(147)

(147)

மெய்யென்று சொல்லுவார் சொல்லைக் கருதித் தொடுப்புண்டாய் வெண்ணெயை யென்று

கையைப் பிடித்துக் கரையுர லோடுஎன்னைக் காணவே கட்டிற் றிலையே

செய்தன சொல்லிச் சிரித்துஅங்கு இருக்கில் சிரிதரா உன்காது தூரும்

கையில் திரியை யிடுகிடாய் இந்நின்ற காரிகை யார்சிரி யாமே.

பதவுரை

சொல்லுவார் சொல்லை

சொன்னார் சொன்ன பேச்சுக்களையெல்லாம்
மெய் என்று கருதி

(நீ) மெய்யென்றெண்ணி
வெண்ணெயை

வெண்ணெயை
தொடுப்பு உண்டாய்

களவுகண்டு உண்டாய்
என்று

என்று (என்மீது பழிசுமத்தி)
கையை பிடித்து

(என்) கையைப் பிடித்து
காண்

(பலரும்) கண்டு பரிஹஸிக்கும்படி
கரை உரலோடு

விளிம்பிலே வேலைசெய்திருக்கிற உரலில்
என்னை

(ஒன்றும் திருடாத) என்னை
கட்டிற்றிலையே

நீ கட்டவில்லையா?

(என்று கண்ணன் யசோதைமேல் குற்றஞ்சாட்டிச் சிரித்துநிற்க)

(அதற்கு யசோதை சொல்லுகிறாள்):

சிரிதரா

ஸ்ரீதரனே!
செய்தன

(நான் முன்பு) செய்தவற்றை
சொல்லி

சொல்லிக்கொண்டு
சிரித்து

புன்சிரிப்புச் செய்து
அங்கு

அங்கே (தூரத்தில்)
இருக்கில்

(பொழுதுபோக்கிக் கொண்டு) இருந்தால்
உன் காது

உன் காதுகள்
தூரும்

தூர்ந்துவிடும்;
இ நின்ற காரிகையார் சிரியாமே

(உன் முன்னே) நிற்கிற இந்தப் பெண்கள் சிரியாதபடி
கையில் திரியை

(என்) கையிலுள்ள திரியை
இடுகிடாய்

இட்டுக்கொள்வாயாக.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணன் யசோதையை நோக்கி ‘உன்பேச்சை நம்பக் கூடாது; நீ சொல்லுவார் சொல்வதைக் கேட்டு என்னைத் தண்டிப்பவளன்றோ?’ என்ன; யசோதை ‘உன்னை நான் அப்படிச் செய்ததுண்டோ?’ என்ன கண்ணன் ‘இவன் வெண்ணெய் திருடினானென்று யாரோ சொல்ல அதை உண்மையென்று நம்பி என் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டுபோய் என்னை எல்லாரும் பார்த்துப் பரிஹஸிக்கும்படி உரலோடு கட்டவில்லையோ?’ என்று சிரித்து நிற்க யசோதை ‘நீ இப்படியெல்லாம் நான் செய்தவற்றைச் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தால் உன் காதுகள் தூர்ந்துவிடுமே; தவிரவும் உன் பக்கல் அன்பினால் உன்னை விட்டுப் போகமாட்டாமல் நிற்கிற இந்தப் பெண்கள் ‘சொணைக்காது கூழைக்காது’ என்று சொல்லி உன்னை ஏகாதபடி உன் காதைப் பெருக்க இத்திரியை யணிந்துகொள்ள வேணும்’ என்று மறுபடியும் திரியிடப் பார்க்கிறாள்.  சொல்லுவார் என்றது – கொள்ளத்தகாத பேச்சையுடையவர் என்ற கருத்தைக் காட்டும்.  தொடுப்பு – (ஒருவரையும் கேளாமல்) தொடுதல் ; எனவே களவாம்: ‘பு’ விகுதிபெற்ற தொழிற்பெயர்.  கிடாய் – முன்னிலையசைச் சொல்.

English Translation

O Sridhara, You Say, “Giving credence to complaints of others, did you not blame me for stealing their butter, and bind me by my hands to a stone mortar for all to see?” If you stand there taunting me for all my deeds, the bores in your ears will seal. Come, let me insert this thread, so these girls don’t laugh and make fun of you.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top