(954)
இற்பிறப்பறியீர் இவரவரென்னீர் இன்னதோர்த்தன்மையென்றுணரீர்,
கற்பகம்புலவர்களைகணென்றூலகில் கண்டவாதொண்டரைப்பாடும்,
சொற்புருளாளீர்சொல்லுகேன்வம்மின் சூழ்புனற்குடந்தையேதொழுமின்,
நற்பொருள்காண்மின் பாடி நீருய்ம்மின் நாராயணாவென்னும்நாமம்.
பதவுரை
| இல் பிறப்பு அறியீர் |
– |
இல்வாழ்க்கை நடத்துகிறபடியையும் குடிப்பிறப்பையும் அறியாதவர்களாயும் |
| இவர் அவர் என்னீர் |
– |
இப்போது ஸம்பந்நராயிருக்குமிவர்கள் முன்பு தரித்ரராயிருந் துவர்களென் றறியாதவர்களாயும் |
| இன்னது ஓர் தன்மை என்று உணரீர் |
– |
‘இவர்களுடைய தன்மை இப்படிப் பட்டது’ என்றறியாதவர்களாயும், |
| உலகில் தொண்டரை |
– |
உலகில் பிறர்க்கு இழிதொழில் செய்து ஜீவிக்கும்நீசர்களை |
| கற்பகம் என்று |
– |
கல்பவ்ருக்ஷம்போல் ஸர்வஸ்வதானம் செய்பவரென்றும் |
| புலவர் என்று |
– |
ஸர்வஜ்ஞரென்றும் |
| களைகண் என்று |
– |
ரக்ஷகர் என்றும் (ஆகவிப்படி) |
| கண்ட ஆ பாடும் |
– |
மனம் போனபடி (சிறப்பித்துக்கூறிக்)கவிபாடுகின்ற |
| சொல்பொருள் ஆனீர் |
– |
சொல்லும் பொருளும் நன்கறிந்த மஹாகவிகளே! |
| சொல்லுகேன் |
– |
உங்களுக்கு ஹிதஞ்சொல்லுகிறேன்; |
| வம்மின் |
– |
நீசரைக் குறித்துக் கவிபாடுவதை விட்டு இப்படி வாருங்கள்; |
| புனல் சூழ் குடந்தையே தொழுமின் |
– |
நீர் சூழ்ந்த திருக்குடந்தையை ஸேவியுங்கள்: |
| நாராயணா என்னும் நாமம் பாடி நீர் உய்ம்மின் |
– |
நாராயணா நாமத்தைப் பாடி நீங்கள் உஜ்ஜீவித்துப் போங்கள்; |
| நல் பொருள் காண்மின்; |
– |
உங்களுக்கு நான் உபதேசிக்கும் சிறந்த அர்த்தம் இதுவே காணுங்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** (இற்பிறப்பு.) – நூல்களைக் கற்றுக் கவிபாடும் வல்லமை பெற்றவர்கள் உபயோகமற்றக்ஷத்ர மநுஷ்யர்களை வீணேசிறப்பித்துக்கூறிக் கவிபாடுவதுண்டே; அன்னவர்களை நோக்கி வெறுத்து, ஐயோ! நீங்கள் வாக்குப்படைத்ததற்கு இதுவோ ப்ரயோஜனம்; க்ருபணனைக் கல்பவ்ருக்ஷமென்பதும், நிரக்ஷரகுக்ஷியான மூடனை ப்ருஹஸ்பதியென்பதும், தெருத்திண்ணையில் தங்கவும் இடந்தராமல் துரத்தித்தள்ளுமவனை ஸர்வரக்ஷகனென்பதும் ஆகவிப்படி பொய்யுரை கூறுவதேயோ நீங்கள் கற்ற கல்விக்குப் பயனாவது!; கவிபாடுகைக்குப் பாங்கான ஊரும் ஆறும் பேருமுடையனான பெருமானை நான் காட்டித் தருகிறேன், வாருங்கள்; திருக்குடந்தையாராவமுதனை வாயாரப் புகழ்ந்து உஜ்ஜீவித்துப் போங்கள்; இதுவே உங்களுக்கு நான் உபதேசிக்கும் சிறந்த அர்த்தம் – என்கிறார்.
“இல் பிறப்பு அறியீர்” = இல் அறியீர், பிறப்பு அறியீர் என்க. ‘இல் அறி யீர்’ என்றது இல்லறம் அறியீர் என்றபடி. இல்லறமாவது க்ருஹஸ்த தருமம் இழிவான அநுஷ்டான முடையராயிருந்தாலும் இழிவான குலத்திலேபிறந்தவர்களாயிருந்தாலும் அந்த இழி தொழிலையும் இழி பிறப்பையும் நீங்கள் அறியாமல் தானே அவர்களை நல்லொழுக்கமுடையராகவும் நற்குலமுடையராகவும் வருணித்துக் கவிபாடிவிடுகிறீர்கள் என்பது கருத்து. இவர் அவரென்னீர் = இவர் – இப்போது கையில் கொஞ்சம் பணங்காசு உள்ளவர்களாகத் தென்படுகிற இவர்கள், அவர் என்னீர் – இதற்கு முன்பு கையுங் கபாலமுமாய்த் திரிந்த பிச்சைக்காரப்பயல்கள் என்று தெரிந்து கொள்ளாது பரம்பரையாகப் பெருஞ்செல்வர்களெனப் போற்றுகின்றீர்களே என்றவாறு. அன்றியே, இவரவர் என்று ஒரு வார்த்தைப்பாடாய் இன்னாரினையாரென்று தெரிந்து கொள்ள மாட்டீர்களென்றபடியுமாம்.இன்னதோர் தன்மை யென்றுணரீர் – இவர்களுடைய தன்மை இவ்வளவு தான் என்று தெரிந்து கொள்ளாமல் அபாரசக்தி யுடையவர்களாகக் கொண்டு கவிபாடி விடுகிறீர்கள் என்றவாறு. அறியீர், என்னீர், “உணரீர்” – முன்னிலை யெதிர்மறைப் பன்மை வினைமுற்றுகள். “கற்பகம்” – நினைத்ததை யெல்லாம் அளிக்கவல்ல தேவலோகத்து வ்ருக்ஷம். உலகில் தொண்டரைக் கற்பகமென்றும் புலவரென்றும் களைகணென்றும் கண்டபடி பாடித்திரிகிற கவிகளே! என்று விளித்தபடி. “புலவர்களைகண்” என்று சேர்த்து யோஜித்து, புலவர்களுக்கு ரக்ஷகராயிருப்பவர்களென்று சொல்லிக் கவி பாடுகிறவர்களே! என்பதாகவும் உரைக்கலாம். களைகண் – “ஆதாரம் தொண்டர்” – சேகவத் தொழில் செய்பவர்கள் . –
“சொல் பொருள் ஆளீர்” – சொல்லின்பமும் பொருளின்பமும் இல்லாமல் கவிபாடுகிறவர்களாயிருந்தால் கவலையே யில்லை; புன்சொற்களாலே எந்தப்புல் லியரைப் போற்றினாலும் கவலையில்லை; சொல்நோக்கும் பொருள் நோக்கும் சிறப்புறக் கவிபாட வல்ல நீங்கள் உங்களது அருமந்த சொற்களை இழிபிறப் பாளர்மேல் செலுத்தி வாக்கை எச்சிலாக்கிக் கொள்ளுகிறீர்களே என வருந்துகின்றேன் என்ற கருத்துக் காண்க. —————————————————— (எ)
English Translation
You don’t know their names, or where they hail from, or what their temperament is like. “O Kalpaka tree!”, “O Friend-of-poets!” –you go and praise them in song thus. O, Bardic singers, come here I tell you, worship the Lord in Kudandai. Know thy good fortune, sing and be joyous, Narayana is the good name.
