(3481)
என்னப்பன் எனக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாய்,
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பனென் அப்பனுமாய்,
மின்னப்பொன் மதிள்சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்தவப்பன்,
தன்னொப்பா ரில்லப்பன் தந்தனன்தன தாள்நிழலே.
பதவுரை
| எனக்கு என் அப்பன் ஆய் இகுள் ஆய் என்னை பெற்றவள் ஆய் |
– |
எனக்குத் தந்தையாயும் செவிலித்யாயும் பெற்றதாயாயும் |
| பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் என் அப்பனும் ஆய் |
– |
பொன் மணி முத்து இவற்றின் தன்மைபோன்ற தன்மையை யுடையனுயும்மஹோபகாரகனாயுமிருந்துகொண்டு |
| மின்ன பொன் மதின் சூழ் திரு விண்ணகர் சேர்ந்த அப்பன் |
– |
ஒளிவிடும்படி பொன்மயமான மதிளாலே சூழப்பட்ட திருவண்ணகரிலே தங்கும் ஸ்வாமி யானவன் |
| தன் ஒப்பார் இல் அப்பன் |
– |
தன்னோடொத்தார் இல்லாத மஹான்! |
| தன தான் நிழல் தந்தனன் |
– |
(எனக்குத்) தனது திருவடிநிழலைக் கொடுத்தருளினன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (என்னப்பனெனக்காய்) •••• என்றார்கள் மஹர்ஷிகள். எம்பெருமானாகிறன் வ்ருக்ஷத்தின் நிழலானது மிகவும் அநுகூலமானது, நரகம் தவிர்ப்பது, அதுவே அடையத்தக்கது என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து, அப்படிப்பட்ட நிழலைத் தாமக அடையத்தக்கது என்பது இந்த ச்லோகத்தின் கருத்து. அப்படிப்பட்ட நிழலைத் தாமாக அடையப்பார்க்கவேண்டாதே எம்பெருமான் தானே தனது நிர்ஹேதுக கிருபையினால் (தன் திருவடிநிழலைத்) தமக்குக் கொடுத்தருளின மஹோபகாரத்தைப் பேசி மகிழ்கிறார். திருவடிநிழலைக்கொடுப்பதாவது திருவடிகளின் கீழேயிருந்து அத்தாணிச் சேவகஞ்செய்து ஆனந்திக்கும்படி செய்தருள்வதேயாம். •• என்கிற ஸுதர்சந சதக ஸூக்தியும் இங்கு நினைக்கத்தகும்.
உலகத்தில் பிதாவாயிருப்பவன் தாயாயிருக்க முடியாது, தாயாயிருப்பவள் தோழியாயிருக்க முடியாது, இப்படிப்பட்ட விருத்த தர்மங்களெல்லாம் எம்பெருமான் திறந்தே குடிகொண்டிருக்கின்ற வென்கிறார் முதலடியில்.
இகுளாய் என்கிறவிடத்தில் இருபத்தினாலாயிரப்படி ஸ்ரீஸூக்தி, – “(இருளாய்) தோழியாய். இது தமிழர் நிர்வாஹம். நம்முடையவர்கள், செவிலித்தாய் என்று நிர்வஹிப்பர்கள், தாய்க்குத் தோழியா யிருக்குமிறே செவிலித்தாய், அத்தைச் சொல்லுகிறது.“ என்று. ஈட்டு ஸ்ரீஸூக்தி (“இருளாய்) இகுளையென்று தோழிக்குப்பேராய் அத்தைக்குறைத்து இகுளென்று கிடக்கிறது.“ என்று.
(பொன்னப்பன் இத்யாதி) உலகத்தில் பொன்னால் ஒருவிதமான உபயோகம், முத்தால் மற்றொருவிதமான உபயோகம் என்றிப்படி அவ்வோ வஸ்துக்களின் தன்மைக்கு ஏற்ப உபயோக ப்ரகாரங்கள் வெவ்வேறுபட்டிருக்கும். அங்ஙனன்றிக்கே ஸகலவிதமான உப்யோகங்களும் எம்பெருமானாலே உண்டென்கிறது இங்கு. * முத்தினை மணியை மணிமாணிக்க வித்தினை * முத்தே மணிமாணிக்கமே முளைக்கின்றவித்தே * என்றார் திருமங்கையாழ்வாரும் மணி – ரத்னம், பொன், முத்து என்கிற விசேஷ சப்தங்களினிடையே யிருக்கின்ற இந்த ஸாமாந்ய சப்தமும் ஒரு விசேஷத்திலே பர்யவஸித்து நிற்கும்.
தன்னொப்பாரில்லப்பன் – இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுடைய திருநாமம் இது. ‘ஒப்பிலியப்பன்‘ என்கிற திருநாமத்தையே ‘தன்னொப்பாரில்லப்பன்‘ என்று அருளிச்செய்தபடி. திருவாய்மொழிக்கு முந்தியே இவ்வெம்பெருமானுக்கு ஒப்பிலியப்பனென்று திருநாமமிருந்ததா? அல்லது, திருவாய்மொழியில் இங்ஙனே அருளிச்செய்தது கொண்டு ஒப்பிலியப்பனென்று பெருமாளுக்குத் திருநாமம் வழங்கிவந்தார்களா? என்று சிலர் விமர்சிப்பதுண்டு. இரண்டுபடியும் பொருந்ததக்கதே. ஸ்தலபுராணத்தின்படி உப்பிலியப்பன் என வழங்குவர். இத்தலத் தெம்பெருமான் பிரமசாரி வேடம்பூண்டு திருமணம் புரிவதற்குப் பெண்கேட்கப்போன விடத்தில் பெண்ணின் தாய்தந்தையர் “எமது பெண்ணுக்கு உப்புசேர்த்துத் தளிகைபண்ணுகிறவிதமே தெரியாதே, இவளை மணம்புரிந்து நீர் எங்ஙனம் இல்லறம் நிகழ்த்துவீர்?“ என்ன, அப்படியாகில் எனக்கு உப்பில்லாத தளிகையே பரம போக்யமாகும் என்று சொல்லி, அப்பெண்ணை மணம்புரிந்து வந்ததாகவும், அதனால் உப்பிலியப்பன் என்று திருநாமம் பெற்றதாகவும், அந்தப் புராண வரலாற்றை அடியொற்றியே இற்றைக்கும் இத்தலத்தில் உப்பில்லாத தளிகைகளே நிவேதனமாகின்ற தென்பதாகவும் கூறுப.
English Translation
My Lord and father is my mother and my faster-mother. The golden father, the gem-hued father, the pearly father, my father, -he resides in Tiru-vinnakar with golden walls around. Peerless Lord, he gave me the shade of his golden feet.
