(3547)

(3547)

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்,

பாவி யேனைப் பலநீ காட்டிப் படுப்பாயோ,

தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே,

கூவிக் கொள்ளும் கால மின்னம் குறுகாதோ?

 

பதவுரை

ஆவி திகைக்க

நெஞ்சு கலங்கும்படியாந

ஐவர் குமைக்கும்

பஞ்சேந்திரியங்களும் பீடிக்கும் படியான

சிற்றின்பம்பல

அற்பாஸரங்களான விஷயங்கள் பலவற்றை

பாவியேனை நீ காட்டி

பாவியேன் கண்ணிலே நீ காண்பித்து

படுப்பாயோ

முடிக்க நினைக்கிறாயோ?

வையம் தாவி

பூமி முழுவதையும் அளந்து கொண்ட ஸ்வாதீனமாக்கிக் கொண்ட

தட தாமரை கட்கே

பெரிய திருவடித் தாமரைகளிலே நான் அந்வயிக்கும்படி

கூவிக்கொள்ளும் காலம்

என்னை யழைத்துக் கொள்ளுங்காலம்

இன்னம் குறுகாதோ

இன்னமும் ஸமீபித்ததாக ஆகக்கூடாதோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (ஆவி திகைக்க) விஷயங்களும் இந்திரியங்களும் நடையாடுகிற நிலத்திலே வைத்து என்னை முடிக்கப் பார்த்தது போதும் பிரானே! கடுக உன் திருவடிகளிலே யழைத்துக் இங்குக் கெடுத்ததென்? என்ன, கண்டகாட்சியிலே இழுத்துக்கொள்ளக் கடவதான விஷயங்கள் பரிமாறுகிற விடத்தே வைத்தாயாகில் இனிக்கெடுக்கையென்று ஒன்றுண்டோ வென்கிறார், என்னையிங்கெ வைத்தபோதே குழியைக்கல்லி மண்ணையிட்டு அமுக்கப் பார்த்தாயன்றோ வென்கிறார்.“

நெஞ்சு கலங்கும்படியாகப் பஞ்சேந்திரியங்கள் குமைக்கும்படியான சிற்றின்பங்களாவன – கண்காட்சிகளான நாடகங்கள், செவியுணவான விண் பாட்டுக்கள், நாவுணவான தின்பண்டங்கள், மூக்குணவான சுகந்தங்கள், உடலுணவான அங்கநா பரிஷ்வங்காதிகள் ஆகிய இவற்றாலுண்டாகும் சுகங்கள். ஒவ்வொரு இந்திரியமும் “என் விஷயத்தைக் காட்டு, என் விஷயத்தைக் காட்டு“ என்று நலியுமாதலால் “ஐவர் குமைக்கும்“ என்றது. அஃறிணையான இந்திரியங்களை “ஐந்து“ என்ன வேண்டுமிடத்து “ஐவர்“ என்று உயர்திணையாகச் சொன்னது என்னும்படியாக விஷயாந்தரங்களைக் கண்ட மாத்திரத்திலேயே முடியும்படி யாகுமோ? இது அதிசயோக்தியோ? என்று நினைக்கவேண்டா, இவ்விஷயமாக ஸ்ரீவசந பூஷணத்தில் அருளிச்செய்வது பாரீர், – “அருணமா முடியுமாபோலே, பகவதநுபவைக பரனாய் ம்ருதுப்ரக்ருதியா யிருக்குமவன் விஷய தர்சனத்தாலே முடியும்படி“ என்று, இங்கே மணவாளமாமுனிகளில் வியாக்கியான ஸ்ரீஸூக்தி வருமாறு –“அசுணமா என்கிற பக்ஷி அதிமதுரமான கான ச்ரவணத்தாலே நெஞ்சு நீர்ப்பண்டமாய் இளகின தசையிலே அதிகடிநமான பறையையடிக்கக் கேட்டுப் நைந்து இதர விஷயங்களின் பேர் கேட்கிலும் மரந்தும்படிம்ருது ப்ரக்ருதியாயிருக்குமவன் பகவதேக போகத்வரூப ஸ்வரூப நாசங்கங்களான விஷயங்களைக் கண்ட மாத்ரத்திலே ஏங்கி முடியும்படி.“ அவ்விடத்திற்கு இப்பாசுரமே மேற்கோளாகவும் காட்டப்பட்டுள்ளது.

அடியேனைத் திருவடி சேர்த்துக்கொள்வதாக தேவரீர் ஸங்கல்பித்திருக்குமதில் குறையில்லை, ஏதோ வொருநாளில் திருவடி சேர்த்துக்கொள்வதாகத் திருவுள்ளம் பற்றியிருக்குமே, அந்தநாள் இன்று நாளையாம்படி ஸமீபிக்கலாகாதோ வென்கிறார் பின்னடிகளில். இங்கே ஒரு ஐதிஹ்யம் ஈட்டிலுள்ளது, “பிள்ளானுடைய அந்திம தசையிலே நஞ்சீயர் நோவறியப்புக்கிருக்க, கூவிக்கொள்ளுங் காலமின்னங்குறுகாதோ? என்று பலகால் சொல்ல, இத்தைக்கேட்டு ஜீயர் அழ, “ஜீயரே! நீ கிடந்தழுகிறதென்? அங்குப் போய்ப்பெறப் புகுகிற பேறு இதிலும் தண்ணிதென்று தோற்றியிருந்த்தோ? என்று பணித்தான்.“

தாமரைபோன்ற திருவடிகட்கே என்ன வேண்டுமிடத்து “தாமரைகட்கே“ என்றது உவமையாகுபெயர்.

 

English Translation

My soul is afflicted by pleasures that the senses heap, would you still destroy me with distractions? Has the time not come for me to be united to your lotus-feet, -that grew and strode the Earth?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top