இரண்டாந் திருமொழி
(1558)
புள்ளாய் ஏனமுமாய்ப்புகுந்து, என்னை யுள்ளங்கொண்ட
கள்வா என்றலும் என் கண்கள்நீர் சோர்தருமால்,
உள்ளே நின்றுருகி நெஞ்சமுன்னை யுள்ளியக்கால்,
நள்ளே னுன்னையல்லால் நறையூர்நின்ற நம்பீயோ.
(1559)
ஓடாவாளரியி ன் உருவாய் மருவி என்றன்
மாடே வந்தடியேன் மனங்கொள்ள வல்லமைந்தா,
பாடேன் தொண்டர்தம்மைக் கவிதைப் பனுவல் கொண்டு,
நாடே னுன்னையல்லால் நறையூர்நின்ற நம்பீயோ.
(1560)
எம்மானு மெம்மனையும் எனைப்பெற் றொழிந்ததற்பின்,
அம்மானு மம்மனையும் அடியேனுக் காகிநின்ற,
நன்மான வொண்சுடரே நறையூர்நின்ற நம்பீ உன்
மைம்மான வண்ணமல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே
(1561)
சிறியாயோர் பிள்ளையுமா யுலகுண்டோ ராலிலைமேல்
உறைவாய், என்நெஞ்சினுள் உறைவாய் உறைந்ததுதான்
அறியா திருந்தறியே னடியேன் அணி வண்டுகிண்டும்
நறைவா ரும்பொழில்சூழ் நறையூர்நின்ற நம்பீயோ.
(1562)
நீண்டாயை வானவர்கள் நினைந்தேத்திக் காண்பரிதால்,
ஆண்டாயென் று ஆதரிக்கப் படுவாய்க்கு நானடிமை,
பூண்டேன் என் நெஞ்சினுள்ளே புகுந்தாயைப் போகலொட்டேன்,
நாண்தா னுனக்கொழிந்தேன் நறையூர்நின்ற நம்பீயோ.
(1563)
எந்தாதை தாதையப்பால் எழுவர் பழவடிமை
வந்தார் என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகலொட்டேன்,
அந்தோ என் னாருயிரே அரசே அருளெனக்கு நந்தாமல்
தந்தவெந்தாய் நறையூர்நின்ற நம்பீயோ.
(1564)
மன்னஞ்ச ஆயிரந்தோள் மழுவில்து ணித்தமைந்தா,
என்நெஞ்சத் துள்ளிருந்திங் கினிப்போய்ப் பிறரொருவர்,
வன்னெஞ்சம் புக்கிருக்க வொட்டேன் வளைத்துவைத்தேன்,
நன்னெஞ்ச அன்னம்மன்னும் நறையூர்நின்ற நம்பீயோ.
(1565)
எப்போதும் பொன்மலரிட் டிமையோர்தொ ழுது தங்கள்,
கைப்போது கொண்டிறைஞ்சிக் கழல்மேல் வணங்க நின்றாய்,
இப்போதென் னெஞ்சினுள்ளே புகுந்தாயைப் போகலொட்டேன்
நற்போது வண்டுகிண்டும் நறையூர்நின்ற நம்பீயோ!
(1566)
ஊனே ராக்கைதன்னை உழந்தோம்பி வைத்தமையால்,
யானா யென்றனக்கா யடியேன் மனம்புகுந்த
தேனே தீங்கரும்பின் தெளிவே என் சிந்தைதன்னால்,
நானே யெய்தப்பெற்றேன் நறையூர்நின்ற நம்பீயோ.
(1567)
நன்னீர் வயல்புடைசூழ் நறையூர்நின்ற நம்பியை
கன்னீர மால்வரைத்தோள் கலிகன்றி மங்கையர்கோன்,
சொன்னீர சொல்மாலை சொல்வார்கள், சூழ்விசும்பில்
நன்னீர்மை யால்மகிழ்ந்து நெடுந்காலம் வாழ்வாரே.
