(3465)

(3465)

ஆலி னீளிலை யேழுலக முண்டன்று நீகிடந் தாய்,உன் மாயங்கள்

மேலை வானவரு மறியா ரினியெம் பரமே?

வேலி னேர்த்தடங் கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று

காலி மேய்க்கவல் லாய்! எம்மைநீ கழறேலே.

பதவுரை

ஏழ் உலகும் உண்டு

ஸமஸ்த லோகங்களையும் பிரளயங்கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்து
ஆலின் நீள் இலை

ஆலமரத்தின் இளந்தளிரிலே
அன்று நீ கிடந்தாய்

முன்னொருகாலத்தில் கிடந்தவனல்லையோ நீ
உன் மாயங்கள்

உனது மாயச்செயல்களை
மேலே வானவரும் அறியார்

மேற்பட்டவர்களான நித்யஸூரிகளும் அறியார்கள்,
இனி எம் பரமே

அப்படியிருக்க எம்மால் அறியப்போமோ,
வேலின் நேர் தட கண்ணினார்

வேல்போன்று பெரிய கண்களை யுடையவர்களான மாதர்கள்
விளையாடு

விளையாடுமிடமான
சூழலை

விலாஸ ஸ்தானங்களை
சூழவே நின்று

பற்றிக்கொண்டிருந்து
காலி மேய்க்க வல்லாய்

பசுக்களைமேய்க்கவல்ல பெருமானே!
எம்மை நீ சுழறேல்

இந்தப் பொய்கள் எங்களுக்குச் சொல்லவேண்டா.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (ஆலினீளிலே) கீழ்ப்பாட்டில் “நின்செய்யவாயிருங் கனியுங் கண்களும் விபரீதமிந்நாள்“ என்றதைக்கேட்ட கண்ணபிரான் ‘விபரீதமானது என்னிடம் யாதென்றும் இருக்கில்லாது, நான் செய்வது எதுவும் ருஜுவாக இருக்குமே யல்லது விபரீத மென்னும்படியாக என்னிடம் ஒன்றுமிருக்க ப்ரஸக்தியில்லை, விபரீதமோ மாயமோ எல்லாம் உங்களிடத்தே யல்லது என்னிடம் ஒன்றுமில்லை, என்றான், அதற்குக் கூறுகின்றாள் – “ஆலினீளிலை யேழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய், உன் மாயங்கள் மேலேவானவருமறியார் இனியெம்பரமே?“ என்று, உலகங்களையெல்லாம் திருவயிற்றினுள் ஏகதேசத்தில்வைத்து ஓர் ஆலந்தளிரிலே துயில்கொள்பவனல்லையே நீ, * பாலன் தனதுருவாய் ஏழுலகுண்டு, ஆலிலையின் மேலன்று நீ வளர்ந்த மெய்யென்பர் – ஆலன்று, வேலைநீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ, சூலைசூழ்குன்றெடுத்தாய் சொல்லு * (முதல் திருவந்தாதி) என்று மாஞனிகளும் அதிசயிக்கும்படியான இந்த மாயத்தை மேலையோரான வானவர்களும் அறியகில்லாதாராயிருக்க, நாங்களோ அறிகிற்போம்? உன் மாயத்தை நீயே அறியவேண்டுமத்தனை என்றபடி.

அதுகேட்ட கண்ணபிரான் ‘நங்காய்! நான் இங்கே தாமதித்துவந்தேன் என்ற வித்தனையே காரணமாகவன்றோ நீ இங்ஙனே மிறுக்குச்செய்வது. நான் தாய் தந்தையரக்குப் பரதங்திரனல்லேனோ? அவர்கள் என் கையிலே கோலைக்கொடுத்துப் பசுமேய்த்துவா என்றால் நான் அங்ஙனமே சென்று மேய்த்து வரவேண்டாவோ? அதனால் சிறிது தாமதித்தால் அதற்காக இவ்வளவு சீறலாகுமோ?“ என்று அநுநயமாகச் சில வார்த்தைகள் சொல்ல. “வேலினேர் தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று காலிமேய்க்கவல்லாய்!“ என்கிறாள் – பசு மேய்ப்பத்தென்று ஒரு வியாஜம் வைத்துக்கொண்டு, உனக்கு விருப்பமான கண்ணழிகிகள் விளையாடுமிடங்கிளலே திரவதன்றோ உன்பணி, இந்தச் சூது நாங்களறியோமோ? என்கிறாள்.

இவள் இங்ஙனே சொன்னவாறே ‘இவள் நம்முடைய செய்தியை உளபடியுணர்ந்து வெளியிட்டுவிட்டாளே!‘ என்கிற வருத்தத்தினால், அர்த்தமில்லாதபடி சில வார்த்தைகளை மிகைத்துச் சொல்ல ஆரம்பித்தான் கண்ணன், அதற்கு ‘எம்மைநீ கழறேலே‘ என்கிறாள். நீ மேலிட்டு வார்த்தை சொல்லுமிடம் இது வன்று, வேலினேர்தடங்கண்ணினார் விளையாட்டு சூழலிலே செனெறு சொல்லாய் என்றபடி.

English Translation

Then you swallowed the worlds and slept; your wonders even gods do not, -so how can we? –understand! You know how to graze your cows where Vel-eyed damsels play sand-castles, Then do not brother use, I Pray!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top