மூன்றாந் திருமொழி
(3253)
கோவை வாயாள் பொருட்டேற்றின் எருத்தம் இறுத்தாய், மதிளிலங்கைக்
கோவை வீயச் சிலைகுனித்தாய்! குலநல் யானை மருப்பொசித்தாய்,
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கே னேலும்,நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்தென் னெஞ்சமே.
(3254)
பூசும் சாந்தென் னெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய,
வாச கம்செய் மாலையே வான்பட் டாடை யுமஃதே,
தேச மான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே,
ஈசன் ஞால முண்டுமிழ்ந்த எந்தை யேக மூர்த்திக்கே.
(3255)
ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பலமூர்த்தி
ஆகி, ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி,
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாரா யணனே,உன்
ஆகம் முற்றும் அகத்தடக்கி ஆவி யல்லல் மாய்த்ததே.
(3256)
மாய்த்தல் எண்ணி வாய்முலை தந்த மாயப் பேயுயிர்
மாய்த்த, ஆய மாயனே. வாமனனே மாதவா,
பூத்தண் மாலை கொண்டுன்னைப் போதால் வணங்கே னேலும்,நின்
பூத்தண் மாலை நெடுமுடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே.
(3257)
கண்ணி யெனதுயிர் காதல் கனகச் சோதி முடிமுதலா,
எண்ணில் பல்க லன்களும் ஏலு மாடை யுமஃதே,
நண்ணி மூவு லகும்நவிற்றும் கீர்த்தி யுமஃதே,
கண்ண னெம்பி ரானெம்மான் கால சக்கரத் தானுக்கே.
(3258)
கால சக்க ரத்தோடு வெண்சங் கம்கை யேந்தினாய்,
ஞால முற்று முண்டுமிழ்ந்த நாரா யணனே என்றென்று,
ஓல மிட்டு நானழைத்தால் ஒன்றும் வாரா யாகிலும்,
கோல மாமென் சென்னிக்குன் கமலம் அன்ன குரைகழலே.
(3259)
குரைக ழல்கள் நீட்டிமண் கொண்ட கோல வாமனா,
குரைக ழல்கை கூப்புவார்கள் கூடநின்ற மாயனே,
விரைகொள் பூவும் நீரும்கொண்டேத்த மாட்டே னேலும்,உன்
உரைகொள் சோதித் திருவுருவம் என்ன தாவி மேலதே.
(3260)
என்ன தாவி மேலையாய் ஏர்கொள் ஏழு லகமும்,
துன்னி முற்று மாகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்,
உன்ன தென்ன தாவியும் என்ன துன்ன தாவியும்
இன்ன வண்ண மேநின்றாய் என்று ரைக்க வல்லேனே?
(3261)
உரைக்க வல்லேன் அல்லேனுன் உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன்நான்? காதல் மையல் ஏறினேன்,
புரைப்பி லாத பரம்பரனே. பொய்யி லாத பரஞ்சுடரே,
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன்.
(3262)
யானும் ஏத்தி ஏழுலகும் முற்றும் ஏத்தி, பின்னையும்
தானும் ஏத்தி லும்தன்னை ஏத்த ஏத்த எங்கெய்தும்,
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்திப்ப,
யானு மெம்பி ரானையே ஏத்தி னேன்யா னுய்வானே.
(3263)
உய்வு பாயம் மற்றின்மை தேறிக் கண்ணன் ஒண்கழல்கள்மேல்
செய்ய தாம ரைப்பழனத் தென்னன் குருகூர்ச் சடகோபன்,
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்,
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.
