(2182)
அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,
இன்புருகு சிந்தை யிடுதிரியா, – நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.
(2183)
ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்றன் நாமங்கள்,
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால், – வானத்
தணியமர ராக்குவிக்கு மஃதன்றே, நாங்கள்
பணியமரர் கோமான் பரிசு.
(2184)
பரிசு நறுமலரால் பாற்கடலான் பாதம்,
புரிவார் புகழ்பெறுவர் போலாம், – புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலங்கொளிசேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர்.
(2185)
நகரிழைத்து நித்திலத்து நாண்மலர் கொண்டு, ஆங்கே
திகழும் அணிவயிரம் சேர்த்து, – நிகரில்லாப்
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனிமலராள்,
அங்கம்வலம் கொண்டான் அடி.
(2186)
அடிமூன்றி லிவ்வுலகம் அன்றளந்தாய் போலும்
அடிமூன் றிரந்தவனி கொண்டாய், – படிநின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
ஆரோத வல்லார் அறிந்து.
(2187)
அறிந்தைந்து முள்ளடக்கி ஆய்மலர்கொண்டு, ஆர்வம்
செறிந்த மனத்தராய்ச் செவ்வே, – அறிந்தவன்றன்
பேரோதி யேத்தும் பெருந்தவத்தோர் காண்பரே,
காரோத வண்ணன் கழல்.
(2188)
கழலெடுத்து வாய்மடித்துக் கண்சுழன்று, மாற்றார்
அழலெடுத்த சிந்தையராய் அஞ்ச, தழலெடுத்த
போராழி ஏத்தினான் பொன்மலர்ச் சேவடியை
ஓராழி நெஞ்சே உகந்து.
(2189)
உகந்துன்னை வாங்கி ஒளிநிறங்கொள் கொங்கை
அகம்குளிர வுண்ணென்றாள் ஆவி, – உகந்து
முலையுண்பாய் போலே முனிந்துண்டாய், நீயும்
அலைபண்பா லானமையால் அன்று.
(2190)
அன்றதுகண் டஞ்சாத ஆய்ச்சி யுனக்கிரங்கி,
நின்று முலைதந்த இன்நீர்மைக்கு, அன்று
வரன்முறையால் நீயளந்த மாகடல்சூழ் ஞாலம்,
பெருமுறையா லெய்துமோ பேர்த்து.
(2191)
பேர்த்தனை மாசகடம் பிள்ளையாய், மண்ணிரந்து
காத்தனை புல்லுயிரும் காவலனே, ஏத்திய
நாவுடையேன் பூவுடையேன் நின்னுள்ளி நின்றமையால்
காவடியேன் பட்ட கடை.