(950)
சேமமேவேண்டித் தீவினைபெருக்கித் தெரிவைமாருருவமேமருவி,
ஊமனார் கண்டகனவிலும்பழுதாய் ஒழிந்தனகழிந்தவந்நாள்கள்,
காமனார் தாதைநம்முடையடிகள் தம்மடைந்தார்மனத்திருப்பார்,
நாமம்நானுய்ய நான்கண்டு கொண்டேன் நாராயணாவென்னும்நாமம்.
பதவுரை
|
சேமமே வேண்டி |
– |
நன்மையையே அபேக்ஷித்திருந்தும் (அதற்கு உறுப்பாக வினை செய்யாமல்) |
|
தீ வினை பெருக்கி |
– |
துஷ்கருமங்களை அதிகமாகச் செய்து |
|
தெரிவைமார் உருவமே மருவி |
– |
ஸ்திரீகளுடைய வடிவழகையே பேணி |
|
கழிந்த அந்நாள்கள் |
– |
கீழே கழிந்த நாள்களானவை |
|
ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய் ஒழிந்தன |
– |
ஊமை கண்ட கனவிலுங் காட்டில் வீணாகக் கழிந்து போயின; |
|
காமனார் தாதை |
– |
மன்மதனுக்குப் பிதாவும் |
|
நம்முடை அடிகள் |
– |
நமக்கு ஸ்வாமியும் |
|
தம் அடைந்தார் மனத்து இருப்பார் |
– |
தம்மைப் பற்றினவர்களுடைய நெஞ்சில் நீங்காதிருப்பவருமமான பெருமாளுடைய |
|
நாமம் |
– |
திருநாமமாகிய |
|
நாராயணா என்னும் நாமம் |
– |
நாராயண நாமத்தை |
|
நான் உய்ய |
– |
நான் உஜ்ஜீவிக்கும்படியாக |
|
நான் கண்டு கொண்டேன் |
– |
நான் காணப் பெற்றேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
* * * – (சேமமே வேண்டி.) பகவத் விஷயானுபவத்தாலே மிகவும் இனி தாகச் செல்ல வேண்டிய காலமெல்லாம் பாழாய்க் கழிந்தன வே யென்கிற அநு தாபமே மீண்டும் மேலிட்டு உள்ளடங்காத துக்கந் தோன்றப் பேசுகிறார். ‘நமக்கு ஒருவராலும் ஒருவிதமான துன்பமும் நேரிடக் கூடாது, இன்பமே பெருக வேண்டும்; க்ஷேமமாக நாம் வாழவேண்டும்’ என்கிற அபேக்ஷை மாத்திரம் பரிபூர்ணமாயிருந்தது; அவ்வபேக்ஷைக்குத் தக்கபடி நல்ல காரியங்களைச் செய்தாலன்றோ அப்படியே க்ஷேமமாக வாழலாகும்; அப்படியிருக்க, க்ஷேமத்தை விரும்புதல் மாத்திரஞ் செய்து நல்லகாரிய மொன்றுஞ் செய்யா தொழிந்தேன் ; அவ்வளவேயோ ? பல கெட்ட காரியங்களையும் ஏராளமாகச் செய்து தீர்த்தேன் ; ஸ்த்ரீகளுடைய வடிவழகிலே ஈடுபட்டுச் செய்யாத பாவமில்லை. இப்படி பாவமே செய்து பாவியான எனக்குக் கழிந்தநாள்கள் அந்தோ! வீணாகக் கழிந்தன. ஊமை கனாக்கண்டால் அதை ஒருவரிடத்தும் வாய் விட் டுச் சொல்லிக் கொண்டு ஆநந்திக்கமுடியாது; ஆகவே ஊமைகண்ட கனாக்கள் பழுதேயாம்; ஊமையர்க்கு வாய்விட்டுச் சொல்லிக்கொள்ள முடியாமற் போனா லும் தம் நெஞ்சினுள்ளேயாகிலும் நினைத்திருந்து மகிழக்கூடும். அப்படி நினைத்துத் தமக்குள்ளேயே மகிழக்கூடிய விஷயமும் ஒன்றில்லாமையாலே ஊமனார் கண்ட கனவிலுங் காட்டில் வியர்த்தமாகவே என் நாள்கள் கழிந்து போயினவென்கிறார்.
ஆக முன்னடிகளாலே இழந்த நாளைக்கு அநுதபித்து, இன்று பெற்ற பேற்றின் கனத்தை நினைத்து மகிழ்ந்து பேசுகிறார் பின்னடிகளில் .
அழகிற் சிறந்த மன்மதனுக்கும் ஜநகனாகையாலே அதிஸ்ந்த ரனாய், ஸர்வ ஸ்வாமியாகையாலே ப்ராப்தசேஷியாய், ஒருகால் தன்னைப்பணிந்தவர்கள்ளுடைய நெஞ்சை விட்டுப் பிரியாதவனாகையாலே ஸுலபனாயுமுள்ள எம் பெருமானுடைய திருநாமமாகிய ஸ்ரீமந்நாராயணமஹாமந்த்ரத்தை இன்று நான் லபிக்கப் பெற்றேனாகையால் இனி எனக்கொரு குறையுமில்லையென்றாராயிற்று.
ஸ்ரீக்ருஷ்ணன் மன்மதனுடைய அம்சமாகிய பிரத்யும்நனுக்குத் தந்தையாதலால் காமனார் தாதை என்றார். தாத: என்ற வடசொல் தாதை யெனத் திரிந்தது. க்ஷேமம் என்ற வடசொல் சேமமெனத் திரிந்தது. தெரிவைமார் – பெண்கள் என்றபடி. ஐந்து வயது முதல் ஏழுவயது வரையில் பேதைப் பருவமென்றும், எட்டு முதல் பன்னிரண்டு வரையில் பெதும்பைப் பருவமென்றும், பதின்மூன்றாம் வயது மங்கைப்பருவமென்றும், பதினான்கு முதல் பத்தொன்பது வரையில் மடந்தைப் பருவமென்றும், அதன் மேல் ஆறு வயது வரையில் அரிவைப் பருவமென்றும், இருபத்தாறு முதல் முப்பத்திரண்டு வயது வரையில் தெரிவைப் பருவமென்றும் இலக்கண நூல்களிற் கூறப்பட்டுள்ளது இருந்தாலும், பேதை மங்கை அரிவை தெரிவை இத்யாதி பதங்களை ஸ்த்ரீகளுக்குப் பொதுப் பெயராகப் பிரயோகிப்பதுமுண்டு. ….. ….. … (ங)
English Translation
Father-of-Kama, our Lord the great one, — lives in the heart of devotees. I found his Mantra, path of redemption, Narayana is the good name. Seeking my well-being, through countless misdeeds, I sought the shapely women then. Lost are the good days, spent in this manner, more useless than dreams-of-dumb-ones.
