(3263)

(3263)

உய்வு பாயம் மற்றின்மை தேறிக் கண்ணன் ஒண்கழல்கள்மேல்

செய்ய தாம ரைப்பழனத் தென்னன் குருகூர்ச் சடகோபன்,

பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்,

வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.

பதவுரை

மற்று

வேறு வழியினால்
உய்வு உபாயம் இன்மை

தரிக்கவிரகில்லாமையை
தேறி

துணிந்து
கண்ணன்

எம்பெருமானுடைய
ஓண் கழல்கள் மேல்

அழகிய திருவடிகள் விஷயமாக,
செய்ய தாமரை பழனம்

செந்தாமரைகள் நிறைந்த நீர்நிலங்களையுடைய
தென் நன் குருகூர்

தென் திசையிலுள்ள அழகிய திருக்குருகூர்க்குத் தலைவரான
சடகோபன்

ஆழ்வார் (அருளிச் செய்ததான)
பொய் இல் பாடல் ஆயிரத்துள்

யதார்த்தம் பொருந்திய ஆயிரத்தினுள்ளும்
இவை பத்தும்

இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லார்கள்

ஓதவல்லவர்கள்
வையம்

இப்பூமண்டலத்திலே
மன்னி வீற்றிருந்து

நெடுங்காலம் பொருந்தியிருந்து
மண்ணுர்டே

இந்நிலத்திலேயே
விண்ணும் ஆள்வர்

பரம பதத்தையும் ஆளப் பெறுவர்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருவாய் மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது இப்பாட்டு.  இத்திருவாய் மொழியை ஓதுமவர்கள் உபய விபூதியையும் தாம் இட்ட வழக்காக நிர்வஹிக்கப் பெறுவர்களென்கிறார்.

இத்திருவாய்மொழியினால எம்பெருமானுடைய ப்ரணயித்வகுணத்தைப் பேசப் புகுந்தது, பேசித் தலைக்கட்டலாமென்கிற எண்ணத்தினாலன்று; இங்ஙனே பேசினாலல்லது வேறொன்றாலே தரிக்க வொண்ணாமையாலே பேசிற்றென்பதை வெளியிடுகிறார் உய்வுபாயம் மற்றின்மைதேறி யென்பதனால்.

பொய்யில் பாடலாயிரம்-வால்மீகிபகவானுக்குத் காட்சிதந்த நான்முகக் கடவுள் “***”  நதே வாகந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி, குரு ராமக தாம் புண்யாம் ச்லோகபத்தாம் மனோரமாம்”  அருளிச் செய்ததனால் ஸ்ரீராமாயணம் பொய்யில் பாடலாக அமைந்ததாயிற்று.  “வேதநூல் ஓதுகின்றதுண்மையல்லதில்லை மற்றுரைக்கிலே” (திருச்சந்தவிருத்தம்) என்று வடமொழிவேதத்திற்குச் சொல்லப்பட்ட ஸத்யவாதித்வம் தமிழ்வேதத்திற்கும் குறையற்றதென்க.

வையம்மன்னி வீற்றிருந்து மண்ணுர்டே விண்ணுமாள்வர்-“பூமியிலே எம்பெருமானாரைப்போலே ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயோடே நெடுங்காலமிருந்து இங்கே யிருக்கச்செய்தே பரமபதம் தங்கள் சிறுமுறிப்படி செல்லும்படி ஆள்வர்கள்; அங்கேபோனால் ‘ஆண்மின்கள் வானகம் ஆழியான்தமர்’ என்கையன்றிக்கே இங்கேயிருக்கச்செய்தே தாங்களிட்ட வழக்காகப்பெறுவர்.” என்பது நம்பிள்ளையீடு.

நஞ்சீயர் பட்டர் திருவடிகளில் ஆச்ரயித்தபின்பு நெடுங்காலம் பட்டர்பாடே அர்த்த விசேஷங்கள் கேட்டு இன்புறவேணுமென்று இருந்தார்இ இருக்கையில் பட்டர் திருநாட்டுக்கெழுந்தருள நேர்ந்துவிட்டது; இந்த வருத்தத்தினால் நஞ்சீயர் “வையம்மன்னி வீற்றிருந்து” என்ற இவ்விடத்தை அருளிச்செய்யும்போது உருத்தோறும் வெகுநிர்வேதப்படுவராம்.

பட்டர் இருபத்தெட்டு (அல்லது 32) பிராயத்திலே திருநாட்டுக்கெழுந்தருளினாரென்று சிலர்கூறுவதுண்டு.  இதற்குப் போதுமான பிராமணம் கிடைத்திலது; ஆராய்ந்து பார்க்குமளவில்; பட்டர் ஐம்பது ஐம்பத்தைந்து பிராயம் எழுந்தருளியிருந்தார் என்று சொல்வதற்குச் சான்றுகள் உள்ளன.  நூற்றிருபது திருநக்ஷத்திரம் எழுந்தருளியிருந்த எம்பெருமானாரை நோக்குமிடத்து பட்டர் எழுந்தருளியிருந்தது மிகவும் ஸ்வல்பகாலம் என்று சொல்லலாம்படியுள்ளது.

English Translation

This decad of the faultless thousand songs by Satakopan of kurugur with lotus fields is addressed to the feet of Krishna, sole refuge. Those who can sing it will rejoice here and rule over Heaven

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top