(949)

(949)

ஆவியே அமுதே எனநினைந்துருகி அவரவர்ப்பணைமுலைதுணையா,

பாவியேனுணரா தெத்தனைபகலும்  பழுதுபோயொழிந்தனநாள்கள்,

தூவிசேரன்னம் துணையொடும்புணரும் சூழ்புனற்குடந்தையேதொழுது, என்

நாவினாலுய்யநான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும் நாமம்.

பதவுரை

ஆவியே என

‘எனக்கு உயிர் போன்றவளே!‘ என்றும்
அமுதே என

எனக்கு அம்ருதம் போல் இனியவளே!’ என்றும் இப்படிப் பலவாறாகச் சொல்லி வாய் பிதற்றிக்கொண்டு)
நினைந்து உருகி

சிற்றின்பங்களை நினைத்து நினைத்து மனமுருகி
அவர் அவர்

பலபல பெண்டுகளுடைய
பணைமுலை

பருத்த முலைகளையே
துணை ஆ

ரக்ஷகமாகக்கொண்டு
பாவியேன்

பாபியான நான்
உணராது

ஸ்வரூபஜ்ஞானம் பெறாததன் பயனாக
எத்தனை பகலும் பழுது போய் ஒழிந்தன

ஐயோ! எத்தனை காலம் வீணாகக் கழிந்தன;
எத்தனை நாள்கள் பழுது போய் ஒழிந்தன

அந்தோ எத்தனை நாள்கள் பாழாய்க் கழிந்தன!

(காலமெல்லாம் பாழாகப் போயிற்றே!.)

தூவிசேர் அன்னம்

இறகுகளையுடைய அன்னப்பறவைகள்
துணையொடும் புணரும்

பேடையோடு புணருமிடமாய்
புனல் சூழ்

நீர்நிலங்கள் சூழ்ந்ததான
குடந்தையே

திருக்குடந்தையையே
தொழுது

ஸேவித்து
உய்ய

உஜ்ஜீவிக்கும்படியாக
நாராயணா என்னும் நாமம் என்நாவினால் நான் கண்டு கொண்டேன்

திருவஷ்டாக்ஷர மஹா மந்த்ரத்தை எனது நாவிலே உரைத்துக் கொள்ளப் பெற்றேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

 

விளக்க உரை

 

*** –(ஆவியே யமுதே.) இப்பாட்டிலும் முன்னடிகளால் பூர்வாவஸ்தையி லநுதாபத்தையும், பின்னடிகளால் உத்தராவஸ்தையி லாநந்தத்தையும் பேசுகிறார். “ஆவியே ஆரமுதே!!” என்று எம்பெருமான் விஷயத்திலே சொல்ல வேண்டிய பாசுரங்களை ஸ்த்ரீகள் விவயத்திலே சொல்லியும், அந்த மாதர்களால் உண்டாகக்கூடிய சிற்றின்பங்களை நினைந்து அதிலே ஈடுபட்டும், 1. “வன் துணைவானவர்க்காய் வரஞ்செற்று அரங்கத்துறையும் இன் துணைவன்” என்று எம்பெருமானையே துணையாகக் கொள்ள வேண்டியது நீங்கி அந்த ஸ்த்ரீகளின் கொங்கைகளையே துணையாகக் காதலித்தும் இப்படியாக மஹா பாபியான நான் அவிவேகத்தாலே பாழாகப் போக்கின காலங்களுக்கு அளவேயில்லை; ஹா! ஹா!! இப்படிபழுதே கழிந்தவை எத்தனையோ பகல் ! எத்தனையோ நாள்கள்!! கணக்கேது வழக்கேது என்று கழிவிரக்கங் கொள்ளு கிறார் – முன்னடிகளில்

இதுவரையில், விஷமானவற்றை அமுதாக ப்ரமித்துக் கிடந்த நிலைமை நீங்கி, மெய்யே அமுதமாகவுள்ளதை இன்று ஸேவிக்கப்பெற்றேன்; (அதா வது) ஆராவமுதப் பெருமானைத் திருக்குடந்தையிலே கண்டு தொழுதேன்;

அபதார்த்தங்களைப் புகழ்ந்து பேசின வாயாலே திருமந்த்ரத்தை அநுஸந் தித்து ஸ்வரூபம் பெற்றேன் என்று மகிழ்கின்றார் – பின்னடிகளில்.

“தூவிசோன்னம் துணையொடும் புணரும்” என்றது. – பெருமாளும் பிராட்டியும் நித்தியவாஸம் பண்ணுகிறபடியைச் சொல்லிற்றாகக் கொள்க. அன்னம் என்றது எம்பெருமானை; துணை என்றது பிராட்டியை. நம்முடைய அபராதங்களைப் பொறுப்பிப்பவளும் பொறுப்பவனும் பிரியாதே வாழுமிட மென்கை.

இத்திருமங்கையாழ்வார்க்கு மற்றைத்திருப்பதிகளெல்லாவற்றினும் திருக்குடந்தையில் அபிநிவேசம் அளவற்றதென்னுமிடம் உய்த்துணரத்தக்கது; இங்கே தொடக்கத்தில் திருக்குடந்தையைப் பேசி, மேலே சரமப்பிரபந்தமாகிய திருநெடுந்தாண்டகத்தின் முடிவிலும் “தண் குடந்தைக் கிடந்தமாலை நெடியானை அடிநாயேன் நினைந்திட்டேனே” என்று திருக்குடந்தையைப் பேசித் தலைக்கட்டினபடியாலென்க. ….. ….. …. ……. ……. (2)

1. பெரிய திருமொழி 3-7-6.

 

English Translation

“My life!”, “My nectar!”, I fondly called them, and sought their round-breast for comfort. Sinner, this self O!, how many days passed, wastefully spent in this manner. Pure-water-swan-pair, nestling together, in holy town of Kudandai, – I offered worship, chanting the Mantra, Narayana is the good name.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top