(3467)
குழகி யெங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மமொன் றில்லை,
பழகி யாமிருப் போம்பர மேயித் திருவருள்கள்?,
அழகி யாரிவ் வுலகுமூன் றுக்கும் தேவிதமை தகுவார் பலருளர்,
கழக மேறேல் நம்பீ! உனக்கும் இளைதே கன்மமே.
பதவுரை
| நம்பீ |
– |
பிரானே! |
| குழகி |
– |
லீலாரஸம் கொண்டாடி |
| எங்கள் குழமணன் கொண்டு |
– |
எங்களுடைய மரப்பாச்சியை யெடுத்துக் கொண்டு |
| கோயின்மை செய்து |
– |
கேட்பாரற்ற செயல்களைச் செய்வதனால் |
| கன்மம் ஒன்று இல்லை |
– |
உனக்கு ஒரு காரியமும ஸித்தித்ததாகாது |
| யாம் பழகி இருப்போம் |
– |
நாங்கள் வெகுநாளாகவே உம்மோடு பழகி உமது யோக்யதைகளைத் தெரிந்துகொண்டிருக்கின்றோம். |
| இத் திரு அருள்கள் பரமே |
– |
உம்முடைய ஆசைப்பெருக்கான காரியங்களுக்கு. நாங்கள் இலக்காகப் போருமோ (இவை எங்களால் தாங்க முடியா) |
| இ உலகு மூன்றுக்கும் அழிகியார் |
– |
இம்மூவுலகத்தினுள்ளும் அழகிற்சிறந்தவர்களாயும் |
| தேவிமை தருவார் |
– |
உமக்குத் தேவிகளாயிருக்கத் தகுந்தவர்களாயுமுள்ள மாதர்கள் |
| பலர் உளர் |
– |
பலருண்டு, |
| கழகம் ஏறேல் |
– |
எங்கள் திரளிலே பலாத்காரமாகப் புகவேண்டா |
| கன்மம் |
– |
இப்படிப்பட்ட செய்கையனது |
| உனக்கும் இளைது |
– |
உன்மனத்தால் பார்த்தாலும் பால்ய லௌல்யமாகத் தோற்றக்கூடியதே. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (குழகியெங்கள்) கீழ் “எம்குழறுபூவையொடும் கிளியோடும் குழகேலே“ என்றார்கள். அந்தப் பூவைகளும் கிளிகளும் உயிருள்ளவையாகையாலே ‘நாம் நமது தலைவிகளின் கருத்துக்கு இணங்க வர்த்க்கவேணும்‘ என்று தெரிந்துகொண்டு கனகககண்ணபிரான் கையின் பிடிகொடாமே அப்பால் சென்றுவிட்டான, அசேதனங்களான சில லீலோபகரணங்கள் அங்குக்கீழே விழுந்துகிடந்தன, அவற்றைக் கண்ணபிரான் எடுத்துக்கொண்டு சில விலாஸ சேஷ்டிதங்களைச் செய்ய ஆரம்பித்தான், அதற்குமேலே வார்த்தைகள் பெருகிச்சென்றன, “கச்சொடுபட்டைக்கிழித்துக் காம்புதுகிலவைகீறி” “பந்துபறித்துத் துகில்பற்றிக்கீறிப் படிறன்படிறுசெய்யும்“ என்னும்படியான கேட்பாரற்ற செய்கைகளைச் செய்யவும் தொடங்கினான், அதுகண்டு “குழகியெங்கள் குழமணன்கொண்டு கோயின்மைசெய்து கன்ம்மொன்றல்லை“ என்கிறார்கள்.
கோயின்மை – கோ-இன்மை, அரசனில்லாமை என்று சப்தார்த்தம், அராஜகமான செய்கை என்பது கருத்து.
கன்ம்மொன்றில்லை – இதனால் உனக்கு யாதொரு லாபமும் இல்லை என்றபடி. நீ எவ்வளவு குறும்புகள் செய்தாலும் இது உனக்கு நிறக்கேடாகுமத்தனையல்லது நாங்கள் வசப்பட்டு வருவோமென்கிற ஆசைக்கு இடமில்லை என்றவாறு.
“கன்மொன்றில்லை – இதனால் உனக்கு யாதொரு லாபமும் இல்லை என்றபடி. நீ எவ்வளவு குறும்புகளை செய்தாலும் இது உனக்கு நிறக்கேடாகுமத்தனையல்லது நாங்கள் வசப்பட்டுவருவோமென்கிற ஆசைக்கு இடமில்லை என்றவாறு.
“கன்மமொன்றில்லை“ என்றவாறே ‘நங்காய்! இப்படியும் வெட்டிதாக வார்த்தை சொல்லலாமோ? நான் உன்னுடைய சரக்கன்றோ, உன்னைவிட்டால் எனக்குக் கதியுண்டோ? உன்னையேயன்றோ இரவும் பகலும் நான் சிந்தித்துக்கொண்டிருப்பது‘ என்றிங்ஙனே அநுநயித்து வார்த்தைசொல்ல “பழகி யாருமிப்போம்“ என்கிறார்கள். அப்பா! உன்னுடைய பச்சைப்பசும் பொய்யுரைகளை நாங்கள் இன்று புதிதாகக் கேட்கிறோமல்லோம் கிடாய், உன்பொய்யுரைகளிலேயன்றோ நாங்கள் பழகியிருப்பது என்றபடி.
இங்ஙனம் சொல்லக்கேட்ட கண்ணபிரான் ‘என்னுடைய பொய்யுரைகளிலும் குறும்புச்செயல்களிலும் நீங்கள் பழகினவர்கள்தானே, சிலர் ஒன்றிலே பழகிவிட்டால் அது இல்லாமல் ஒரு நொடிப்பொழுதும் இருக்க முடியாதன்றோ, என்னுடைய குறும்புகளிலேயே பழகினவுங்களுக்கு என் குறும்புகள் இன்றியமையாதனவன்றோ, பரமபோக்யமாகவன்றோ இவை உங்களுக்கு இருக்கும்‘ என்று சொல்லிக்கொண்டே மிகைத்து அல்லல்படுத்த ஆரம்பித்தான். அதற்கு “பரமே யித்திருவருள்கள்“ என்கிறார்கள். அவனுடைய குறும்பான செயல்களையே இங்குத் திருவருள்கள் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார்கள். மேலே பத்தாம் பத்தில் “என்கொலம்மான் திருவருள்கள்!“ என்கிறாராழ்வார். அங்கு எம்பெருமானுடைய ஒரு வியாமோ ஹத்தையே திருவருளென்ற சொல் காட்டுகின்றது. அதுபோலவே இங்கும் அவனுடைய வ்யாமோஹபரீவாஹமான தூர்த்த க்ருத்யங்களையே திருவருள்களென்கிறது. பரமே இத்திருவருள்கள்! – உன்னுடைய இப்படிப்பட்ட குறும்புகளை எம்மால் பொறுக்கப்போமோ? என்றபடி. என்னும் வடசொல் பரமெனத்திரிந்தது.
எங்களால் பொறுக்கப்போமோ? என்றவாறே ‘பின்னே யாரால் பொறுக்கப்போகும்‘ என்றான் கண்ணபிரான். அதற்கு உத்தரமாக “அழகியாரிவ்வுலகு மூன்றுக்கும் தேவிமைதகுவார் பலருளர்“ என்கிறார்கள். த்ரிலோக ஸுந்தரிகளென்று பேர்பெற்று உனக்கேற்கும் தேவிமார்கள் பலருண்டுகாண், உனக்கு ஏற்காத குரூபிகளான நாங்கள் எதற்கு? என்றபடி. “தக்கார் பலர் தேவிமார்சாலவுடையீர்“ என்ற திருமங்கையாழ்வார் பாசுரம் இங்கே நினைக்கத்தக்கது.
“உனக்கேற்ற அழகிய தேவிமார்கள் பலருண்டு” என்றவாறே கண்ணபிரான் “எனக்கு ஏற்ற தேவிகள் அழகிகள் நீங்கள் தவிர வேறில்லை, உங்கள்கையில் ஆணையிட்டுத் தருகிறேன் காண்மின்“ என்று சொல்லிக்கொண்டே உள்ளே புகத்தொடங்கினான், அதுகண்டு “கழகமேறேல் நம்பீ“ என்கிறார்கள். நீ எத்தனைபேரைத் தீண்டி வந்திருப்பாயோ தெரியாது, மேல் விழுந்து தீண்டாதேகொள் என்றவாறு. கழகம். – கோஷ்டி.
இங்கே பரமபோக்யமான ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின் – “இவ்விடத்தே பட்டர் அருளிச்செய்வதொரு வார்த்தையுண்டு, ஸமஸ்த கல்யாணகுணாத்மகனாய் உபய விபூதியுக்தனாய் ஸர்வாதிகனாய் ஸர்வநியந்தாவா யிருக்கிற ஸர்வேச்வரன் நாலிடைப்பெண்களிருந்தவிடத்தே புக்கல்லது நிற்கமாட்டாத செல்லாமைவிளைய, அவர்கள் நீ இங்குப் புகுராதேகொள் என்ன, விலங்கிட்டாப்போலே பேரவும் திரியவும்மாட்டாதே தடுமாறி நின்றானென்கிற ஸௌசீல்யம் தங்களையுமிவர்களையுமொழிய ஆரறிந்து கொண்டாட வ்யாஸாதிகள் எழுதியிட்டுவைத்துப் போனார்களோ? என்றருளிச்செய்வர், ஸர்வநியந்தாவானவன் சிலர்க்கு நியமிக்கலாம்படி எளியனானான் என்றால் இது மெய்யென்று கைக்கொள்ளுவாரைக் கிடையாதிறே. சாஸ்த்ரங்களெல்லாம் ஈசேசிதவ்ய விபாகம்பண்ணி ஒருங்கவிடாநின்ற, அத்தலை யித்தலையாகச் செல்லுகிறதிறே இது.“
இவர்கள் ‘கழகமேறேல்நம்பீ“ என்றால் அதுகேட்டு அப்படியே வர்த்திப்பானோ அவன்? இவர்கள்தாம் உள்ளூறச் சொல்லுகிறவார்த்தையுமன்றே இது, அவன் மேன்மேலும் உட்புகவேணும், தீம்புசெய்யவேணும் என்றன்றோ இவர்களும் உள்ளே எண்ணிருப்பது. அவன் இஃதறிவானாகையாலே பிடிவாதமாகச் சில செய்யப்புகுந்தான், அதுநோக்கி “உனக்குமிளைதே கன்மமே“ என்கிறார்கள். அப்பா! நீ செய்கிற இவ்வநீதியான செயல் நீசத்தனமானது என்று நாங்கள் சொல்லுகிறவளவேயோ? நீயே ஆலோசித்துப் பார்த்தல் இது மிகவும் நீசத்தனமென்னுமிடம் உன் மனத்துக்கும் தெரியுமே என்றபடி.
English Translation
No use pretending to repent, pray do not play with our dolls. We are familiar with these favours, we do not deserve them. There are many fair damsels worthy of queen ship. Sire, do not ascend our fold, this is childishness, unbecoming of you.
