(3546)

(3546)

அறிவி லேனுக் கருளாய் அறிவா ருயிரானாய்!

வெறிகொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!

கிறிசெய் தென்னைப் புறதிட் டின்னம் கெடுப்பாயோ,

பிறிதொன் றறியாவடியே னாவி திகைக்கவே?

 

பதவுரை

அறிவார் உயிர் ஆனாய்

ஞானிகளை ஆத்மாவாக வுடையவனே!

வெறி கொள் சோதி மூர்த்தி

ஸுகந்தமயமாய் தேஜோமயமாயிருந்துள்ள திவ்யமங்கள விக்ரஹத்தையுடையவனே!

அடியேன் நெடுமாலே

அடியேனிடத்தில் அளவுகடந்த வியாமோஹமுடையவனே!

அறிவு இலேனுக்கு அருளாய்

அறிவிலியான என் விஷயத்திலே அருள் செய்ய வேணும்.

பிறிது ஒன்று அறியா அடியேன் ஆவி திகைக்க

வேறொரு புகலறியாத அடியேனுடைய நெஞ்சு கலங்கும்படியாக

கிறி செய்து

ஏதோ சூதுபண்ணி

என்னை புறத்து இட்டு

என்னைப் புறம்புண்டான பற்றுக்களிலே அகப்படுத்தி

இன்னம் கெடுப்பாயோ

இன்னமும் கெடுக்க நினைக்கிறாயோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (அறிவிலேனுக்கு) கீழ்ப்பாட்டில் “அறிவிலேனுக்கருளாயே“ என்றவாறே எம்பெருமான் அருள் செய்து கொண்டு வந்து நிற்கவேணுமே, அப்படி நிற்கக்கண்டிலர் ஆழ்வார், பிரானே! உன் திருவடிகளல்லது மற்றொரு உபாயமும் உபேயமுமில்லை யென்று கொண்டிருக்கிற இந்த அத்யவஸாயமுங்கூடக் கலங்கும்படி உன்னைக்காட்டாதே என்னை வஞ்சித்து சப்தாதிவிஷயங்களைக்காட்டி என்னை இன்னமுங்கெடுக்கவோ பார்த்தருளிற்று? என்கிறார்.

“தனமில்லாதவெனக்கு அருளாய்“ என்று சொன்னால் தனத்தையருளவேணுமென்று பொருள்படுவதுபோல “அறிவிலேனுக்கு அருளாய்“ என்றால் அறிவையருளவேணும் என்று பொருள்படும், ஆழ்வார்க்கு இப்போது புதிதாக அறிவை அருளவேணுமோ? முதலடியிலேயே மயர்வற மதிநலமருளினன் என்னும்படி பரிபூர்ணமான அறிவை அருளியாயிற்றே யென்னில், ஆம், இப்போது புதிதாக அறிவையருளச் சொல்லுகிறரல்லர், கொடுத்தவறிவு குலையாதபடி நோக்கியருளவெணுமென்கிறார். உன் திருமேனியை எனக்கு பரம கிருபையினாலே காட்டாதொழிந்தால் “உன் திருவடிகளே உபாயோபேயம்“ என்று நான் கொண்டிருக்கிற அறிவு குலைந்திருமோ என்றஞ்சுகிறேன், அது குலையாதபடி காத்தருளவேணுமென்கிறார் காண்மின்.

அறிவாருயிரானாய்! இதற்கு இரண்டுபடியாக நிர்வஹிப்பர், ஞானிகளுக்கு உயிரானவனே! என்னுதல்,ஞானிகளை உயிராகவுடையவனே! என்னுதல். ஆசார்யஹ்ருதயத்தில் “என்னதுன்னதாவியிலே அறிவாராத்மாவென்று அவன் மதம் தோன்றும்“ என்றருளிச்செய்தபடி ஞானிகள் உயிராகவுடையவனே யென்கிற நிர்வாஹமே முக்கியமாகும். அவன்தானே கீதையில் ஜ்ஞாநீது ஆத்மைவ மே மதம் என்றருளிச்செய்து வைக்கையாலே “ஜ்ஞாநியானவன் எனக்கு உயிராகவே என்னுடைய மதம்“ என்ற அவனது திருவுள்ளத்திற்குச் சேர்ந்த பொருள் இதுவே.

வெறிகொள் சோதிமூர்த்தி – நீ அருளா தொழிந்தாலும் விடவொண்ணாதபடி யன்றோ உன்றன் வடிவழகிருப்பது, வெறி என்ற பரிமளம், •••••••••••••••••  உபநிஷத்து ஒதின்படியே பரிமளமே வடிவெடுத்ததாய் சோதிமயமான திருமேனியையுடையவனே! என்றபடி. அடியேன் நெடுமாலே! இப்போது எனக்கு எட்டாதிருக்கிறவனே! (அல்லது) வடிவைக்காட்டி எனக்கு வியாமோஹத்தை விளைத்தவனே! என்றதாகவுமாம். பிராட்டியை அசோகவனத்திலே வைத்தாப்போலே, உன்னுடைய குணங்கள் நடையாடாதே சப்தாதிவிஷயங்கள் நடையாடுகிற ஸம்ஸாரத்திலே பொகட்டு இன்னமுங் கெடுக்கவேணுமென்று திருவுள்ளமோ? முன்பிழந்தது போராதோ? அநந்யதியாய் அநந்யபரனாயிருக்கிற வென்னுடைய மநஸ்ஸு கலங்கும்படி இப்படி செய்தருளவேண்டா என்றாராயிற்று.

 

English Translation

O Soul of the mortals, pray grace this ignorant self.  My fragrant icon-Lord of infinite radiance! Will you still keep away and kill me with your tricks?  Alas, knowing nothing else.  My soul is afflicted!

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top