(3267)
ஒன்றிய திங்களைக் காட்டி ஒளிமணி வண்ணனே என்னும்
நின்றகுன்றத்தினை நோக்கி நெடுமாலே! வா என்று கூவும்,
நன்றுபெய் யும்மழை காணில் நாரணன் வந்தான் என்றாலும்,
என்றின மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத் தையே.
பதவுரை
| ஒன்றிய |
– |
(எல்லாத்தலைகளும்) பொருந்திய |
| திங்களை காட்டி |
– |
பூர்ண சந்திரனை (அருகில் நினறார்க்குக்) காட்டி |
| ஒளி மணிவண்ணனே என்னும் |
– |
ஒளியையுடைத்தான நீலமணிபோன்ற வடிவையுடையவனே! என்று கூப்பிடுகிறாள்; |
| நின்ற குன்றத்தினை நோக்கி |
– |
(அந்தச் சந்திரமண்டலத்தளவு உயர்ந்து) நிற்கிற மலையைப்பார்த்து |
|
(ஸகல உலகங்களையும் அளக்கைக்கு வளர்ந்தருளின எம்பெருமான் என்று நினைத்து) |
||
| நெடுமாலே வா என்று கூவும் |
– |
‘நெடுமாலே! வாராய்’ என்று அழைக்கின்றாள்; |
| நன்று பெய்யும் மழை காணில் |
– |
நன்றாகப்பொழியும் மேகத்தைக்கண்டால் |
| நாரணன் வந்தான் என்று |
– |
நாராயணன் வந்தான் என்று கூறி |
| ஆலும் |
– |
மேகத்தை கண்ட மயில் போலே கூத்தாடுகின்றாள்; |
| என்னுடை கோமளத்தை |
– |
மெல்லியலாளான எனது மகளுக்கு |
| என்று இன மையல்கள் |
– |
இப்படிப்பட்ட மயக்கங்களை |
| செய்தார் |
– |
பண்ணினார். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எல்லாக் கலைகளும் நிரம்பப்பெற்ற சந்திரனைச் சுட்டிக்காட்டி ‘நீலமணிவண்ணனே!’ என்று அழைக்கின்றாள். உயரநின்ற வொரு மலையைப்பார்த்து, உலகங்களை அளந்தருள்வதற்காக நிமிரவளர்ந்து நிற்கிற ஸர்வேச்வர னென்றுகொண்டு ‘என் ஆர்த்தி தீரவாராய்’ என்றழைக்கின்றாள். நன்றாகப் பெய்யும் மேகத்தைக்கண்டால் ‘நாராயணன் நம் உறாவுதல் தீர வந்தான்’ என்று, மேகத்தைக்கண்டு மயில் கூத்தாடுமாபோலே கூத்தாடுபண்ணிவிட்டாரே! என் செய்வேன்! என்கிறாள் திருத்தாய்.
ஒன்றிய என்றது ஸகலகலைகளும் பொருந்தப்பெற்ற என்றபடி. …..:-சந்த்ரமா மநஸோ ஜாத:” என்று புருஷஸூக்தத்தில் சந்திரன் எம்பெருமானுடைய திருவுள்ளத்தில் நின்று தோன்றினனாகச் சொல்லிற்று. “காரணவஸ்துவின் குணங்கள் கார்யவஸ்துவிலே ஸங்கரமிக்கும்” என்கிற நியாயப்படி காரண பூதனான எம்பெருமானுடைய குளிர்ச்சிபடியாகவே சந்திரனுக்குக் குளிர்ச்சி யுண்டாயிற்றென்று பக்தர்கள் அபிஸந்தி கொள்வதுண்டு; குளிர்ந்த சந்திரனைக் கண்டவாறே குளிர்ந்த திருவுள்ளமுடைய எம்பெருமானாகவே பாவகை செல்லுகின்றது. ஒளிமணிவண்ணனே! என்று விளியாகவுங்கொள்ளலாம்; ஏகாரத்தை விளியுருபாகச் கொள்ளாமல் பிரிநிலைப் பொருளதாக்கி ‘இவன் ஒளிமணிவண்ணனேயன்றி வேறல்லன்’ என்பதாகவுங் கொள்ளலாம்.
இரண்டாமடியில் இரண்டு நிர்வாஹங்களுண்டு: -நின்ற குன்றமொன்று தென்பட்டது; வடிவில் பெருமையைக் கண்டவாறே, ஜகத்தையெல்லாம் தன் திருவடிகளின் கீழேயிட்டுக்கொள்ளும்படி பெரிய வடிவையுடையனான த்ரிவிக்ரம பகவான் என்றெண்ணி, எழுந்தருள்வாய் என்றழைக்கின்றாள் என்பதாகப் பிள்ளானுடைய நிர்வாஹம். மலைபெயராமல் நின்று அடிக்கடி மழைபெய்யப் பெறுவதனால் அழுக்கற்றுப் பசுகு பசுகென்றிருக்குமாறு கண்டு பராங்குச நாயகி என்ன நினைத்தா ளென்னில்; எம்பெருமான் நெடுநாள் உபேகூஷித்திருந்த குற்றவாளி யாகையாலே உள்ளபடியே வந்துநிற்க வெட்கப்பட்டு, பச்சைப்போர்வையிட்டு முட்டாக்கிட்டு நிற்கிறானாகக்கொண்டு ‘சுணைகேடனே! நீ இங்ஙனே வெள்கவேணுமோ? வந்துநில்’ என்கிறாள்-என்று நஞ்சீயர் நிர்வஹிக்கும்படி. நஞ்சீயருடைய ஒன்பதினாயிரப்படி ஸ்ரீ ஸூக்திகள் காண்மின்.-“நின்றதொரு மலையைப்பார்த்து, ஸகலலோகங்களையும் அளக்கைக்கு வளர்ந்தருளின எம்பெருமானென்றே கொண்டு என்னார்த்தி தீரவராராய் என்று அழைக்கும். ஸாபராதானாகையாலே கிட்டவர அஞ்சி நிற்கிறானாகக் கொண்டு ‘உன்னுடைய ஸ்நேர்திசயம் அறியோமோ? வாராய்’ என்று க்ஷேபபூர்வமாக அழைக்கும் என்றுமாம்.”
இந்த நிர்வாஹ பேதத்திற்கு நிதானம் ஏதென்னில்; நெடுமால் என்கிற சொல்லேயாகும். மால் என்னுஞ்சொல்லுக்குப் பெருமை, வியாமோஹம் முதலிய பல பொருள்களுண்டு: பெருமையென்னும் பொருளிலே நோக்குவைத்தார் பிள்ளான்; வியாமோஹமென்னும் பொருளை நோக்கினார் நஞ்சீயர்.
நன்று பெய்யும் மழையைக்கண்டால் நாரணன் வந்தானென்று களிப்பதற்குப் பல வகையான கருத்துக்களுண்டு; “ஒக்குமம்மானுருவமென்று உள்ளங்குழைந்த நாணாளும், தொக்க மேகப் பல்குழாங்கள் காணுந்தோறும் தொலைவன் நான்” என்கிறபடியே மேகத்தைக் காணும்போதே மின்னுமாமழை தவழும் மேகவண்ணனான நாராயணனுடைய ஞாபகம் வந்தேதீரும். “தழைகளுந் தொங்கலும் ததும்பி யெங்குங் தண்ணுமை யெக்கம் மத்தளிதாழ்பீலி, குழல்களும் கீதமுமாகி யெங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டங்கண்டு, மழை கொலோ வரகினற்தென்று சொல்லி” (பெரியாழ்வார் திருமொழி 3-4-1) என்ற பாசுரப்படியும் கொள்ளலாம். “எத்தனையும் வான் வறந்த காலத்தும் பைங்கூழ்கள், மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவைபோல், மெய்த்துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டம்மா! என்சித்த மிக வுன்பாலே வைப்பனடியேனே” (பெருமாள் திருமொழி 5-7.) என்கிறபடியே அநந்யகதிகளால் எதிர்பார்க்கப் படுந்தன்மை மழைக்கும் திருமாலுக்கும் ஒக்குமாதலாலும் மழையைக்கண்டு நாரணன் வந்தானென்று ஆலுதல் அமையும்;
இன மையல்கள்-இப்படிப்பட்ட மயக்கங்கள். இன்ன என்பது ‘இன’ என்று தொக்கிக் கிடக்கிறது. என்று என்பதற்கு ‘என்றைக்கு’ என்று பொருளுரைத்தார் பன்னீராயிர வுரைகாரர்.
English Translation
She points to the radiant Moon and says, “Gem-hued Lord!, She looks at the staid mountain and calls, “Come, my Lord!”, She sees the pouring rain and dances, “Here comes Narayana!”, O, when did he cast such a spell on my tender one?
