ஏழாந் திருமொழி
(1308)
கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்,
நண்ணார்முனை வென்றிகொள் வார்மன்னு நாங்கூர்,
திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக் குளத்துள்
அண்ணா,அடியே னிடரைக் களையாயே.
(1309)
கொந்தார் துளவமலர் கொன்ட ணிவானே,
நந்தாத பெரும்புகழ் வேதியர் நாங்கூர்,
செந்தா மரைநீர்த் திருவெள்ளக் குளத்துள்
எந்தாய்,அடியே னிடரைக் களையாயே.
(1310)
குன்றால் குளிர்மா ரிதடுத் துகந்தானே,
நன்றா யபெரும் புகழ்வே தியர்நாங்கூர்
சென்றார் வணங்கும் திருவெள்ளக் குளத்துள்
நின்றாய், நெடியாய் அடியே னிடர்நீக்கே.
(1311)
கானார் கரிகொம் பதொசித்த களிறே,
நானா வகைநல் லவர்மன் னியநாங்கூர்,
தேனார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள்
ஆனாய், அடியேனுக் கருள்புரி யாயே.
(1312)
வேடார் திருவேங் கடம்மேய விளக்கே,
நாடார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர்,
சேடார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்தாய்,
பாடா வருவேன் விணையா யினபாற்றே.
(1313)
கல்லால் கடலை யணைகட்டி யுகந்தாய்,
நல்லார் பலர்வே தியர்மன் னியநாங்கூர்ச்
செல்வா, திருவெள்ளக் குளத்துறை வானே,
எல்லா இடரும் கெடுமா றருளாயே’
(1314)
கோலால் நிரைமேய்த்த எங்கோ வலர்கோவே,
நாலா கியவே தியர்மன் னியநாங்கூர்,
சேலார் வயல்சூழ் திருவெள்ளக் குளத்துள்
மாலே, எனவல் வினைதீர்த் தருளாயே.
(1315)
வாரா கமதாகி யிம்மண்ணை யிடந்தாய்,
நாரா யணனே நல்லவே தியர்நாங்கூர்,
சீரார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள்
ஆரா வமுதே, அடியேற் கருளாயே’
(1316)
பூவார் திருமா மகள்புல் லியமார்பா,
நாவார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர்த்
தேவா திருவெள்ளக் குளத்துறை வானே,
ஆவா அடியா னிவன்,என் றருளாயே.
(1317)
நல்லன் புடைவே தியர்மன் னியநாங்கூர்ச்
செல்வன் திருவெள் ளக்குளத் துறைவானை,
கல்லின் மலிதோள் கலியன் சொன்னமாலை,
வல்ல ரெனவல் லவர்வா னவர்தாமே.
