தத்திற்கு அளவேயிராது. ஆகவே அவர்கள் மனம்வாடும்படியாக நீ இங்ஙனம் குழகவேண்டா என்றார்களாயிற்று.
பூவை என்று புஷ்பவிசேஷத்திற்கும் பக்ஷி விசேஷத்திற்கும் பெயர், “பூவைப்பூவண்ணா“ “பூவையுங் காயாவும் நீலமும் பூக்கின்ற“ என்னுமிடங்களில் புஷ்ப விசேஷப்பொருளில் பிரயோகமும், “நீயலையே சிறுபூவாய்! நெடுமாலார்க்கென்தூதாய்“ “பூவை பைங்கிளிகள்“ “பூவைகள்காள்குயில்காள் மயில்காள்“ என்னுமிடங்களில் பக்ஷிவிசேஷப் பொருளில் பிரயோகமும் காணத்தக்கன.
English Translation
O Sire, do not lie! Men and gods know your deceits. Lord of radiant discus, let me teach you something. Exuberant sweet-tongued damsels will always worship your grace. Pray do not play with our dumb mynahs and parrots.
