(3473)
நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்,
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்,
பல்வகையும் பரந்தபெரு மானென்னை யாள்வானை,
செல்வம்மல்கு குடித்திரு விண்ணகர்க் கண்டேனே.
(3474)
கண்டவின்பம் துன்பம் கலக்கங்களும் தேற்ற முமாய்,
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்,
கண்டுகோ டற்கரிய பெருமானென்னை யாள்வானூர்,
தெண்டிரைப் புனல்சூழ் திருவிண்ணகர் நன்னகரே.
(3475)
நகரமும் நாடுகளுமு ஞானமும் மூடமும் ஆய்,
நிகர் இல் சூழ், சுடர் ஆய், இருள் ஆய், நிலன் ஆய், விசும்பு ஆய்,
சிகர மாடங்கள் சூழ் திருவண்ணகர் சேர்ந்த பிரான்
புகர் கொள் கீர்த்தி அல்லால், இல்லை- யாவர்க்கும் புண்ணியமே
(3476)
புண்ணியம் பாவம், புணர்ச்சி பிரிவு என்று இவை ஆய்,
எண்ண ஆய் மறப்பு ஆய் உண்மை ஆய் இன்மை ஆய், அல்லன் ஆய்,
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்.
கண்ணன் இன் அருளே கண்டு கொள்மின்கள் – கைதவமே?
(3477)
கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்,
மெய்பொய் யிளமை முதுமைபுதுமை பழமையுமாய்,
செய்யதிண் மதிள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
பெய்தகாவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே.
(3478)
மூவுலகங் களுமாய் அல்லனாயுகப் பாய்முனிவாய்,
பூவில்வாழ் மகளாய்த் தவ்வையாய்ப்பு ழாய்பழியாய்,
தேவர்மே வித்தெழும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
பாவியேன் மனத்தே யுறைகின்ற பரஞ்சுடரே.
(3479)
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குபதித்த வுடம்பாய்,
கரந்தும்தோன் றியும்நின்றும் கைதவங்கள் செய்யும்,விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
வரங்கொள்பாத மல்லாலில்லை யாவர்க்கும் வன்சரணே.
(3480)
வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்குவெங் கூற்றமுமாய்,
தன்சரண் நிழற்கீ ழுலகம்வைத்தும் வையாதும்,
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
என்சரணென் கண்ணன் என்னையாளுடை என்னப்பனே..
(3481)
என்னப்பன் எனக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாய்,
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பனென் அப்பனுமாய்,
மின்னப்பொன் மதிள்சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்தவப்பன்,
தன்னொப்பா ரில்லப்பன் தந்தனன்தன தாள்நிழலே.
(3482)
நிழல்வெயில் சிறுமைபெருமை குறுமை நெடுமையுமாய்,
சுழல்வனநிற் பனமற்று மாயவை அல்லனுமாய்,
மழலைவாழ் வண்டுவாழ் திருவிண்ணகர் மன்னுபிரான்,
கழல்களன்றி மற்றோர் களைகணிலம் காண்மின்களே.
(3483)
காண்மின்க ளுலகீர் என்று கண்முகப் பேநிமிர்ந்த,
தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன,
ஆணையா யிரத்துத்திரு விண்ணகர்ப்பத் தும்வல்லர்,
கோணையின்றி விண்ணோர்க் கொன்றுமாவர்குரவர்களே.
