பத்தாந் திருமொழி
(108)
வட்டு நிடுவே வளர்கின்ற மாணிக்க
மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தேபோல்
சொட்டுச் சொட்டென்னத் துளிக்கத் துளிக்கஎன்
குட்டன்வந்து என்னைப் புறம்புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்.
(109)
கிங்கிணி கட்டிக் கிறிகட்டி கையினில்
கங்கண மிட்டுக் கழுத்தில் தொடர்கட்டி
தன்கணத் தாலே சதிரா நடந்துவந்து
என்கண்ணன் என்னைப் புறம்புல்குவான் எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்.
(110)
கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம்
ஒத்துப் பொருந்திக்கொண்டு உண்ணாது மண்ணாள்வான்
கொத்துத் தலைவன் குடிகெடத் தோன்றிய
அத்தன்வந்து என்னைப் புறம்புல்குவான் ஆயர்க ளேறுஎன் புறம்புல்குவான்.
(111)
நாந்தக மேந்திய நம்பி சரணென்று
தாழ்ந்த தனஞ்சயற் காகி தரணியில்
வேந்தர்க ளுட்க விசயன் மணித்திண்தேர்
ஊர்ந்தவன் என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்.
(112)
வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடி
கண்பல செய்த கருந்தழைக் காவின்கீழ்
பண்பல பாடிப்பல் லாண்டிசைப்ப பண்டு
மண்பல கொண்டான் புறம்புல்குவான் வாமனன் என்னைப் புறம்புல்குவான்.
(113)
சத்திர மேந்தித் தனியொரு மாணியாய்
உத்தர வேதியில் நின்ற ஒருவனை
கத்திரியர் காணக் காணிமுற்றும்கொண்ட
பத்திராகாரன் புறம்புல்குவான் பாரளந் தான்என் புறம்புல்குவான்.
(114)
பொத்த வுரலைக் கவிழ்த்துஅதன் மேலேறி
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திருவயி றார விழுங்கிய
அத்தன்வந்து என்னைப் புறம்புல்குவான் ஆழியான் என்னைப் புறம்புல்குவான்.
(115)
மூத்தவை காண முதுமணற் குன்றேறி
கூத்துஉவந் தாடிக் குழலால் இசைபாடி
வாய்த்த மறையோர் வணங்க இமையவர்
ஏத்தவந்து என்னைப் புறம்புல்குவான் எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்.
(116)
கற்பகக் காவு கருதிய காதலிக்கு
இப்பொழுது ஈவதென்று இந்திரன் காவினில்
நிற்பன செய்து நிலாத்திகழ் முற்றத்துள்
உய்த்தவன் என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்.
(117)
ஆய்ச்சியன் றாழிப் பிரான்புறம் புல்கிய
வேய்த்தடந் தோளிசொல் விட்டுசித்தன் மகிழ்ந்து
ஈத்த தமிழிவை ஈரைந்தும் வல்லவர்
வாய்த்தநின் மக்களைப் பெற்று மகிழ்வரே.
