ஐந்தாந் திருமொழி
(3275)
வீற்றிருந் தேழுலகும் தனிக்கோல் செல்ல, வீவில்சீர்,
ஆற்றல்மிக் காளும் அம்மானைவெம்மா பிளந்தான்தன்னை,
போற்றி யென்றே கைகளாரத் தொழுது சொல்மாலைகள்,
ஏற்ற நோற்றேற் கினியென்னகுறை யெழுமையுமே?
(3276)
மைய கண்ணாள் மலர்மேலுறைவா ளுறைமார்பினன்,
செய்ய கொலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை
மொய்ய சொல்லா லிசைமாலைகளேத்தி யுள்ளப் பெற்றேன்,
வெய்ய நோய்கள் முழுதும் வியன்ஞாலத்து வீயவே.
(3277)
வீவி லின்ப மிகஎல்லை நிகழ்ந்தநம் அச்சுதன்,
வீவில் சீரன் மலர்க்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை,
வீவில் காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்,
வீவி லின்பமிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.
(3278)
மேவி நின்று தொழுவார் வினைபோக மேவும்பிரான்,
தூவியம் புள்ளு டையான் அடலாழியம் மான்றன்னை,
நாவிய லாலிசை மாலைக ளேத்திநண் ணப்பெற்றேன்,
ஆவியென் னாவியை யானறியேன்செய்த வாற்றையே.
(3279)
ஆற்ற நல்ல வகைகாட்டும் அம்மானை, அமரர்தம்
ஏற்றை யெல்லாப் பொருளும் விரித்தானை எம்மான்தன்னை,
மாற்ற மாலை புனைந்தேத்தி நாளும் மகிழ்வெய்தினேன்,
காற்றின் முன்னம் கடுகி வினைநோய்கள் கரியவே.
(3280)
கரிய மேனிமிசை வெளிய நீறுசிறி தேயிடும்,
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை,
உரிய சொல்லா லிசைமாலைகள் ஏத்தியுள்ளப் பெற்றேற்கு,
அரிய துண்டோ எனக்கின்று தொட்டுமினி யென்றுமே?
(3281)
என்றும் ஒன்றாகி யொத்தாரும்மிக் கார்களும், தன்றனக்
கின்றி நின்றானை யெல்லாவுலகும் உடையான் தன்னை,
குன்ற மொன்றால் மழைகாத்தபிரானைச்சொன் மாலைகள்,
நன்று சூட்டும் விதியெய் தினம் என்ன குறைநமக்கே?
(3282)
நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை, ஞாலத்தார்
தமக்கும் வானத் தவர்க்கும் பெருமானை, தண்டாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொன்மாலைகள், சொல்லுமா
றமைக்க வல்லேற் கினியாவர் நிகரகல் வானத்தே?
(3283)
வானத்தும் வானத்துள் ளும்பரும் மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்
தானத்தும், எண்டிசை யும்தவி ராதுநின் றான்தன்னை,
கூனற்சங் கத்தடக் கையவனைக் குடமாடியை வானக்
கோனைக், கவிசொல்ல வல்லேற் கினிமா றுண்டோ?
(3284)
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும்நின்றும்,
கொண்ட கோலத் தொடுவீற் றிருந்தும் மணங்கூடியும்,
கண்ட வாற்றால் தனக்கே யுலகென நின்றான்தன்னை,
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க் கின்பமாரியே.
(3285)
மாரி மாறாத தண்ணம்மலை வேங்கடத் தண்ணலை,
வாரி வாறாத பைம்பூம் பொழில்சூழ் குருகூர்நகர்,
காரி மாறன் சடகோபன் சொல்லாயிரத் திப்பத்தால்,
வேரி மாறாத பூமே லிருப்பாள் வினைதீர்க்குமே.
