(1561)

(1561)

சிறியாயோர் பிள்ளையுமா யுலகுண்டோ ராலிலைமேல்

உறைவாய், என்நெஞ்சினுள் உறைவாய் உறைந்ததுதான்

அறியா திருந்தறியே னடியேன் அணி வண்டுகிண்டும்

நறைவா ரும்பொழில்சூழ் நறையூர்நின்ற நம்பீயோ.

பதவுரை

அணி வண்டு

அழகிய வண்டுகள்
கிண்டும்

குடையப்பெற்றதும்
நறை வாரும்

தேன் பெருகப்பெற்றதுமான
பொழில்

சோலையாலே
சூழ்

சூழப்பட்ட
நறையூர், நின்ற நம்பீயோ!- ;
சிறியாயோர் பிள்ளையும் ஆய்

மிகச் சிறுகுழந்தையாய்
உலகு உண்டு

உலகங்களை உட்கொண்டு
ஓர் ஆல் இலை மேல்

ஒரு ஆலந்தளிரிலே
உறைவாய்

பொருந்தியிருந்தவனே!
என் நெஞ்சின் உள்ளே உளைவாய்

எனது நெஞ்சுக்குள்ளே வஸிப்பவனே!
உறைந்தது தான்

(நீ இப்படி என்னெஞ்சினுள்ளே) வாஸஞ்செய்தருள்வதை
அடியேன்

அடியேன்
அறியா திருந்தறியேன்

தெரிந்துகொள்ளாமலிருக்கவில்லை

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உலகங்களையெல்லாம் பிரளயங் கொள்ளப்புகுந்தவாறே அனைத்தையும் திருவயிற்றடக்கி மிகுஞானச் சிறுகுழவியாய் ஒரு சிற்றாலந்தளிரிலே துயில் கொண்டாய் என்பதைக் கேட்டார்வாய்க் கேட்டிருந்தேன்; அந்தத் திருவுருவத்தோடு இன்று என்னெஞ்சினுள்ளே வந்து உறைகின்றபடியை நன்கு தெரிந்துகொண்டேன்; மற்றையாரைப் போலே நான் நன்றியுணர்வு கெட்டவனல்லேன்; இப்பெருநன்றியைச் சிந்தியாமல் ஒருபொழுதும் நானிருப்பதில்லை என்கிறார்.

ஆலிலைமேலுறைவாய் என்னெஞ்சினுள்ளே உறைவாய் = ஆலிலைபோலே என்னெஞ்சையும் உரிய இடமாகக் கொண்டாய் என்றாவது, ஆலிலையை இகழ்ந்திட்டு என்னெஞ்சை இடமாகக் கொண்டாய் என்றாவது, கருத்துக்கொள்ளலாம்.

அணிவண்டு கிண்டும் நறைவாரும் பொழில்சூழ் நறையூர்நின்ற நம்பீயோ – பரமபோக்யமான திருநறையூர்ப்பதி உனக்கு இருப்பிடமாக அமைந்திருக்கச் செய்தேயும் அதனையும் விட்டு என்னெஞ்சிலே உறைகின்றாயாதலால் உன்விஷயத்திலே அடியேன் சாலவும் க்ருதஜ்ஞனா யிராநின்றேனென்றவாறு.

 

English Translation

Came as babe, you swallowed all and seeping, lay on a floating leaf!  Lord eternal staying in my heart, unknown to me then!  Nectar-dripping groves with bumble-bees surround your temple.  How can I now forget you, Naraiyur lord-in-residence, O!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top