(952)
கள்வனேனானேன்படிறுசெய்திருப்பேன் கண்டவாதிரிதந்தேனேலும்,
தெள்ளியேனானேன்செல்கதிக்கமைந்தேன் சிக்கெனத்திருவருள்பெற்றேன்,
உள்ளெலாமுருகிக்குரல் தழுத்தொழிந்தேன் உடம்பெலாம்கண்ணநீர்சோர,
நள்ளிருளளவும் பகலும் நானழைப்பன் நாராயணாவென்னும்நாமம்.
பதவுரை
|
கள்வனேன் ஆனேன் |
– |
(கீழ்க்கழிந்த காலமெல்லாம்) ஆத்மாபஹாரக் கள்வனாகி |
|
படிறு செய்து இருப்பேன் |
– |
பலபல தீமைகளைச் செய்பவனாகி |
|
கண்ட ஆ திரிதந்தேனேலும் |
– |
(இப்படி) மனம்போன படியே திரிந்துழன்றேனாயினும் (இன்று) |
|
தெள்ளியேன் ஆனேன் |
– |
தெளிவு பெற்றவனானேன்: |
|
திருஅருள்சிக்கன பெற்றேன் |
– |
பகவத் கிருபையைத் திண்ணிதாக லபிக்கப் பெற்றேன்; |
|
செல் கதிக்கு அமைந்தேன் |
– |
போகவேண்டிய நல்வழிக்கு ஆளானேன்; |
|
உள்எலாம் உருகி |
– |
ஹ்ருதய மடங்கலும் நீர்ப்பண்டமாகிக் |
|
குரல் தழுத்தொழிந்தேன் |
– |
குரல் தழுதழுக்கப்பெற்று |
|
கண்ண நீர் உடம்பு எலாம் சோர |
– |
ஆநந்த பாஷ்பமானது சரீரம் நிறையப்பெருகப்பெற்று |
|
நள் இருள் அளவும் பகல் அளவும் |
– |
அஹோராத்ர விபாகமின்றி ஸர்வகாலத்திலும் |
|
நாராயணா என்னும் நாமம் நான் அழைப்பன் |
– |
நாராயணா நாமத்தைச்சொல்லி நான் கதறா நிற்பன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (கள்வனேனானேன்.) உலகில் திருடப்படும் பொருளின் தாரதம்மியத்திற்கு ஏற்பவும் பொருளுடையவனது யோக்யதையின் தாரதம்மியத்திற்கு ஏற்பவும் பாபத்திலும் தாரதம்மியமுண்டு; விறகு திருடினவனுடைய பாபத்திற்காட்டில் ரத்னம் திருடினவனுடைய பாபம் பெரிது; சூத்ரனுடைய பொருளைத் திருடின பாபத்திற்காட்டில் பிராமணனுடைய பொருளைத் திருடின பாபம் பெரிது. நான் திருடின பொருளும் சிறந்தது, அப்பொருளுடையவனும் ஸர்வோத்தமன் ; சிறந்தரத்னத்தினும் மேற்பட்டதான ஆத்மவஸ்துவை அபஹரித்தேன்; அந்த வஸ்துவோ ஸர்வோத்தமனான எம்பெருமானுடையது. ஆகையாலே – ‘இதற்கு மேற்பட்ட பாபமில்லை’ என்னலாம்படியான கொடிய பாபத்திற்குக் கொள்கலமான களவைச் செய்தவனாயினேன்.
(அதாவது — ஈச்வர சேஷமான ஆத்மாவை ஸ்வசேஷமாகக் கொண்டிருந்தேன், அஹங்காரமமகாரவிசிஷ்டனாயிருந்தேன் – என்றபடி.)
‘படிறு செய்கையாவது’ – தீம்பு செய்கை; ஆஸ்திகராயிருப்பார் அப்பா! ஈச்வர சேஷமான ஆத்மவஸ்துவை அபஹரிக்கலாகாது’ என்று உபதேசித்தாலும் ஈச்வரனாவதென்? அவனுக்கு சேஷமாயிருக்கையாவதென்?’ என்று திரஸ்காரமாகச் சொல்லி அந்த ஆத்மாபஹாரத்தை வற்புறுத்திக்கொண் டேன் என்றவாறு
“கண்டவா திரிதருகையாவது” – விதிநிஷேத சாஸ்த்ரங்களுக்குச் சிறிதும் கட்டுப்படாமல் ‘மனமே அரசன், மதியே மந்திரி ‘ என்று கொண்டு பசுக்களிலுங் கேடாகக் காரியங்கள் செய்கை. ஆக இப்படி நான் அநாதி காலமாக ஆத்மாபஹாரம் முதலிய கொடிய பாவங்களைச் செய்து போந்தேனாகிலும் இன்று பகவத்கிருபையைத் திண்ணிதாகப் பெற்று நல்லது கெட்டதுகளை ஆராய்ந்துணரக் கூடிய விவேகஞானம் பெற்று “இனி இவன் ஸம்ஸாரத்துக்கு ஆளாக மாட்டான், பரமபதத்துக்கு ஆளாகுமத்தனை” என்று ஞானிகள் நிச்சயிக்கும்படியாகச் சிறந்த நிலைமைக்கு வந்து விட்டேன். இப்போது நானிருக்கிறபடியைப் பாருங்கள்; ஸ்ரீமந்நாராயண நாமத்தை அநுஸந்திக்க வேணுமென்று நினைக்கும்போதே எனது ஹருதயம் நீர்ப்பண்டமாக உருகுகின்றது; அத்திருநாமத்தை வாய்விட்டுச் சொல்லத் தொடங்கினால் குரல் தழதழத்துப் போகிறது; ஆநந்தக் கண்ணீர் உடம்பெங்கும் முத்துமாலையிட்டாற்போலே பெருகுகின்றது. இப்படியாயிருந்து கொண்டு அஹோராத்ரமும் நான் நாராயண நாமந்தன்னையே கதறுபவனாயினேன் என்றாராயிற்று.
தேள்ளியேன் தெளிவு பெற்றவன். செல்கதி – பரமபதப்ராப்தி. — (௫)
English Translation
I was a tyrant, my ways were murky, I went about as I wished to. Yet I became clear, ready to be led, into a new life through God’s grace. I melted inside, my voice became soft, I was covered in my tears. All through the night and day I keep chanting, Narayana is the good name.
