முதல் திருமொழி
(118)
மெச்சூது சங்கம் இடத்தான் நல்வேயூதி
பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய்
பத்தூர் பெறாதுஅன்று பாரதம் கைசெய்த
அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்
(119)
மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும்
பலர்குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன்
சிலைவளையத் திண்தேர்மேல் முன்னின்ற செங்கண்
அலவலைவந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
(120)
காயும்நீர் புக்குக் கடம்பேறி காளியன்
தீயபணத்தில்சிலம்பார்க்கப் பாய்ந்தாடி
வேயிங் குழலூதி வித்தகனாய்நின்ற
ஆயன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
(121)
இருட்டில் பிறந்துபோய் ஏழைவல் லாயர்
மருட்டைத் தவிர்ப்பித்து வஞ்சகன் மாளப்
புரட்டிஅந் நாள்எங்கள் பூம்பட்டுக் கொண்ட
அரட்டன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
(122)
சேப்பூண்ட சாடு சிதறி திருடிநெய்க்கு
ஆப்பூண்டு நந்தன் மனைவி கடைதாம்பால்
சோப்பூண்டு துள்ளித் துடிக்க அன்று
ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
(123)
செப்பிள மென்முலைத் தேவகி நங்கைக்கு
சொப்படத் தோன்றித் தொறுப்பாடி யோம்வைத்த
துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய
அப்பன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
(124)
தத்துக் கொண்டாள்கொலோ தானேபெற் றாள்கொலோ
சித்த மனையாள் அசோதை யிளஞ்சிங்கம்
கொத்தார் கருங்குழல் கோபால கோளரி
அத்தன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
(125)
கொங்கைவன் கூனிசொற் கொண்டுகு வலயத்
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற் கருளிவன் கானடை
அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
(126)
பதக முதலைவாய்ப் பட்ட களிறு
கதறிக்கைகூப்பிஎன் கண்ணாகண் ணாஎன்ன
உதவப்புள் ளூர்ந்து அங்குஉறுதுயர் தீர்த்த
அதகன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
(127)
வல்லா ளிலங்கை மலங்கச் சரந்துரந்த
வில்லாளனைவிட்டு சித்தன் விரித்த
சொல்லார்ந்த அப்பூச்சிப் பாடல் இவைபத்தும்
வல்லார்போய் வைகுந்தம் மன்னி யிருப்பரே.
