(3258)

(3258)

கால சக்க ரத்தோடு வெண்சங் கம்கை யேந்தினாய்,

ஞால முற்று முண்டுமிழ்ந்த நாரா யணனே என்றென்று,

ஓல மிட்டு நானழைத்தால் ஒன்றும் வாரா யாகிலும்,

கோல மாமென் சென்னிக்குன் கமலம் அன்ன குரைகழலே.

 

பதவுரை

காலன் சக்கரத்தொடு

(பகைவரையழிப்பதில்) யமன் போன்ற திருவாழியோடுகூட

வெண் சங்கு

வெளுத்த சங்கத்தை

அம் கை

அழகிய திருக்கையிலே

ஏந்தினாய்

தரித்திருப்பவனே!

ஞாலம் முற்றும்

உலகமுழுவதையும்

உண்டு உமிழ்ந்த

ஒருகால் விழுங்கி மற்றொரு கால் வெளிப்படுத்தின

நாராயணனே

நாராயணா!

என்று என்று

பலகால் சொல்லி

ஓலம் இட்டு

கூப்பிட்டு

நான் அழைத்தால்

நான் அழைக்க

ஒன்றும் வாராய் ஆகிலும்

நீ சிறிதும் வந்தருளாமற் போனாலும்

உன்

உன்னுடைய

கமலம் அன்ன

தாமரை மலர்போன்ற

குரை கழல்

ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்த திருவடிகள்

என் சென்னிக்கு

எனது தலைக்கு

கோலும் ஆம்

அலங்காரமாகநின்றது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாசுரங்களில் எம்பெருமானுடைய ப்ரணயித்வம்; சொல்லிற்று; இப்பாசுரத்தில் தம்முடைய ப்ரணயித்வம் சொல்லுகிறது. காலன் என்று யமனுக்குப் பேராதலால், எதிரிகளுக்கு யமன் போன்றதான சக்கரம் என்று பொருளாகலாம்.  திருவாழி திருச்சங்குகளைக் கையிலேந்தினவனே! என்றும், பிரளயாபத்திலே உலகங்களையெல்லாம் திருவயிற்றிலே வைத்து ரகூஷித்துப் பிறகு வெளிப்படுத்தினவனே! என்றும், நாராயணனே! என்றும் இப்படிப் பலவற்றையுஞ் சொல்லிப் பெருமிடறு செய்து நான் அழைக்கச்செய்தே, நீ இங்கு விரைந்து ஓடிவர வேண்டியிருந்தும் வாராதிருந்தாயாகிலும் என் தலைக்கு ஆபரணமாவது உன் திருவடிகளே யென்கிறார்.

எம்பெருமான் இவர் பக்கலிலே வந்து சேர்ந்தாலன்றோ அவனுடைய திருவடிகள் இவரது சென்னிக்கு ஆபரணமாகும்; அவன் வாராதேயிருந்தால் அவன் திருவடிகள் இவரது சென்னிக்கு எங்ஙனே கோலமாகும்?  என்று கேள்வி பிறக்கும்; இதற்கு ஸமாதானமான ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்:-“வாராயாகிலும் கோலமாம் என்பானென்னென்னில்; வாராதொழியக்கூடாது; கூடாதது கூடிலும் என்னினைவு இதுவென்கிறார்.  என்னை அடியிலே இப்படி ஆக்கினாயேயென்று கருத்து.”

உன் திருவடிகளிலே எனக்கு ப்ரேமம் ஸத்தாப்ரயுக்தமென்பது பரம தாத்பர்யம்.

 

English Translation

O Narayana, you swallowed the Universe, then made if, I cry and call out, “O Bearer of the wheel-of-time and the white conch!” Even if nothing happens by it, your tinkling lotus-feet become my head’s ornaments

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top