ஒன்பதாந் திருமொழி
(1528)
பெடையடர்த்த மடவன்னம் பிரியாது, மலர்க்கமலம்
மடலெடுத்து மதுநுகரும் வயலுடுத்த திருநறையூர்
முடையடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலிதிரிவோன்
இடர்கெடுத்த திருவாள னிணையடியே யடைநெஞ்சே.
(1529)
கழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி
வழியார முத்தீன்று வளங்கொடுக்கும் திருநறையூர்
பழியாரும் விறலரக்கன் பருமுடிக ளவைசிதற
அழலாறும் சரந்துரந்தான் அடியிணையே யடைநெஞ்சே.
(1530)
சுளைகொண்ட பலங்கனிகள் தேன்பாய கதலிகளின்
திளைகொண்ட பழம்கெழுமு திகழ்சோலைத் திருநறையூர்
வளைகொண்ட வண்ணத்தன் பின்தோன்றல் மூவுலகோடு
அளைவெண்ணெ யுண்டான்தன் அடியிணையே யடைநெஞ்சே.
(1531)
துன்றோளித் துகில்படலம் துன்னியெங்கும் மாளிகைமேல்
நின்றார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர்
மன்றாரக் குடமாடி வரையெடுத்து மழைதடுத்த
குன்றாரும் திரடோளன் குரைகழலே யடைநெஞ்சே.
(1532)
அகிற்குறடுஞ் சந்தனமும் அம்பொன்னும் மணிமுத்தும்
மிகக்கொணர்ந்து திரையுந்தும் வியன்பொன்னித் திருநறையூர்
பகற்கரந்த சுடராழிப் படையான் இவ்வுலகேழும்
புகக்கரந்த திருவயிற்றன் பொன்னடியே யடைநெஞ்சே.
(1533)
பொன்முத்தும் அரியுகிரும் புழைக்கைம்மா கரிக்கோடும்
மின்னத்தண் திரையுந்தும் வியன்பொன்னித் திருநறையூர்
மின்னொத்த நுண்மருங்குல் மெல்லியலை திருமார்வில்
மன்னத்தான் வைத்துகந்தான் மலரடியே யடைநெஞ்சே.
(1534)
சீர்தழைத்த கதிர்ச்செந்நெல் செங்கமலத் திடையிடையின்
பார்தழைத்துக் கரும்போங்கிப் பயன்விளைக்கும் திருநறையூர்
கார்தழைத்த திருவுருவன் கண்ணபிரான் விண்ணவர்கோன்
தார்தழைத்த துழாய்முடியன் தளிரடியே யடைநெஞ்சே.
(1535)
குலையார்ந்த பழுக்காயும் பசுங்காயும் பாளைமுத்தும்
தலையார்ந்த விளங்கமுகின் தடஞ்சோலைத் திருநறையூர்
மலையார்ந்த கோலஞ்சேர் மணிமாடம் மிகமன்னி
நிலையார நின்றான்றன் நீள்கழலே யடைநெஞ்சே.
(1536)
மறையாரும் பெருவேள்விக் கொழும்புகைபோய் வளர்ந்து,எங்கும்
நிறையார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர்
பிறையாரும் சடையானும் பிரமனுமுன் தொழுதேத்த
இறையாகி நின்றான்றன் இணையடியே யடைநெஞ்சே.
(1537)
திண்கனக மதிள்புடைசூழ் திருநறையூர் நின்றானை
வண்களக நிலவெறிக்கும் வயல்மங்கை நகராளன்
பண்களகம் பயின்றசீர்ப் பாடலிவை பத்தும்வல்லார்
விண்களகத் திமையவராய் வீற்றிருந்து வாழ்வாரே.
