பெரிய திருமொழித் தனியன்கள்
திருக்கோட்டியூர் நம்பி அருளிச் செய்தது
கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோக திவாகரம் |
யஸ்ய கோபி: ப்ரகாஶாபி4: ஆவித்3யம் நிஹதம் தம: ||
எம்பெருமானார் அருளிச் செய்தது
வாழி பரகாலன் வாழி கலிகன்றி * வாழி
குறையலூர் வாழ் வேந்தன் * – வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர் கோன் *
தூயோன் சுடர்மான வேல்
ஆழ்வான் அருளிச் செய்தது
நெஞ்சுக்கு இருள் கடி தீபம் அடங்கா நெடும் பிறவி
நஞ்சுக்கு நல்ல அமுதம் * தமிழ நன்நூல் துறைகள்
அஞ்சுக்கு இலக்கியம் ஆரணசாரம் * பர சமயப்
பஞ்சுக் கனலின் பொறி * பரகாலன் பனுவல்களே
எம்பார் அருளிச் செய்தது
எங்கள் கதியே! இராமாநுச முனியே! *
சங்கை கெடுத்தாண்ட தவராசா! * – பொங்கு புகழ்
மங்கையர் கோன் ஈந்த மறை ஆயிரம் அனைத்தும் *
தங்கு மனம் நீ எனக்குத் தா
மணவாள மாமுனிகள் அல்லது சோமாசியாண்டான் அருளிச் செய்தது
மாலைத் தனியே வழி பறிக்க வேணும் என்று *
கோலிப் பதிவிருந்த கொற்றவனே! * – வேலை
அணைந்தருளும் கையால் அடியேன் வினையை *
துணித்தருள வேணும் துணிந்து
(948)
வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு அவர்த்தரும் கலவியேகருதி
ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.
(949)
ஆவியே அமுதே எனநினைந்துருகி அவரவர்ப்பணைமுலைதுணையா,
பாவியேனுணரா தெத்தனைபகலும் பழுதுபோயொழிந்தனநாள்கள்,
தூவிசேரன்னம் துணையொடும்புணரும் சூழ்புனற்குடந்தையேதொழுது, என்
நாவினாலுய்யநான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும் நாமம்.
(950)
சேமமேவேண்டித் தீவினைபெருக்கித் தெரிவைமாருருவமேமருவி,
ஊமனார் கண்டகனவிலும்பழுதாய் ஒழிந்தனகழிந்தவந்நாள்கள்,
காமனார் தாதைநம்முடையடிகள் தம்மடைந்தார்மனத்திருப்பார்,
நாமம்நானுய்ய நான்கண்டு கொண்டேன் நாராயணாவென்னும்நாமம்.
(951)
வென்றியே வேண்டி வீழ்பொருட் கிரங்கி வேற்கணார் கலவியே கருதி,
நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன் என்செய்கேன் நெடுவிசும்பணவும்,
பன்றியா யன்றுபாரகங்கீண்ட பாழியா னாழியானருளே,
நன்று நானுய்ய நான்கண்டு கொண்டேன் நாராயணாவென்னும்நாமம்.
(952)
கள்வனேனானேன்படிறுசெய்திருப்பேன் கண்டவாதிரிதந்தேனேலும்,
தெள்ளியேனானேன்செல்கதிக்கமைந்தேன் சிக்கெனத்திருவருள்பெற்றேன்,
உள்ளெலாமுருகிக்குரல் தழுத்தொழிந்தேன் உடம்பெலாம்கண்ணநீர்சோர,
நள்ளிருளளவும் பகலும் நானழைப்பன் நாராயணாவென்னும்நாமம்.
(953)
எம்பிரான், எந்தை, என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு, என்னுடை வாழ்நாள்
அம்பினல் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்,
வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை மாமணிக்கோயிலே வணங்கி,
நம்பிகாள்! உண்ண நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்.
(954)
இற்பிறப்பறியீர் இவரவரென்னீர்இன்னதோர்த்தன்மையென்றுணரீர்
கற்பகம்புலவர்களைகணென்றூலகில் கண்டவாதொண்டரைப்பாடும்,
சொற்புருளாளீர்சொல்லுகேன்வம்மின் சூழ்புனற்குடந்தையேதொழுமின்,
நற்பொருள்காண்மின் பாடி நீருய்ம்மின் நாராயணாவென்னும்நாமம்.
(955)
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை,
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை பெருநிலத்தாருயிர்க்கெல்லாம்,
செற்றமேவேண்டித்திரிதருவேன் தவிர்ந்தேன் செல்கதிக்குய்யுமாறெண்ணி,
நற்றுணையாகப்பற்றினேன் அடியேன் நாராயணாவென்னும்நாமம்.
(956)
குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளொடுபெருநிலமளிக்கும்,
வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற தாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும்நாமம்.
(957)
மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர் மங்கையார்வாள் கலிகன்றி,
செஞ்சொலாலெடுத்த தெய்வ நன்மாலை இவைகொண்டு சிக்கெனத்தொண்டீர்.,
துஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின் துயரிலீர் சொல்லிலும் நன்றாம்,
நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு நாராயணாவென்னும் நாமம்.
