மூன்றாந் திருமொழி
(139)
போய்ப்பா டுடையநின் தந்தையும்தாழ்த்தான் பொருதிறல் கஞ்சன் கடியன்
காப்பாரு மில்லை கடல்வண்ணா உன்னைத் தனியேபோய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலையுண்ட பித்தனே கேசவநம்பீ உன்னைக் காதுகுத்த
ஆய்ப்பாலர் பெண்டுக ளெல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்திநான் வைத்தேன்.
(140)
வண்ணப் பவளம் மருங்கினில் சாத்தி மலர்ப்பாதக் கிங்கிணி யார்ப்ப
நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராய ணாஇங்கே வாராய்
எண்ணற் கரிய பிரானே திரியை எரியாமே காதுக் கிடுவன்
கண்ணுக்குநன்றும் அழகும் உடைய கனகக் கடிப்பும் இவையா.
(141)
வையமெல் லாம்பெறும் வார்கடல் வாழும் மகரக் குழைகொண்டு வைத்தேன்
வெய்யவே காதில் திரியை யிடுவன்நீ வேண்டிய தெல்லாம் தருவன்
உய்யஇவ் வாயர் குலத்தினில் தோன்றிய ஒண்சுடராயர்கொ ழுந்தே
மையன்மை செய்துஇள வாய்ச்சிய ருள்ளத்து மாதவ னேஇங்கே வாராய்.
(142)
வணநன் றுடைய வயிரக் கடிப்பிட்டு வார்காது தாழப் பெருக்கி
குணநன் றுடையர்இக் கோபால பிள்ளைகள் கோவிந்தா நீசொல்லுக் கொள்ளாய்
இணைநின் றழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலாப்பழம் தந்து
சுணநன் றணிமுலை யுண்ணத் தருவன்நான் சோத்தம் பிரான்இங்கே வாராய்.
(143)
சோத்தம் பிரான்என்று இரந்தாலும் கொள்ளாய் சுரிகுழ லாரொடு நீபோய்
கோத்துக் குரவை பிணைந்துஇங்கு வந்தால் குணங்கொண் டிடுவனோ நம்பீ
பேர்த்தும் பெரியன அப்பம்த ருவன் பிரானே திரியிட வொட்டில்
வேய்த்தடந் தோளார் விரும்பு கருங்குழல் விட்டுவே நீஇங்கே வாராய்.
(144)
விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய் உன்வாயில் விரும்பி யதனைநான் நோக்கி
மண்ணெல் லாம்கண்டுஎன் மனத்துள்ளே யஞ்சி மதுசூத னேயென்ற றிந்தேன்
புண்ணேது மில்லைஉன் காது மறியும் பொறுத்துஇறைப் போதுஇரு நம்பீ
கண்ணாஎன் கார்முகி லேகடல் வண்ணா காவல னேமுலை யுணாயே.
(145)
முலையேதும் வேண்டேனென் றோடிநின் காதில் கடிப்பைப் பறித்தெறிந் திட்டு
மலையை யெடுத்து மகிழ்ந்துகல் மாரி காத்துப் பசுநிரை மேய்த்தாய்
சிலையொன்று இறுத்தாய் திரிவிக் கிரமா திருவாயர் பாடிப் பிரானே
தலைநிலாப் போதேஉன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே யன்றே.
(146)
என்குற்ற மேயென்று சொல்லவும் வேண்டாகாண் என்னைநான் மண்ணுண்டே னாக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற் றிலையே
வன்புற் றரவின் பகைக்கொடி வாமன நம்பீ உன்காதுகள் தூரும்
துன்புற் றனவெல்லாம் தீர்ப்பாய் பிரானே திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே.
(147)
மெய்யென்று சொல்லுவார் சொல்லைக் கருதித் தொடுப்புண்டாய் வெண்ணெயை யென்று
கையைப் பிடித்துக் கரையுர லோடுஎன்னைக் காணவே கட்டிற் றிலையே
செய்தன சொல்லிச் சிரித்துஅங்கு இருக்கில் சிரிதரா உன்காது தூரும்
கையில் திரியை யிடுகிடாய் இந்நின்ற காரிகை யார்சிரி யாமே.
(148)
காரிகை யார்க்கும் உனக்கும் இழுக்குற்றென்? காதுகள் வீங்கி யெறியில்
தாரியா தாகில் தலைநொந் திடுமென்று விட்டிட்டேன் குற்றமே யன்றே
சேரியிற் பிள்ளைக ளெல்லாரும் காது பெருக்கித் திரியவும் காண்டி
ஏர்விடை செற்றுஇளங் கன்றுஎறிந் திட்ட இருடீகே சாஎன்தன் கண்ணே.
(149)
கண்ணைக் குளிரக் கலந்துஎங்கும் நோக்கிக் கடிகமழ் பூங்குழ லார்கள்
எண்ணத்துள் என்றும் இருந்துதித் திக்கும் பெருமானே எங்க ளமுதே
உண்ணக் கனிகள் தருவன் கடிப்பொன்றும் நோவாமே காதுக் கிடுவன்
பண்ணைக் கிழியச் சகட முதைத்திட்ட பற்பநா பாஇங்கே வாராய்.
(150)
வாவென்று சொல்லிஎன் கையைப் பிடித்து வலியவே காதில் கடிப்பை
நோவத் திரிக்கில் உனக்கிங் கிழுக்குற்றென்? காதுகள் நொந்திடும் கில்லேன்
நாவற் பழம்கொண்டு வைத்தேன் இவைகாணாய் நம்பீமுன் வஞ்ச மகளைச்
சாவப்பா லுண்டு சகடிறப் பாய்ந்திட்ட தாமோத ராஇங்கே வாராய்.
(151)
வார்காது தாழப்பெருக் கியமைத்து மகரக் குழையிட வேண்டி
சீரால் அசோதை திருமாலைச் சொன்னசொல் சிந்தையுள் நின்று திகழ
பாரார் தொல்புக ழான்புது வைமன்னன் பன்னிரு நாமத்தாற் சொன்ன
ஆராத அந்தாதி பன்னிரண் டும்வல்லார் அச்சுத னுக்குஅடி யாரே.
