(668)
மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்
இவ் வையந் தன்னொடும் கூடுவ தில்லையான்
ஐய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
மையல் கொண்டொழிந் தேனென்றன் மாலுக்கே
(669)
நூலி னேரிடை யார்திறத் தேநிற்கும்
ஞாலந் தன்னொடும் கூடுவ தில்லையான்
ஆலியா அழையா அரங்கா வென்று
மாலெ ழுந்தொழிந் தேனென்றன் மாலுக்கே
(670)
மார னார்வரி வெஞ்சிலைக் காட்செய்யும்
பாரி னாரொடும் கூடுவ தில்லையான்
ஆர மார்வ னரங்க னனந்தன்நல்
நார ணன்நர காந்தகன் பித்தனே
(671)
உண்டி யேயுடை யேயுகந் தோடும்இம்
மண்ட லத்தொடும் கூடுவ தில்லையான்
அண்ட வாண னரங்கன்வன் பேய்முலை
உண்ட வாயன்ற னுன்மத்தன் காண்மினே
(672)
தீதில் நன்னெறி நிற்கஅல் லாதுசெய்
நீதி யாரொடும் கூடுவ தில்லையான்
ஆதி ஆய னரங்கன்அந் தாமரைப்
பேதை மாமண வாளன்றன் பித்தனே
(673)
எம்ப ரத்தரல் லாரொடும் கூடலன்
உம்பர் வாழ்வையொன் றாக கருதிலன்
தம்பி ரானம ரர்க்குஅரங் கநகர்
எம்பி ரானுக்கெ ழுமையும் பித்தனே
(674)
எத்தி றத்திலும் யாரொடும் கூடும்அச்
சித்தந் தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால்
அத்த னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
பித்த னாயொழிந் தேனெம்பி ரானுக்கே
(675)
பேய ரேயெனக் கியாவரும் யானுமோர்
பேய னேயெவர்க் கும்இது பேசியென்
ஆய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
பேய னாயொழிந் தேனெம்பி ரானுக்கே
(676)
அங்கை யாழி யரங்க னடியிணை தங்கு
சிந்தைத் தனிப்பெரும் பித்தனாய்
கொங்கர் கோன்குல சேகரன் சொன்னசொல்
இங்கு வல்லவர்க் கேதமொன் றில்லையே