(3269)

(3269)

கூத்தர் குடமெடுத் தாடில் கோவிந்த னாம் எனா ஓடும்,

வாய்த்த குழலோசை கேட்கில் மாயவன் என்றுமை யாக்கும்,

ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில் அவனுண்ட வெண்ணெயீ தென்னும்,

பேய்ச்சி முலைசுவைத் தாற்கென் பெண்கொடி யேறிய பித்தே.

பதவுரை

கூத்தர்

யானும் கூத்தாடுமவர்கள்
குடம் எடுத்து ஆடில்

(குடக்கூத்தாடுதலை ஸ்வபாவமாகவுடைய) க்ருஷ்ணன் ஆம் என்று கருதி (காண்கைக்கு) ஓடுவாள்;
வாய்த்த குழல் ஓசை கேட்கில்

இனிய குழலின் ஓசையைக் கேட்டாளகில்
மாயவன் என்று

க்ருஷ்ணன் என்று நினைத்து
மையாக்கும்

மோஹியா நிற்பாள்;
ஆய்ச்சியர்

இடைச்சிகள் கையிலே
வெண்ணெய்கள் காணில்

வெண்ணையைக் கண்டாளாகில்
அவன் உண்ட

அவன் அமுது செய்தருளின் வெண்ணெய் இது என்கிறாள்:
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு

பூதனுடைய முலையை ப்ராணனேர்டே சுவைத்து முடித்த கண்ணபிரானுக்கு
கொடி என்பெண்

கொடிபோன்றவளான என்னுடைய மகள்
ஏறிய

தலைமண்டையிடும்படி கொண்ட
பித்து

பிச்சு இருந்தபடி

ஆச்சரியம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஜீவனத்திற்காகக் குடக்கூத்தாடித் திரிகிறவர்களுண்டே; அவர்கள் வந்து குடங்களை வீசியெறிந்து ஆடுமதுகண்டால் குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்ல கோவாகிய கோவிந்தனே ஆடுவதாக ப்ரதிபத்திபண்ணி அதனை அருகேயிருந்து காண ஓடுகின்றாள்.  எப்படிப்பட்டவர்களையு மீடுபடுத்தவல்ல புல்லாஙகுழலின் இசைவந்து செவிப்பட்டால், கண்ணபிரானென்று சொல்லி வியாமோஹிக்கின்றாள்.  இடைச்சிகள் கொணர்ந்து விற்கும் வெண்ணையைக் கண்டால், அன்று அவன் திருவாய்ப்பாடியில் களவுகண்டு அமுதுசெய்த வெண்ணெயோடொத்த வெண்ணெய் இது என்று சொல்லா நின்றாள்; தாய் உதவாத தனிமையிலே பூதனையென்பவள் தாய்வடிவுகொண்டு வந்து நலியப்புக, அவளை முடித்துத் தன்னைச் சேமமாகத் தந்த உபகாரத்துக்குத் தோற்று இவள் பித்தேறினாளாயிற்று; இப்படியும் ஒரு விலக்ஷணமான பிச்சு உண்டோ வென்கிறாள்; திருத்தாய்.

குடமெடுத்தாடில் என்கையாலே, ஸாதாரணமான கூத்துக்களைப்பொருள் படுத்தாள்; குடக்கூத் தொன்றிலேயே யீடுபடுவாளென்பது பெறப்பட்டது.  அந்தணர்க்குச் செல்வம் விஞ்சினால் யாகம்செய்யுமாபோலே இடையர்க்குச் செல்வம் விஞ்சினால் களிப்புக்குப் போக்குவீடாகக் குடக்கூத்தாடினனாம்;  அதில் ஆழ்வார்கள் மிக ஈடுபடுவர்க்ள.  “நீரார் கமலம்போல் செங்கண்மாலென்றொருவன், பராரோர்களெல்லாம் மகிழப்பறைகறங்கச், சீரார் குடமிரண்டேந்திச் செழுந்தெருவே ஆராரெனச் சொல்லியாடுமதுகண்டு, எராரிள முலையாரன்னையரு மெல்லாரும், வாராயோ வென்றார்க்குச்ச சேன்றேனென் வல்வினையால்” என்று தொடங்கியுள்ள சிறிய திருமடற் பாசுரம் காண்க.

குடக்கூத்தாடுமது கண்டு கோவிந்தன் என்று சொல்லி ஓடினாளாம்; யாரோ வயிற்றுப்பிழைப்புக்காக ஆடித்திரிகிறார்களத்தனை; கண்ணனல்லன்’ என்று விவேகிகள் கூறினால் ‘கோவிந்தனாம்’ என்று சொல்லி ஓடினளாம். “கோவிந்தனேகிடீர்; திண்ணமாக நானறிவேன் என்றவாறு.

வாய்த்த குழலோசை இத்யாதி.  கண்ணபிரானுடைய வேணுகானச் சிறப்பு பெரியாழ்வார் திருமொழியில் நாவலம் பெரிய தீவினில் வாழும் என்கிற பதிகத்திலும்இ ஸ்ரீரங்கராஜ ஸத்வ-உத்தரசதகத்தில் “….-சைலோக்நிச் ச ஜலாம்பபூவ” இத்தியாதி ச்லோகத்திலும் பரக்கக் காணத்தக்கது.

மாயவென்று = ‘மாயவனான கண்ணன் ஊதுகிற குழலின் ஓசையென்று’ என்று பொருள் கொள்வது தவிர ‘மாயவனான கண்ணனேயென்று’ என்கிற பொருளும் கொள்ளத் தகும்.  கீழே புகழுநல்லொருவனில் ‘நுடங்கு கேள்வியிசை யென்கோ” என்றருளிச் செய்திருக்கையாலே எம்பெருமான்றன்னையே ‘நுடங்கு கேள்வியிசை யென்கோ” என்றருளிச் செய்திருக்கையாலே எம்பெருமான்றன்னையே ஸங்கீதமாகக் கொள்ளுகிற புடையுமுண்டிறே; குழலோசையை எம்பெருமானாகவே பிரதிபத்தி பண்ணா நின்றாளென்றபடி.  கண்ணனுடைய குழலோசையாக நினைத்து மோஹிக்கின்றாளென்ற பொருளில் மாயவன் என்ற சொற்சுவையில் நோக்கமாக நம்பிள்ளை அருளிச்செய்யும் அர்த்தம் மிக அழகியது; அதாவது-சில கோபிமார்களுடனே கலந்து பிரிந்தால்  அத்தலையில் பிரணய ரோஷம் தலையெடுத்திருக்கும்;  மீண்டும் அவர்களோடு கலக்க நினைக்கும்போது அந்த ஊடலை ஆற்றவேண்டிச் சில தாழ்ந்த சொற்களைக் குழலிலேயிட்டுப் பாடிக்கொண்டே செல்வனாம்; ‘பகலெல்லாம் பசுக்களின் பின்னே போனேன்; தாய் தந்தையர்க்குப் பரதந்திரனாயிருந்தேன்; பிரிந்தேன்; தரிக்கமாட்டிற்றிலேன்; ஒரு பகல் ஆயிர மூழியாய்ச்செல்லா நின்றது, என்றிங்ஙனே பாசுரங்களை உள்ளே யிசைத்துப் பாடுவதுண்டு; அது தோன்ற மாயவன் என்றதாக.

மையாத்தல்-மோஹித்தல்.

“ஆய்ச்சியர் வெண்ணெய்” என்ற விடத்து, பிராமண ஸ்த்ரீகள் கடைந்து திரட்டிய வெண்ணெய்கண்டால் ஒன்றும் பேசாள்; இடைச்சிகள் கையில் முடை நாற்றம் பெற்ற வெண்ணெய் கண்டால்-என்று இன்சுவைப் பொருளுரைப்பர் நம்பிள்ளை.

அவனுண்ட வெண்ணெய் ஈதென்னும் -கண்ணபிரான் அக்காலத்து அமுதுசெய்த வெண்ணெய் இப்போது காணமுடியாதாதலால், அவனுண்ட வெண்ணெயோடு ஸஜாதீயமான வெண்ணெய் என்றபடி.

முன்னடிகளில் கோவிந்தன், மாயவன் என்ற திருநாமங்களைச் சொன்னதுபோலே இங்கும் (மூன்றாமடியிலும்) ஒரு திருநாமம் சொல்லாமாயிருக்க அது சொல்லாது அவன் என்றது-வெண்ணெயுண்ண அவன் பட்டபாடுகளை யெல்லாம் உளப்படுத்தியவாறு. “வாரார் வனமுலையாள் மத்தாரப் பற்றிக்கொண்டு ஏராரிடைநோவ எத்தனையோர் போதுமாய்;, சீரார் தயிர்கடைந்து வெண்ணெய் திரண்டதனை,  வேரார்நுதல் மடவாள் வேறோர் கலத்திட்டுஇ நாரரருறி யேற்றி நன்கமைய வைத்தனைப், போரார் வேற்கண் மடவாள் போந்தனையும் பொய்யுறக்கம், ஓராதவன் போலுறங்கியறிவுற்றத், தாரார் தடந்தோள்களுள்ளளவும் கைநீட்டி, ஆராத வெண்ணெய் விழுங்கி” (சிறிய திருமடல்) இத்யாதி.

ஈற்றடிக்கு நம்பிள்ளையீடு;-“இவள் இப்படிக் கலங்குகைக்கு நிதாநமென்னென்னில்; (பேய்ச்சி முலை சுவைத்தாற்கு.) அவன் முன்பே யொரு உபகாரத்தைப் பண்ணிவைத்தான்; அதிலே தோற்றவன்று தொடங்கி இவள் பிச்சேறத் தொடங்கினாள்; தாயுங்கூட உதவாதஸமயத்திலே பூதனைவ்நது முலைகொடுக்க, அவ்வளவிலே உணர்த்தியுண்டாய் அவளை முடித்தும் தன்னை நோக்கித்தானே; அவ்வுபகாரத்திலே தோற்று அன்று தொடங்கி இவள் பிச்சேறினாள்.  –பூத்தருபுணர்ச்சி, புனல்தரு புணர்ச்சி, களிறுதரு புணர்ச்சி என்றிவை புணர்ச்சிக்கு ஹேது.  அதாவது-எட்டாத கொம்பிலே நின்றதொரு பூவை ஆசைப்பட்டால் இவன் தன்னைப் பேணாதே இவளாசையை முடித்துக்கொடுக்க ‘இவன் தன்னைப் பேணாதே நம் நினைவை முடித்தானே’ என்று அதுக்காகத் தன்னைக்கொடுக்கை பூத்தரு புணர்ச்சி.  ஆற்றிலே அழுந்துகிறவனைத் தான் புக்கேறவிட, அதற்காகத் தன்னைக் கொடுக்கை புனல்தரு புணர்ச்சி.  அசிந்திதமாக ஆனையின் கையிலே அகப்பட்டவளை மீட்டுக்கொடுக்க, அதுக்காகத் தன்னைக் கொடுக்கை களிறுதரு புணர்ச்சி.  இவை யொன்றுமல்ல; அவன் தன்னை நோக்கினதுக்கு இவள் தன்னையெழுதிக்கொடுக்கிறாள்.”

English Translation

Seeing an acrobat dance on a pot, she runs to him saying, “This is Govinda all right!”, Hearing a stray flute melody, she runs out says, “Here comes Govinda!” Seeing the tempting butter of a milkmaid she says, “Aho, the butter he ate!”, Such is her madness for the Lord who drank putana’s breasts

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top