(162)
பின்னை மணாளனைப் பேரில் கிடந்தானை
முன்னை யமரர் முதல்தனி வித்தினை
என்னையும் எங்கள் குடிமுழுது ஆட்கொண்ட
மன்னனை வந்துகுழல் வாராய்அக் காக்காய் மாதவன் தன்குழல் வாராய்அக் காக்காய்
(163)
பேயின் முலையுண்ட பிள்ளை இவன்முன்னம்
மாயச் சகடும் மருதும் இறுத்தவன்
காயா மலர்வண்ணன் கண்ணன் கருங்குழல்
தூய்தாக வந்துகுழல் வாராய்அக் காக்காய் தூமணி வண்ணன்குழல் வாராய்அக் காக்காய்.
(164)
திண்ணக் கலத்தில் திரையுறி மேல்வைத்த
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும்
அண்ணல் அமரர் பெருமானை ஆயர்தம்
கண்ணனை வந்துகுழல் வாராய்அக் காக்காய் கார்முகில் வண்ணன்குழல் வாராய்அக் காக்காய்.
(165)
பள்ளத்தில் மேயும் பறவை யுருக்கொண்டு
கள்ள வசுரன் வருவானைத் தான்கண்டு
புள்ளிது வென்று பொதுக்கோவாய் கீண்டிட்ட
பிள்ளையை வந்துகுழல் வாராய்அக் காக்காய் பேய்முலை யுண்டான்குழல் வாராய்அக் காக்காய்.
(166)
கற்றினம் மேய்த்துக் கனிக்குஒரு கன்றினை
பற்றி யெறிந்த பரமன் திருமுட
உற்றனபேசிநீ ஓடித் திரியாதே
அற்றைக்கும் வந்துகுழல் வாராய் அக் காக்காய் ஆழியான் தன்குழல் வாராய்அக் காக்காய்.
(167)
கிழக்கில் குடிமன்னர் கேடிலா தாரை
அழிப்பான் நனைந்திட்டுஅவ் வாழி யதனால்
விழிக்கு மளவிலே வேரறுத் தானை
குழற்குஅணி யாகக்குழல் வாராய்அக் காக்காய் கோவிந்தன் தன்குழல் வாராய்அக் காக்காய்.
(168)
பிண்டத் திரளையும் பேய்க்கு இட்ட நீர்ச்சோறும்
உண்டற்கு வேண்டிநீ ஓடித் திரியாதே
அண்டத்து அமரர் பெருமான் அழகமர்
வண்டொத் திருண்டகுழல் வாராய்அக் காக்காய் மாயவன்தன் குழல் வாராய்அக் காக்காய்.
(169)
உந்தி யெழுந்த உருவம லர்தன்னில்
சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன்
கொந்தக்குழலைக் குறந்து புளியட்டி
தந்தத்தின் சீப்பால் குழல்வாராய்அக் காக்காய் தாமோ தரன்தன்குழல் வாராய்அக் காக்காய்.
(170)
மன்னன்தன் தேவிமார் கண்டு மகிழ்வெய்த
முன்இவ் வுலகினை முற்றும் அளந்தவன்
பொன்னின்முடியினைப் பூவணை மேல்வைத்து
பின்னேயிருந் துகுழல் வாராய்அக் காக்காய் பேரா யிரத்தான்குழல் வாராய்அக் காக்காய்.
(171)
கண்டார் பழியாமே அக்காக்காய் கார்வண்ணன்
வண்டார் குழல்வார வாவென்ற ஆய்ச்சி சொல்
விண்தோய் மதிள்வில்லி புத்தூர்க்கோன் பட்டன்சொல்
கொண்டாடிப் பாடக் குறுகா வினைதாமே
