(3539)
நீராய் நிலனாய் தீயாய்க் காலாய் நெடுவானாய்,
சீரார் சுடர்க்க ளிரண்டாய்ச் சிவனாய் அயனாய்,
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய், ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.
(3540)
மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி,
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே,
நண்ணி யுனைநான் கண்டு கந்து கூத்தாட,
நண்ணி யொருநாள் ஞாலத் தூடே நடவாயே.
(3541)
ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்,
சாலப் பலநாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே,
கோலத் திருமா மகளோ டுன்னைக் கூடாதே,
சாலப் பலநாள் அடியேன் இன்னம் தளர்வேனோ?
(3542)
தளர்ந்தும் முறிந்தும் சகட வசுரர் உடல்வேறா,
பிளந்து வீயத் திருக்கா லாண்ட பெருமானே,
கிளர்ந்து பிரமன் சிவனிந் திரன்விண் ணவர்சூழ,
விளங்க வொருநாள் காண வாராய் விண்மீதே.
(3543)
விண்மீதிருப்பாய் மலைமேல் நிற்பாய். கடல்சேர்ப்பாய்!
மண்மீதுழல்வாய் இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்!
எண்மீதியன்ற புறவண்டத்தாய் எனதாவி,
உண்மீதாடி உருக்காட்டாதே யொளிப்பாயோ?
(3544)
பாயோர் அடிவைத் ததன்கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாய்,ஓர் அடியாய் எல்லா வுலகும் தடவந்த
மாயோன், உன்னைக் காண்பான் வருந்தி யெனைநாளும்,
தீயோடுடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?
(3545)
உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய்,
உலகுக்கேகேயோ ருயிரு மானாய்! புறவண்டத்து,
அலகில் பெலிந்த திசைபத் தாய அருவேயோ!
அலகில் பொலிந்த அறிவி லேனுக் கருளாயே.
(3546)
அறிவி லேனுக் கருளாய் அறிவா ருயிரானாய்!
வெறிகொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
கிறிசெய் தென்னைப் புறதிட் டின்னம் கெடுப்பாயோ,
பிறிதொன் றறியாவடியே னாவி திகைக்கவே?
(3547)
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்,
பாவி யேனைப் பலநீ காட்டிப் படுப்பாயோ,
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே,
கூவிக் கொள்ளும் கால மின்னம் குறுகாதோ?
(3548)
குறுகா நீளா இறுதி கூடா எனையூழி,
சிறுகா பெருகா அளவிலின்பம் சேர்ந்தாலும்,
மறுகா லின்றி மாயோ னுனக்கே யாளாகும்,
சிறுகா லத்தை யுறுமோ அந்தோ தெரியிலே?
(3549)
தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திருமாலுக்கு,
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்,
தெரியச் சொன்ன ஓரா யிரத்து ளிப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.
