(3257)

(3257)

கண்ணி யெனதுயிர் காதல் கனகச் சோதி முடிமுதலா,

எண்ணில் பல்க லன்களும் ஏலு மாடை யுமஃதே,

நண்ணி மூவு லகும்நவிற்றும் கீர்த்தி யுமஃதே,

கண்ண னெம்பி ரானெம்மான் கால சக்கரத் தானுக்கே.

 

பதவுரை

காலம் சக்கரத்தான்

காலத்தை நடத்துகிற திரு வாழியையுடையனாய்

எம்மான்

எனக்கு ஸ்வாமியாய்

எம் பிரான்

எனக்கு மஹோபநாரகனான

கண்ணனுக்கு

ஸ்ரீ க்ருஷ்ணபகவானுக்கு

எனது உயிர்

என் ஆத்மவஸ்து

கண்ணி

மாலை போல் போக்யமாகா நின்றது;

காதல்

எனது ஆசையானது

கனகம் சோதி முடி முதல் ஆ

பொன்மயமாய் ஒளியையுடைத்தான திருவபிஷேகம் முதலாக

எண்  இல் பல் கலன்களும்

கணக்கற்ற பல திருவாபரணங்களாக ஆகா நின்றது;

எலும் ஆடையும்

ஏற்றதான பீதாம்பரமும்

அஃதே

அந்தக் காதலேயாம்;

மூ உலகும்

மூவுலகங்களும்

நண்ணி

கிட்டி

நவிற்றும்

துதிக்கின்ற

கீர்த்தியும்

புகழும்

அஃதே

அந்தக காதலேயாம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தம்முடைய உயிரையும் காதலையும் எம்பெருமான் போரப்பொலிய அபிமானித்தபடியைப் பேசுகிறார்.  எனது உயிர் கண்ணி-என்னுடையதாக அபிமானித்திருக்கிற உயிரை எம்பெருமான் தனக்கு மாலையாகக் கொண்டானென்கை.  இங்கே ஈடு-“மார்வத்து மாலை என்கின்றவளைத் தனக்கு மாலையாகக்கொள்ளுகை ப்ராப்தம்: அதொழிய என்ஸத்தையைக்கிடீர் தனக்கு மாலையாகக்கொள்ளுகிறது” என்பதாம்.  மாலையணிந்து கொண்டால் என்ன ஆனந்தமுண்டாகுமோ அந்த ஆனந்தம் என்ஸத்தையினால் எம்பெருமானுக்கு உண்டாகிறது என்றபடி.

கனகச்சோதி முடிமுதலா எண்ணில் பல் கலன்களும் எனது காதல்  ஸூவர்ணமயமாய் ஒளிமிக்க கிரிடம் முதலாகிய எண்ணிறந்த பல திருவாபரணங்களும் என்னுடைய காதல் என்றபடி.  அதாவது இவருடைய காதலுக்குத் தான் இலக்காகப் பெற்றதுண்டே அது தன்னையே தனக்குப் பல திருவாபரணங்கள் சாத்தினதாக அவன் திருவுள்ளம்பற்றியிருக்கிறபடி.

ஏலுமாடையும் அஃதே  அந்தக் காதலையே பீதாம்பர மணிந்ததாகவும் எம்பெருமான் அபிமானிக்கிறானென்கை.  ஆடைக்கு ஏலும் என்று விசேஷணமிட்டது, எம்பெருமான் றனக்கும் பீதாம்பரத்திலே மிக்க விருப்பமுடைமையைக் காட்டும்.  தான் உகந்து ஏற்றுக்கொள்ளுகிற என்றபடி. இவ்விடத்து ஈட்டில் ஒரு ஐதிஹ்யமுண்டு; அதாவது-“ஒருநாள் ஸ்ரீவைஷ்ணவ வண்ணாத்தான் திருப்பரிவட்டங்களை அழகியதாக வாட்டிக் கொண்டு வந்து (ஸலவைசெய்து கொண்டுவந்து) எம்பெருமானார்க்குக் காட்ட, அவரும் பரமத்ருப்தியடைந்து அவனைப் பெருமாள் திருவடிகளிலே கொண்டு புக்கு ‘இவன் வெகு மநோஹரமாகத் திருப்பரிவட்டம் திருத்திக்கொண்டு வந்திருக்கிற படியைத் திருக்கண் சாத்தியருள வேணும்’ என்று சொல்லித் திருப்பரிவட்டங்களைக் காட்டியருள, பெருமாளும் கண்டு உகந்தருளி உடையவரைநோக்கி ‘வாரீர்! இவனுக்காகஇ முன்பு ரஜகன் நம்திறத்தில் செய்த குற்றம் பொறுத்தோம்’ என்று திருவாய்மலர்ந்தருளினார்” என்று-வண்ணான் முன்புசெய்த குற்றமாவது-கண்ணபிரானும் பலராமனும் அக்ரூரரால் அழைக்கப்பட்டு மதுரைக்கு எழுந்தருளினபோது அவ்வூரிலுள்ள ராஜவீதியன் கம்ஸனுடைய வண்ணான் துணிமூட்டைகளைச் சுமந்துகொண்டுவர, இவ்விருவரும் அவனிடத்தில் வஸ்த்ரம் விரும்ப, அவன் கொடாதொழிந்தது.

மூவுலகும் நண்ணி நவிற்றும் கீர்த்தியும் அஃதே-தம்முடைய காதலையே நம்பெருமான், மூவுலகிலுள்ளாரும் தன்னைக் குறித்துப் பண்ணுகிற ஸ்துதியாகத் திருவுள்ளம் பற்றினென்க.  ஆழ்வாரொருவர் கடல்புரைய விளைந்த காதலோடு எம்பெருமானைத் துதிப்பதானது மூவுலகும் ஒன்றுசேர்ந்து துதித்தாப்போலுள்ளது என்றவாறு.

இதெல்லாம் யாருக்கென்னில், கண்ணனெம்பிரானெம்மான் காலசக்கரத்தானுக்கே-கையும் திருவாழியுமான அழகைக்காட்டி என்னை யீடுபடுத்திக் கொண்ட பெருமானுக்கு என்றபடி. காலசக்கரத்தான்-காலத்தை நடத்துகிற திருவாழியையுடையவன் என்கை.  பாரதப்போரில் பகலை யிரவாக்கின்மை நினைக்கத்தக்கது. காலசக்கரத்தை நிச்வஹிப்பவனான எம்பெருமான் என்றும் பொருள் கூறலாம்; கீழ்த் திருவாய்மொழியில் இவர் விரும்பினபடி காலோ பாதியைக் கழித்துப் பூர்ணாநுபவம் பண்ணுவித்ததற் கிணங்க இங்ஙனேயருளிச் செய்தபடியாகலாம்.

 

English Translation

For Krishna, my Lord, who bears the wheel of time, my life is the perfect garland, my love his radiant crown.  His countless jewels and his vestments are also my love.  Even the praise the three worlds sing is my love

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top