(1563)

(1563)

எந்தாதை தாதையப்பால் எழுவர் பழவடிமை

வந்தார் என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகலொட்டேன்,

அந்தோ என் னாருயிரே  அரசே அருளெனக்கு நந்தாமல்

தந்தவெந்தாய் நறையூர்நின்ற நம்பீயோ.

 

பதவுரை

என் ஆர் உயிரே

எனது அருமையான உயிர் போன்றவனே!

அரசே

என்னை ஆள்பவனே!

எனக்கு அருள் நந்தாமல் தந்த எந்தாய்

என் திறத்தில் கிருபையைக் குறைவின்றிச் செய்தருளின எம்பெருமானே!

நறையூர் நின்ற நம்பீயோ!- ;

எம் தாதை தாதை

நானும் என் தகப்பனும் அவன் தகப்பனும்

அப்பால்

அவனுக்கு முன்புண்டான

எழுவர்

ஸப்த புருஷர்களும்

(ஆகப் பத்துத்தலைமுறையாக)

பழவடிமை வந்தார்

இயற்கையான அடிமையைச் செய்து வந்தவர்கள்;

என் நெஞ்சின் உள்ளே

எனது மனத்தினுள்ளே

வந்தாயை

வந்து சேர்ந்த உன்னை

போகல் ஒட்டேன்

இனி வேறிடம் போக வொட்டேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தாம் அனேக வம்ச பரம்பரையாகப் பகவத் விஷயத்திலே தொண்டு பட்டிருக்கும்படியை முதலடியில் வெளியிடுகிறார்.  நம்முடையவர்கள் இதையொரு ஏற்றமாகச் சொல்லிக் கொள்வதுண்டு; “ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள்” “எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பனேழ்படிகால் தொடங்கி வந்து வழிவிழயாட் செய்கின்றோம்” இத்யாதிகள் காண்க.  நான், என்னுடைய தகப்பனார், அவருடைய தகப்பனார், அவர்க்கு அப்பால் எழுவர் என்றிப்படி பாரம்பரியமாக அநந்யார்ஹ சேஷத்வத்தில் ஊன்றியிருப்போம் நாம்; இப்படி அடிமைச்சுவடு நன்கறியப் பெற்றிருக்கிற அடியேன் என்னெஞ்சினுள்ளே வந்து சேர்ந்திருக்கிற தேவரீரை இனி வேறிடம் போகவொட்டுவேனோ? என்கிறார்.

‘போகவொட்டேன்’ என்று ஆழ்வார் சொல்லச் செய்தேயும் எம்பெருமான் போகப் புக்கமைதோன்ற நின்றானாம்; அந்த நிலைமையைக் கண்டு ‘அந்தோ!’ என்கிறாராம்.  ஐயோ! உனக்குப் பெறாப் பேறாகக் கிடைத்த இவ்வஸ்துவையும் இழக்கப் பார்க்கலாமோ? என்றவாறு.  இன்றளவும் என்விஷயத்திலே அருளைக் குறையறச் செய்துவருகின்ற நீ இன்று அருட்குறை தோன்றுமாறு அகலநினைப்பது வேண்டா வென்கை.

என் ஆருயிரே! = உன்னையோழிய ஜீவியாதபடி என் ஸத்தையை நிவஹித்துக்கொண்டு போருகிறவனே! என்றபடி.

 

English Translation

O Lord, Master of my father, and his father’s fathers four!  Having come to live in me, how now can I let you go?  O My precious soul and monarch, you gave me your grace in full.  O My father-mother-Lord, Naraiyur Lord-in-residence, O!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top