(307)
என்னாதன் தேவிக்குஅன்று இன்பப்பூ ஈயாதாள்
தன்நாதன் காணவே தண்பூ மரத்தினை
வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட
என்னாதன் வன்மையைப் பாடிப்பற எம்பிரான் வன்மையைப் பாடிப்பற.
(308)
என்வில் வலிகண்டு போவென்று எதிர்வந்தான்
தன்வில்லி னோடும் தவத்தை எதிர்வாங்கி
முன்வில் வலித்து முதுபெண் ணுயிருண்டான்
தன்வில்லின் வன்மையைப் பாடிப்பற தாசரதி தன்மையைப் பாடிப்பற.
(309)
உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு
விருப்புற்றங் கேக விரைந்துஎதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச்
சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப்பற தேவகி சிங்கத்தைப் பாடிப்பற.
(310)
மாற்றுத்தாய் சென்று வனம்போகே என்றிட
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து எம்பிரான் என்றுஅழ
கூற்றுத்தாய் சொல்லக் கொடிய வனம்போன
சீற்ற மிலாதானைப் பாடிப்பற சீதை மணாளனைப் பாடிப்பற.
(311)
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து
நஞ்சுமிழ் நாகம் கிடந்தநல் பொய்கைபுக்கு
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த
அஞ்சன வண்ணனைப் பாடிப்பற அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற.
(312)
முடியொன்றி மூவுல கங்களும் ஆண்டுஉன்
அடியேற் கருளென்று அவன்பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரதநம் பிக்குஅன்று
அடிநிலை யீந்தானைப் பாடிப்பற அயோத்தியர் கோமானைப் பாடிப்பற.
(313)
காளியன் பொய்கை கலங்கப்பாய்ந் திட்டுஅவன்
நீள்முடி யைந்திலும் நின்று நடம்செய்து
மீள அவனுக்கு அருள்செய்த வித்தகன்
தோள்வலி வீரமே பாடிப்பற தூமணி வண்ணனைப் பாடிப்பற.
(314)
தார்க்குஇளந் தம்பிக்கு அரசீந்து தண்டகம்
நூற்றவள் சொல்கொண்டு போகி நுடங்கிடைச்
சூர்ப்ப ணகாவைச் செவியொடு மூக்குஅவ
ஆர்க்க அரிந்தானைப் பாடிப்பற அயோத்திக் கரசனைப் பாடிப்பற.
(315)
மாயச் சகட முதைத்து மருதிறுத்து
ஆயர்க ளோடுபோய் ஆநிரை காத்துஅணி
வேயின் குழலூதி வித்தக னாய்நின்ற
ஆயர்க ளேற்றினைப் பாடிப்பற ஆநிரை மேய்த்தானைப் பாடிப்பற.
(316)
காரார் கடலை யடைத்திட்டு இலங்கைபுக்கு
ஓராதான் பொன்முடி ஒன்பதோ டொன்றையும்
நேரா அவன்தம்பிக் கேநீ ளரசீந்த
ஆரா வமுதனைப் பாடிப்பற அயோத்தியர் வேந்தனைப் பாடிப்பற.
(317)
நந்தன் மதலையைக் காகுத்த னைநவின்று
உந்தி பறந்த ஒளியிழை யார்கள்சொல்
செந்தமிழ்த் தென்புது வைவிட்டு சித்தன்சொல்
ஐந்தினோ டைந்தும்வல் லார்க்குஅல்ல லில்லையே.
