(3268)
கோமள வான்கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்த்தன என்னும்,
போமிள நாகத்தின் பின்போய் அவன்கிடக் கையீ தென்னும்,
ஆமள வொன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற,
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே.
பதவுரை
| கோமளம் வான் கன்றை புல்கி |
– |
இனையபெரிய கன்றுகளைத் தழுவி(இவை) |
| கோவிந்தன் மேய்த்தன என்னும் |
– |
பசுமேய்க்க முடிசூடின கண்ணன் (இனிது உகந்து) மேய்த்தவை என்று கூறுவாள்; |
| போம் இளம் நாகத்தின் பின் போய் |
– |
இஷ்டப்படி ஓடுகின்ற இளைய நாகத்தின் பின்னே (இதுபோனவிடத்தில் அவனையும் காணலாம் என்று நினைத்துச்) சென்று |
| அவன் கிடக்கை |
– |
அவன் பள்ளிகொள்ளும் படுக்கை |
| ஈது என்னும் |
– |
இது என்று சொல்லுவாள்; |
| அரு வினையாட்டியேன் பெற்ற |
– |
(அநுபவித்து முடிக்க) அரிய பாபத்தை யுடையேனான நான்பெற்ற |
| கோமளம் வல்லியை |
– |
ம்ருதுஸ்வபாவையாய், கொடிபோன்ற இவளை |
| மாயோன் |
– |
எம்பெருமான் |
| மால் செய்து |
– |
மயக்கி |
| செய்கின்ற கூத்து |
– |
பண்ணுகிற இத்தகைய கூத்தாட்டு |
| ஆம் அளவு |
– |
எவ்வளவில் ஆகும் என்று |
| ஒன்றும் அறியேன் |
– |
ஒன்றும் அறிகிலேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இங்கு ‘ஆன் கன்றை’ என்றும் ‘வான் கன்றை’ என்றும் பிரியும். “ஆண் கன்றை என்று பாடமாகவுமாம்” என்று பன்னீராயிரத்திலுள்ளது. பசுக்களை மேய்ப்பதிற் காட்டிலும் கன்றுகளை மேய்ப்பதில் கண்ணபிரானுக்கு மிக்க ஆவலுண்டு; “திவத்திலும் பசு நிரைமேய்ப்பு உவத்தி செங்கனிவாயெங்களாயர் தேவே” என்று பசுக்கூட்டங்களை மேய்ப்பதில் வெறும் உவப்பு உள்ளதாகச் சொல்லப்பட்டது; “கன்று மேய்த்து இனிது உகந்தகாளாய்” என்று கன்றுகளை மேய்ப்பதில் இனிதுவப்பு உள்ளதாகச் சொல்லப்பட்டது. பிறர்கை பார்த்திருக்கும் அசக்தர்களை ரகூஷிப்பதிலேயே ஊக்கமுடையவன்; எம்பெருமான் என்பது உள்ளுறை பொருள்.
கண்ணபிரான் கன்றுகளை மேய்த்தர னென்பதறிந்த பராங்குச நாயகி, தெருவில் திரியும் கன்றுகளைப்பிடித்து அணைத்துக்கொண்டு ‘நம் கண்ணபிரான் மேய்த்த கன்றுதான் இவை’ என்கின்றாள். இங்கே ஈட்டு ஸ்ரீ ஸூக்தி:-“கன்றின் கழுத்தைக் கட்டிக்கொண்டவாறே அது துள்ளிப்போகா நிற்குமே; அவன் பரிகரமாயே யிருந்ததென்னும்” என்பதாம். “காற்றில் கடியனாய் ஓடி அகம்புக்கு மாற்றமுந்தாரான்” என்கிறபடியே கைக்கு எட்டாமல் ஓடுகிற தன்மை கண்ணபிரானுக்குப்போலவே கன்றுக்கும் கண்டதனால் “கோவிந்தனுடைய பரிகரமே இவை” என்று திண்ணமாகச் சொல்லுவளென்படி. கோமளவென்று இளமைக்கும் மென்மைக்கும் பெயர்; மாணிக்கத்தில் ஒருவகைக்கும் பெயர். ஆன்கன்று என்றால் -பசு ஈன்றகன்று என்றபடி. வான்கன்று என்றால்-திவ்யமான கன்று என்றபடி. கோவிந்தன்-பசுக்களையும் கன்றுகளையும் மேய்த்த பெருமேன்மைக்க முடிசூடினவன்.
(போம் இளநாகத்தின் இத்யாதி.) ஸர்ப்பம் ஓடக்கண்டால் அஞ்சாதே அதன் பின்னேயோடி ‘எம்பெருமானுடைய திருப்பள்ளி மெத்தை இது’ என்கின்றாள். “ஐந்த பைந்தலையாடரவணை மேவிப் பாற்கடல் யோகநித்திரை சிந்தைசெய்த வெந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே” என்கிறபடியே அவனுடைய சேஷசயன வைபத்தையே இடைவிடாது சிந்திப்பவராதலால் அதுவே நினைவானபடி. அவனோடே கூடித் தானும் படுக்கலாமென்ற ஆசையோடே நாகத்தின் பின்னே நடந்தாள்போலும்.
“ஆழளவு ஒன்றுமறியேன்” என்பதை உள்ளிவிடத்திலேயே அக்வயிக்கவுமாம்; ‘மாயோன் அருவினையாட்டினேன் பெற்ற கோமளவல்லியை மால் செய்து செய்கின்ற கூத்து ஆமளவொன்று மறியேன்’ என்று அந்வயிக்கவுமாம்;. முந்தினபக்ஷத்தில், கூத்தே! என்பது ‘இப்படியும் ஒரு கூத்து ஆவதே!’ என்று முடியும்.
English Translation
She hugs a tender chubby calf and says, “Govinda has grazed these!”, She goes after a young snake and says, “There goes Govinda’s Couch!”, Woe is me, -I know not where this will end, -the spell that the Lord has cast on my tender daughter!
