(2242)
நின்றதோர் பாதம் நிலம்புடைப்ப, நீண்டதோள்
சென்றளந்த தென்பர் திசையெல்லாம், – அன்று
கருமாணி யாயிரந்த கள்வனே, உன்னைப்
பிரமாணித் தார்பெற்ற பேறு.
(2243)
பேறொன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதையால்,
மாறென்று சொல்லிவணங்கினேன், ஏறின்
பெருத்தெருத் தம் கோடொசியப் பெண்நசையின் பின்போய்,
எருத்திருந்த நல்லாயர் ஏறு.
(2244)
ஏறேழும் வென்றடர்த்த எந்தை, எரியுருவத்து
ஏறேறிப் பட்ட இடுசாபம் – பாறேறி உண்டதலை
வாய்நிறையக் கோட்டங்கை ஒண்குருதி,
கண்டபொருள் சொல்லின் கதை.
(2245)
கதையும் பெரும்பொருளும் கண்ணாநின் பேரே,
இதய மிருந்தவையே ஏத்தில், – கதையும்
திருமொழியாய் நின்ற திருமாலே உன்னைப்,
பருமொழியால் காணப் பணி.
(2246)
பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால்
அணிந்தேனுன் சேவடிமே லன்பாய், – துணிந்தேன்
புரிந்தேத்தி யுன்னைப் புகலிடம்பார்த்து, ஆங்கே
இருந்தேத்தி வாழும் இது.
(2247)
இதுகண்டாய் நன்னெஞ்சே! இப்பிறவி யாவது,
இதுகண்டா யெல்லாம்நா முற்றது, – இதுகண்டாய்
நாரணன்பே ரோதி நகரத் தருகணையா,
காரணமும் வல்லையேல் காண்.
(2248)
கண்டேன் திருமேனி யான்கனவில், ஆங்கவன்கைக்
கண்டேன் கனலுஞ் சுடராழி, – கண்டேன்
உறுநோய் வினையிரண்டும் ஓட்டுவித்து, பின்னும்
மறுநோய் செறுவான் வலி.
(2249)
வலிமிக்க வாளெயிற்று வாளவுணர் மாள
வலிமிக்க வாள்வரைமத் தாக, – வலிமிக்க
வாணாகம் சுற்றி மறுகக் கடல்கடைந்தான்,
கோணாகம் கொம்பொசித்த கோ.
(2250)
கோவாகி மாநிலம்காத்து,நங்கண்முகப்பே
மாவேகிச் செல்கின்ற மன்னவரும் – பூவேகும்
செங்கமல நாபியான் சேவடிக்கே யேழ்பிறப்பும்,
தண்கமல மேய்ந்தார் தமர்.
(2251)
தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்,
தமருள்ளும் தண்பொருப்பு வேலை, – தமருள்ளும்
மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே,
ஏவல்ல எந்தைக் கிடம்.