(3543)

(3543)

விண்மீதிருப்பாய் மலைமேல் நிற்பாய். கடல்சேர்ப்பாய்!

மண்மீதுழல்வாய் இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்!

எண்மீதியன்ற புறவண்டத்தாய் எனதாவி,

உண்மீதாடி உருக்காட்டாதே யொளிப்பாயோ?

 

பதவுரை

விண் மீது இருப்பாய்

பரமபதத்தில் வீற்றிருப்பவனே!

மலை மேல் நிற்பாய்

(அர்ச்சாரூபியாய்) திருமலையிலே நிற்குமவனே!

கடல் சேர்ப்பாய்

திருப்பாற்கடலிலே கண் வளர்ந்தருளுமவனே!

மண் மீது உழல்வாய்

(ராமக்ருஷ்ணாதி விபவரூபத்தாலே அவதரித்து) பூமியின்மேல் ஸஞ்சரிப்பவனே!

இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்

இந்த ஜகத்தில் ஸகலபதார்த்தங்களிலும் அந்தர்யாமியாய் மறைந்து வர்த்திப்பவனே!

எண் மீது இயன்ற புறம் அண்டத்தாய்

எண்ணிக்கைக்கு மேலே போகக் கடவதான (எண்ணிறந்த) பஹிரண்டங்களிலு முளனானவனே! (நீ)

எனது ஆவியுள்

என்னுடைய நெஞ்சுக்குள்ளே

மீதாடி

மிகவும் நடையாடி விட்டு

உரு காட்டாதே

வடிவைக் கண்ணுக்காட்டாமல்

ஒளிப்பாயோ

ஒளிக்கின்றாயே! இது தகுதியோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (விண்மீதிருப்பாய்) பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சாவதாரமென்கிற ஐந்து ப்ரகாரங்களைக் கொண்டு அடியார்களை உகப்பித்தருளாநின்ற நீ எனது நெஞ்சிலும் எழுந்தருளியிருந்து வைத்து என் கண்ணுக்குத் தோற்றாதேயிருந்தால் தளரமாட்டேனோ வென்கிறார்.

****வைகுண்ட து பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி, ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ * என்கிறபடியே பரமபதத்திலே * ஒண்டொடியாள் திருமகளும் தானுமாய் நித்யமுக்தர் ஸேவிக்க ஒலக்கமிருக்கிறபடியை விண்மீதிருப்பாய் என்றார், பாற்கடல் யோகநித்திரை செய்து சேதநரக்ஷணோபாயங்களைச் சிந்திக்கும் வியூஹ நிலைமையைக் கடல்சேர்ப்பாய் என்றார். துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலநார்த்தமாக ஸ்ரீ ராமக்ருஷ்ணாதி விபவாவதார ரூபேண வந்தவதரித்துக் கண் காண நின்று ஞாலத்தூடே நடந்தபடியே மண்மீதுழல்வாய் என்றார். வ்யாப்யபதார்த்தங்களுக்குத் தெரியாதபடி அந்தர்யாமியாருக்கும்படியை இவற்றுளெங்கும் மறைந்துறைவாய் என்றார். விபவாவதாரங்களில் விரோதி நிரஸக ச்ரமமாறப் பரம போக்யங்களான ஆராமஞ் சூழ்ந்த கோயில் திருமலை முதலான திவ்ய தேசங்களிலே ரஸோத்தரமாக வஸிக்கையான அரச்சாவதாரத்தை மலைமேல்நிற்பாய் என்றார். * பின்னானார்வணங்குஞ்சோதி திருமூழிக்களத்தானாய் * என்றவிடத்துத் திருமூழிக்களமொன்றைச் சொன்னது உபலக்ஷணமாய் ஸகல திவ்ய தேசங்களையுங் காட்டுமாபோலே இங்கும் * மலைமேல் நிற்பாயென்று திருமலையொன்றைச் சொன்னது மற்றுமுள்ள ஸகல திவ்ய தேசங்களுக்கும் உபலக்ஷணமாகும்.

எண்மீதியன்ற புறவண்டத்தாய் – எண்மீதியலுகையாவது எண்ணுக்குமேலே வர்த்திக்கை எண்ணமுடியாமையைச் சொன்னபடி. ஸ்ரீ விஷ்ணுபுராணத்தில் * அண்டாநாம் து ஸஹஸ்ராணாம் ஸஹஸ்ராண்ய்யுதாநி ச, ஈத்ருசாநாம் த்தா தத்ர கோடிகோடி சதாநி ச * என்றது காண்க.

எனதாவியுண்மீதாடி என்றதற்கு இரண்டுபடியாக நிர்வஹிப்பவர்கள், “உள்மீது“ என்பதை ஒரு சொல்வடிவமாகக் கொண்டு என் ஹ்ருதயத்திலுள்ளே ஸஞ்சரித்து என்கை, அன்றிக்கே உள், மீது என்று இரண்டாக்கி என் ஆத்மாவுக்குள்ளும் புறம்பும் ஸஞசரித்து என்னவுமாம்.

என்னை நீ தேடித்திரிந்த காலத்திலே உனக்கு அகப்பட்டேனில்லை, உன்னை நான் தேடித்திரியுமிக்காலத்திலே எனக்கு நீ அகப்படுகிறாயல்லை என்கிறார் போலுமாழ்வார் இப்போதைய தம்முடைய படிக்குத் தீயோடுடன் சேர் மெழுகை த்ருஷ்டாந்தமாகப்பேசுகிறார். அக்நியிலே புக்குக் கரிந்து போகவும் பெறாதே தூரத்திலிருந்து அழியாதிருக்கவும் பெறாதே உருகுவது வலிப்பதாகிறபடி. ஜீவிக்கவும் பெறாதே முடியவும் பெறாதே இப்படி யெத்தனை காலம் கிரிவேனோ! என்றாராயிற்று.

 

English Translation

O Lord you sit in the sky, stand on the hill, sleep in the ocean, walk on the plains.  You are present in all these, hidden, O Lord existing in countless other worlds as well, Blended in me, will you still hide yourself from me?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top