(948)

(948)

வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து,

கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு அவர்த்தரும் கலவியேகருதி,

ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும் பதம் திரிந்து,

நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.

பதவுரை

வாடினேன்

கீழ்க்கழிந்த காலமெல்லாம் வாடிக்கிடந்தேன்;
வாடி

அப்படி வாடியிருந்ததனால்
மனத்தால் வருந்தினேன்

மனவருத்தமடைந்தேன்;
பெரு துயர் இடும்பையில்

அளவற்ற துக்கங்களுக்கு இருப்பிடமான ஸம்ஸாரத்திலே
பிறந்து கூடினேன்

பிறந்து (அந்த ஸம்ஸாரத்திலேயே) பொருந்தப்பெற்றேன்;
கூடி

அப்படி ஸம்ஸாரியாய்க் கிடந்ததனால்
இளையவர் தரும் கலவியே கருதி

இளமை தங்கிய பெண்கள் தரக்கூடிய சிற்றின்பத்தை ஆசைப்பட்டு
அவர் தம்மோடு ஓடினேன்

அந்தப்பெண்கள் போன வழியையே பற்றி ஓடினேன்;
ஓடி

இப்படி ஓடித்திரியுமிடத்து;
உய்வது ஓர் பொருளால்

ஆத்மோஜ்ஜீவநத்துக்கு உறுப்பான எம்பெருமான் திருவருளாலே
உணர்வு எனும் பெரு பதம் திரிந்து

ஞானமென்கிற ஒரு சிறந்த ஸ்தானத்தில் அடிவைத்து
நாடினேன்

நன்மை தீமைகளை ஆராயப் புகுந்தேன்;
நாடி

அப்படி ஆராயுமளவில்
நாராயணா என்னும் நாமம் நான் கண்டு கொண்டேன்

திருவஷ்டாக்ஷர மஹா மந்த்ரத்தை நான் லபிக்கப்பெற்றேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “பெரும்பதம் தெரிந்து” என்றும் பாடமுண்டு; ஞானமென்கிற ஒரு பெரிய பதவியினால் ஹிதாஹி தங்களைத் தெரிந்து கொண்டு என்றபடியாம்.

* * *- (வாடினேன்வாடி.) அநாதிகாலம் விஷயப்ரவணராய் எம்பெரு மானை மறந்திருந்த இவ்வாழ்வார் நிர்ஹேதுகமான பகவத்கிருபையால் திருவஷ் டாக்ஷர மஹாமந்திரத்தைப் பெற்று ஸ்வரூபமுணர்ந்து திருந்தினராதலால், அந்த மஹா மந்திரத்தின் (உள்ளீடான ஸ்ரீ நாராயண நாமத்தின்) சிறப்பை விரித் துரைத்துக்கொண்டு, தாம் நெடுங்காலமாக பகவத் விஷயத்தை மறந்து அநர்த் தப்பட்டபடியையும் இப்போது உஜ்ஜீவிக்கப் பெற்றபடியையும் பலருமறியப் பேசுகிறார் – இத்திருமொழியில் .

இன்று தாம் உஜ்ஜீவிக்கப்பெற்றாலும் கீழே வீணாகப் பலகாலம் கழிந்து விட்டபடியால் 1. “பழுதே பல பகலும் போயின வென்று அஞ்சி யழுதேன் ” என்றும் 2. “தெரிந்துணர்வொன்றின்மையால் தீவினையேன் வாளாவிருந்தொழிந்தேன் கீழ் நாள்களெல்லாம்” என்றும் இழந்த நாளைக்கு வயிறெரியாதிருக்கமுடியாதாகையால், ஐயோ! அளவற்ற காலத்தை அநியாயமாகப் பாழ் படுத்தினேனே!! என்கிற வருத்தத்தை முந்துற முன்னம் வெளியிடுகிறார்.

3. “ஒண்தாமரையாள் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு” என்ற படி எம்பெருமானொருவனையே விஷயமாகக் கொள்ள வேண்டிய ஞானம் இது வரையில் அவனைத்தவிர்த்துப் பலபல துர்விஷயங்களைப் பற்றிக் கிடந்ததனால் ஆத்மாவுக்கு இருக்கவேண்டிய விகாஸம் குன்றிப்போய் வாட்டமுண்டாயிருந்தது ; 4. “கோல் தேடியோடுங் கொழுந்ததே போன்றதே. மால்தேடியோடும் மனம் “ என்றபடி எம்பெருமானாகிற கொள்கொம்பைப் பற்றித் தரித்து நிற்க வேண்டிய ஆத்மா அந்தக் கொம்பை இழந்ததனால் கொம்பைவிட்டு நீங்கிய தளிர் வாடுமாபோலே வாடிப்போயிற்று. அப்படி வாடிப் போனதனால் உண்டான மனவருத்தம் ஒரு நாளும் தீராதாயிற்று. “வருந்தினேன் மனத்தால்” என்கிற இந்த மனவருத்தம் முன்பு உண்டானதோ? இப்போது உண்டானதோ? என்னில் ; அன்றும் இன்றும் உண்டான வருத்தத்தைச் சொல்லுகிறது. நெடு நாள் இழந்து போன முற்காலத்திலும் வருத்தமுண்டு; இழந்தோமேயென்கிற அநுதாபம் பிறந்த இக்காலத்திலும் வருத்தமுண்டு; அதாவது – முன்பு இந்திரியங்கள் விஷயாந்தரங்களில் ஊன்றி அவற்றை அநுபவிக்க ஆசைப்படும் போது அவ்விஷயங்கள் இஷ்டப்படி கிடையாமையாலும், கிடைத்தாலும் அவற்றில் உண்மையான இனிமை இல்லாமையாலும் மனம் வருந்தியே கிடக்குமாயிற்று. நித்தியாநந்தமயமாயிருக்கவேண்டிய மநஸ்ஸை வீணான வருத்தத்திற்கு ஆளாக்கினோமே! என்கிற வருத்தம் இப்போதுண்டாமது. முன்புண்டான மனவருத்தத்தையே இங்கு முக்கியமாகச் சொல்லுகிறது.

**** (ஸம்ஸாரஸாகரம் கோரம் அருந்தக்லேச பாஜநம்) என்றபடி எண்ணிறந்த துன்பங்களுக்கு ஆஸ்பதமான ஸம்ஸாரப்படு குழியிலே வந்து பிறந்ததனாலே சிற்றின்பங்களை அனுபவிப்பதிலேமிக்க ஆசைகிளர்ந்து அதனாலே கண்டவிடமெங்கு மோடித்திரிந்து ஸ்வரூபநாசம் பெற்று முடிவில் மனவருத்தமொன்றே கைகண்ட பலனாகத் தலைக்கட்டிற்றென்று கீழ்நாளைய வருத்தத்தை முன்னிரண்டடிகளாலே சொல்லி முடித்தா ராயிற்று.

இனி, இன்று தமக்குண்டான பெரும்பேற்றைப் பேசுகிறார் உய்வதோர் பொருளால் என்று தொடங்கி, ”எம்பெருமானுடைய திருவருளாலே” என்ன வேண்டிய ஸ்தானத்தில் ”உய்வதோர் பொருளால்” என்று சேமித்துச் சொல்லு கிறார். ஆத்மவர்க்கங்களுக்கெல்லாம் உஜ்ஜீவநஹேதுவான பொருள் பகவத் கிருபையேயன்றி வேறொன்றுமல்ல என்பது ஸகல சாஸ்த்ரஸித்தாந்தமாகையாலே இங்கு உய்வதோர் பொருளென்று பகவத்கிருபையைச் சொல்லத் தடையில்லை. அப்படிப்பட்ட பகவத்கிருபையாலே நல்லறிவு என்கிற ஒரு சிறந்த பதவியிலே அடிவைத்து அந்த விவேக வுணர்ச்சியைக் கொண்டு இனி நமக்குத் தஞ்சமேதென்று ஆராய்ந்து பார்த்தேன் ; பார்த்ததில் ஸ்ரீமந் நாரா யண நாமமே தஞ்சமென்று கடைப்பிடித்தேன் என்றாராயிற்று.

”பெரும்பதம் தெரிந்து” என்றும் பாடமுண்டு; ஞானமென்கிற ஒரு பெரிய பதவியினால் ஹிதாஹிதங்களைத் தெரிந்து கொண்டு என்றபடியாம்.

“நாராயணாவென்னும் நாமம்” என்றது அந்தத் திருநாமத்தை மாத்திரம் சொல்லுவதாகக் கொள்ளுதலும், அந்தத் திருநாமத்தோடு கூடிய திருவஷ்டாக்ஷர மஹாமந்த்ரத்தளவும் சொல்லுவதாகக் கொள்ளுதலும் உண்டு. திருமந்தரத்தில் நாராயணாய என்று சதுர்த்தீவிபக்தி (நான்காம் வேற்றுமையாக இருக்குஞ்சொல் இங்கு நாராயணாவென்று கடைக்குறையாய்க் கிடக்கிறது. அன்றி, நாராயணா! என்று விளியுருபு ஏற்றுக்கிடப்பதாகச் சொல்லுவாருமுளர். “நாராயணனென்னும் நாமம் ” என்னாதே விளியீறாகச் சொல்லுவானேன் என்றால், அல்லும் பகலும் ‘நாராயணா! நாராயணா!!’ என்று விளித்துக் கதறுவதே பாகவதர்களின் போது போக்காகையால் அது தோன்ற இங்கு. விளியீறாகக் கிடக்கிறதென்பர். நாராயணாய என்பதே இங்கு விகாரப்பட்டிருக்கின்ற தெனக் கொள்ளுதலே சிறக்கும்.

1. முதல் திருவந்தாதி -16 3. முதல் திருவந்தாதி – 67 2. பெரிய திருவந்தாதி-82, 4. இரண்டாந் திருவந்தாதி – 27

English Translation

I wilted, wilting despaired in my heart, born in the pain of a dark womb. I mingled, mingling with lurid young dames, seeking the sex they did give me. I ran, and running by grace of Good-Lord, probed into nature of my mind. I sought, and seeking, found out for myself, Narayana is the good name.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top