(3284)

(3284)

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும்நின்றும்,

கொண்ட கோலத் தொடுவீற் றிருந்தும் மணங்கூடியும்,

கண்ட வாற்றால் தனக்கே யுலகென நின்றான்தன்னை,

வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க் கின்பமாரியே.

 

பதவுரை

உண்டும்

(ப்ரளயத்திலே) உண்டு வயிற்றிலே வைத்தும்

உமிழ்ந்தும்

பிறகு வெளி நாடுகாண உமிழ்ந்தும்

கடந்தும்

(மற்றொருகால்) அளந்து காற்கீழேயிட்டும்

இடந்தும்

(அவாந்தர ப்ரளப்த்திலே வராஹ ரூபியாய்) இடந்தெடுத்தும்

கிடந்தும்;

(ஸ்ரீராமாவதாரத்திலே) கடற்கரையிலே கிடந்தும்

நின்றும்

இராவணவதத்தின் பிறகு தேவர்கட்குக் காட்சி கொடுத்துநின்றும்

கொண்ட கோலத்தொடு

மீண்டுவந்து பட்டாபிஷேகம் பண்ணின கோலத்தொடே

வீற்றிருந்தும்

எழுந்தருளியிருந்தும்

மணம் கூடியும்

பதினோராயிரம் ஆண்டு பூமியை ரக்ஷிக்கையாலே பூமிப்பிராட்டி

விரும்பியணைக்க அவளோடே ஸம்ச்லேஷித்தும்

கண்ட ஆற்றால்

இப்படி ப்ரத்யக்ஷ்மாகக் கண்ட சேடிதங்களால்

உலகு தனதே என

உலகம் தனக்கே பேஷம் என்று நாடாகச்சொல்லும்படி

நின்றான் தன்னை

நின்ற ஸர்வேச்வரன் விஷயத்தில்

வண் தமிழ்

அழகிய தமிழ்ப்பிரபந்தத்தை

நூற்க

தொடுக்கைக்கு

நோற்றேன்

புண்ணியம் பண்ணினேன்: (இத்திவ்யப்ரந்தமானது)

அடியார்க்கு

எம்பெருமானடியார்கட்கு

ளஇன்பம் மாரி

ஆனந்த மழைபொழியும் மேகமாயிரா நின்றது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தாம் பாடுகிற கவிகளின் இனிமையைத் தாம் அநுஸந்தித்து, எம்பெருமானுக்கு நல்லராயிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் இவற்றைக் கேட்டால் எங்ஙனே இனியராகிறாரோ வென்கிறார்.  எம்பெருமானுடைய சேடிதங்களடங்க என் சொல்லுக்குள்ளேயாம்படி கவிபாட வல்லேனாய் ப்ராப்த விஷயத்திலே வாசிகமாக அடிமை செய்யப்பெற்றது

மாத்திரமன்றிக்கே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆனந்தமளிக்கவல்லவனானே னென்கிறார்.

எம்பெருமானுடைய சேஷ்டிதங்கள் பலவற்றையும் முன்னடிகளில் கங்காப்ரவாஹம்போல் அருளிச்செய்கிறார்.  உண்டது பிரளயாபத்தில், உமிழ்ந்தது பிரளயம் நீங்கினவாறே:

கடந்தது வாமநரவதாரத்தில், இடந்தது வராஹவதாரத்தில், கிடந்தது கடற்கரையிலே: ஸேதுபந்தனத்திற்கு முன்னே ஸமுத்ரராஜனைநோக்கி அஞ்ஜலி பண்ணிக்கிடந்தகிடை நின்றது-ராவண ஸம்ஹாரம் ஆனபிறகு தேவர்களுக்குக் காட்சி கொடுத்து நின்றது.  கொண்டகோலத்தொடு வீற்றிருந்தது-ஜடா வல்கலதாரியாய்ப் பர்ணசாலைகளிலே இருந்த இருப்பாதல்:  மகுடாபிஷேகஞ் செய்துகொண்டு பதினோராயிரமாண்டு இருந்த இருப்பாதல்.

… (தச வர்ஷஸஹஸ் ராணி தச வர்ஷசதரநி ச, ராமோ ராஜ்யமுபாஸித்வா.) என்கிறபடியே பதினோராயிரமாண்டு பூமியை ரக்ஷிக்கையாலே பூமிக்கு அபிமாநிநியான பிராட்டி விரும்பியணைக்க அவளோடே ஸம்ச்லேஷித்தமை சொல்லுகிறது மணங்கூடியும் என்று.

கண்டவாற்றால் என்றது இப்படி ப்ரத்யக்ஷ்ஸித்தமான சேஷ்டித ப்ரகாரங்களாலே என்றபடி.  ஒருவன் ஒரு நிலத்தைத் திருத்துவது செடிகொடிகள் வைப்பது எருவிடுவதாய் நெடுங்காலம் க்ருஷிபண்ணக்கண்டால் ‘இந்த நிலம் இவனுடையது’ என்று அறியலாமன்றா;  அதுபோல, உண்கை உமிழ்கை முதலான பலபல சேஷ்டிதங்களினால்  ‘உலகமெல்லாம் எம்பெருமானுடையது’ என்று அறுதியிடக் குறையில்லையாயிற்று.

ஆக இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயமாகத் திருவாய்மொழி பாடுகைக்குப் பாக்கியம் பண்ணினேன்;  இத்திருவாய்மொழியானது தொண்டர்கட்கு ஆனந்தத்தைப் பொழியும் மேகமாகவுள்ளது என்கிறது ஈற்றடி.

ஆசார்யஹ்ருதயத்தில் “வீட்டின்ப வின்பப்பாக்களில் த்ரவ்யபா‘ர் நிரூபணஸமம் இன்பமாரியிலாராய்ச்சி” என்றவிடத்து இன்பமாரி என்பதற்கு “திருவாய்மொழி முகத்தாலே ஆனந்தத்தை வர்ஷிக்கும் மேகமான ஆழ்வார்” என்று வியாக்கியானம் காண்கையாலே இங்கு “அடியார்க்கு இன்பமாரியாகிய நான் வண்டமிழ் நூற்கநோற்றேன்” என்று உரைத்தலுமாம்.

 

English Translation

He swallowed and brought out, measured and lifted the Universe, standing apart and enjoying his beautiful creation.  He lies, stands, and sits over it in full majesty, I have sung his praise through songs which are like ambrosia to devotees

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top