நான்காந் திருமொழி
(3264)
மண்ணை இருந்து துழாவி, வாமனன் மண் இது என்னும்,
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம் என்று கை காட்டும்,
கண்ணை உள்நீர் மல்க நின்று, கடல்வண்ணன் என்னும், அன்னே! என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே?
(3265)
பெய்வளைக் கைகளைக் கூப்பிப் பிரான்கிடக் கும்கடல் என்னும்,
செய்யதோர் ஞாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தியீ தென்னும்,
நையும்கண் ணீர்மல்க நின்று நாரணன் என்னுமன்னே,என்
தெய்வ வுருவில் சிறுமான் செய்கின்ற தொன்றறி யேனே.
(3266)
அறியும்செந் தீயைத் தழுவி அச்சுதன் என்னும்மெய் வேவாள்,
எறியும்தண் காற்றைத் தழுவி என்னுடைக் கோவிந்தன் என்னும்,
வெறிகொள் துழாய்மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே.
(3267)
ஒன்றிய திங்களைக் காட்டி ஒளிமணி வண்ணனே என்னும்
நின்றகுன்றத்தினை நோக்கி நெடுமாலே! வா என்று கூவும்,
நன்றுபெய் யும்மழை காணில் நாரணன் வந்தான் என்றாலும்,
என்றின மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத் தையே.
(3268)
கோமள வான்கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்த்தன என்னும்,
போமிள நாகத்தின் பின்போய் அவன்கிடக் கையீ தென்னும்,
ஆமள வொன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற,
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே.
(3269)
கூத்தர் குடமெடுத் தாடில் கோவிந்த னாம் எனா ஓடும்,
வாய்த்த குழலோசை கேட்கில் மாயவன் என்றுமை யாக்கும்,
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில் அவனுண்ட வெண்ணெயீ தென்னும்,
பேய்ச்சி முலைசுவைத் தாற்கென் பெண்கொடி யேறிய பித்தே.
(3270)
ஏறிய பித்தினோ டெல்லா வுலகும்கண் ணன்படைப் பென்னும்
நீறுசெவ் வேயிடக் காணில் நெடுமால் அடியார் என் றோடும்,
நாறு துழாய்மலர் காணில் நாரணன் கண்ணியீ தென்னும்,
தேறியும் தேறாது மாயோன் திறத்தன ளேயித் திருவே.
(3271)
திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்,
உருவுடை வண்ணங்கள் காணில் உலகளந் தான்என்று துள்ளும்,
கருவுடைத் தேவில்க ளெல்லாம் கடல்வண்ணன் கோயிலே என்னும்
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.
(3272)
விரும்பிப் பகைவரைக் காணில் வியலிடம் உண்டானே என்னும்,
கரும்பெரு மேகங்கள் காணில் கண்ணன் என் றேறப் பறக்கும்,
பெரும்புல ஆநிரை காணில் பிரானுளன் என்றுபின் செல்லும்,
அரும்பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின் றானே.
(3273)
அயர்க்கும்சுற் றும்பற்றி நோக்கும் அகலவே நீள் நோக்குக் கொள்ளும்,
வியர்க்கும் மழைக்கண் துளும்ப வெவ்வுயிர்க் கொள்ளும்மெய் சோரும்,
பெயர்த்தும் கண்ணா என்று பேசும், பெருமானே வாஎன்று கூவும்,
மயல்பெருங் காதலென் பேதைக் கென்செய்கேன் வல்வினை யேனே.
(3274)
வல்வினை தீர்க்கும் கண்ணனை வண்குரு கூர்ச்சட கோபன்,
சொல்வினை யால்சொன்ன பாடல் ஆயிரத் துள்ளிவை பத்தும்,
நல்வினை யென்றுகற் பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணி,
தொல்வினை தீரவெல் லாரும் தொழுதெழ வீற்றிருப் பாரே.
