(3473)
நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்,
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்,
பல்வகையும் பரந்தபெரு மானென்னை யாள்வானை,
செல்வம்மல்கு குடித்திரு விண்ணகர்க் கண்டேனே.
பதவுரை
| நல்குரவும் செல்வும் |
– |
தாரித்ரியமும் ஐச்சரியமுமாய் |
| நரகும் சுவர்க்கமும் ஆய் |
– |
நரகமும் ஸ்வர்க்கமுமாய் |
| வெல் பகையும் நட்பும் |
– |
எதிரியைவெல்லுகின்ற பகையும் (அதற்கு எதிர்த்தடையான்) ஸ்நேஹமுமாய் |
| விடமும் அமுதமும் ஆய் |
– |
விஷமும் அமிருதமுமாய் (ஆக இப்படி) |
| பல்வகையும் பரந்த பெருமான் |
– |
பலவகையாக விரிந்த விபூதியையுடையனாய் |
| என்னை ஆள்வானை |
– |
என்னை அடிமைகொண்ட ஸர்வேச்வரனை |
| செல்வம் மல்கு குடி |
– |
செல்வம் நிரம்பிய ஸந்நிதியான |
| திரு விண்ணகர் |
– |
திருவிண்ணகரிலே |
| கண்டேன் |
– |
காணப்பெற்றேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (நல்குரவுஞ்செல்வும்) ஒன்றோடொன்று சேராதவற்றை யெல்லாம் தன்பக்கலிலே சேரவிட்டுக்கொண்டிருக்கிற பெருமானைத் திருவிண்ணகரிலே காணநின்றே னென்கிறார். நல்குரவு – ஏழைமை, அதற்கு எதிரானது ஐச்வரியம், இவையிரண்டுமா யிருக்கையாவது – இவை யிரண்டையும் அவரவர்களுக்கு உண்டுபண்ணவல்லவனாயிருக்கை. குசேல முனிவனை தரித்ரனாக்கினதும் தானே, செல்வனாக்கினதும் தானே, பின்னையும் தரித்ரனாக்கியதும் தானே.
நரகும் சுவர்க்கமுமாய் – துக்கமே வடிவெடுத்த நரகத்திலே தள்ளுவதும் தானே, சுகமே வடிவெடுத்த சுவர்க்கத்திலே நிறுவுவதும் தானே. வெல்பகையும் நட்பும் –த்வேஷத்தை விளைப்பதும் தானே, ஸ்நேகத்தை விளைப்பதும் தானே. தன் பக்கலில் த்வேஷமுடையவர்களை ஸ்நேஹிகளாக்கிக்கொள்ளவும் வல்லன், ஸ்நேஹமுடையவர்களை த்வேஷிகளாக்கிக் கொள்ளவும் வல்லன் என்றுமாம். மஹாத்வேஷியாயிருந்த கண்டாகர்ணனை ஸ்நேஹியாக்கிக் கொண்டான், மஹாஸ்நேஹியாயிருந்த மாலிகனை த்வேஷியாக்கிக்கொண்டான், சீமாலிகனவனோடு தோழமைக்கொள்ளவும் வல்லாய், சாமாறவனை நீ யெண்ணிச் சக்கரத்தால் தலைகொண்டாய் * என்ற பெரியாழ்வார் திருமொழி காண்க. வெல்பகை – ‘ஸமாதானத்தாலே மீளுமதன்றியிலே வென்றேவிடவேண்டும் பகை‘ என்பது ஈடு.
விடமும் அமுதமுமாய் – அரனுக்கு விஷமளித்தவனும் தானே, அமரர்க்கு அமுதமளித்தவனும் தானே. அமரர்தமமுதே அசுரர்கள் நஞ்சே! * என்கிறபடியே சிலர்க்கு அமிருதமாயும் சிலர்க்கு விஷமாயுமிருப்பவன் என்றுமாம். ஆகவிப்படி பல்வகையும் பரந்த பெருமானென்று அவனுடைய விபூதி விஸ்தாரத்தைச் சொல்லிற்றாயிற்று. திருமழிசைப்பிரான் நான்னென்று அவனுடைய விபூதி விஸ்தாரத்தைச் சொல்லிற்றாயிற்று. திருமழிசைப்பிரான் நான்முகன் திருவந்தாதியில் * யாவராய் நிற்கின்றதெல்லாம் நெடுமாலென்று ஓராதார் கற்கின்றதெல்லாம் கடை * என்றார். * ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத் * என்றபடி எதையும் பகவத்விபூதியாகவே நினைப்பார்க்கு தாரித்ரியமென்று ஒரு தாழ்வும் ஐச்வரியமென்று ஒரு மேன்மையும், நரகமென்று ஒரு துக்கமும் சுவர்க்கமென்று ஒரு சுகமும் தோன்றாதபடி எல்லாம் ஒரு நிகராகவே தோற்றுமென்பது இதனால் அறிவிக்கப்பட்டதாகும்.
திருவிண்ணகர் – சோழநாட்டுத் திருப்பதிகள் நாற்பதுள் திருக்குடந்தை யருகிலுள்ள உப்பிலியப்பன் ஸந்நிதி. புராண ப்ரக்ரியையின்படி உப்பிலியப்பன் என்பர், ஆழ்வாரருளிச் செயலின்படி ஒப்பிலியப்பன் என்னவேணும். * தன்னொப்பாரில்லப்பன் * என்று இப்பதிகம் தன்னிலேயே ஒன்பதாம் பாட்டிற் காண்க. * ஒருவரையும் நின்னொப்பாரொப்பிலா வென்னப்பா * என்பது திருமங்கையாழ்வார் பாசுரம்.
English Translation
I see the Lord everywhere; he appears in many ways, as poverty and plenty, as heaven and hell, as bitter feud and friendship, a poison and medicine. He is my master living with affluent people in Tiru-vinnagar.
