(192)
இந்திர னோடு பிரமன் ஈசன் இமையவ ரெல்லாம்
மந்திர மாமலர் கொண்டு மறைந்துஉவ ராய்வந்து நின்றார்
சந்திரன் மாளிகை சேரும் சதிரர்கள் வெள்ளறை நின்றாய்
அந்தியம் போதுஇது வாகும் அழகனே காப்பிட வாராய்.
(193)
கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின் றபசு வெல்லாம்
நின்றொழிந் தேன்உன்னைக் கூவி நேசமே லொன்று மிலாதாய்
மன்றில்நல் லேல்அந்திப் போது மதிள்திரு வெள்ளறை நின்றாய்
நின்றுகண் டாய்என்தன் சொல்லு நான்உன்னைக் காப்பிட வாராய்.
(194)
செப்போது மென்முலை யார்கள் சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு
அப்போது நானுரப் பப்போய் அடிசிலு முண்டிலை ஆள்வாய்
முப்போதும் வானவ ரேத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய்
இப்போது நான்ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய்.
(195)
கண்ணில் மணல்கொடு தூவிக் காலினால் பாய்ந்தனை யென்றென்று
எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படு கின்றார்
கண்ணனே வெள்ளறை நின்றாய் கண்டாரோ டேதீமை செய்வாய்
வண்ணமே வேலைய தொப்பாய் வள்ளலே காப்பிட வாராய்.
(196)
பல்லா யிரவர்இவ் வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார்
எல்லாம்உன் மேலன்றிப் போகாது எம்பிரான் நீஇங்கே வாராய்
நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞானச் சுடரே உன்மேனி
சொல்லார வாழ்த்தி நின்றேத்திச் சொப்படக் காப்பிட வாராய்.
(197)
கஞ்சங் கறுக்கொண்டு நின்மேல் கருநிறச் செம்மயிர்ப் பேயை
வஞ்சிப் பதற்கு விடுத்தா னென்பதுஓர் வார்த்தையும்
உண்டு மஞ்சு தவழ்மணி மாட மதிள்திரு வெள்ளறை நின்றாய்
அஞ்சுவன் நீஅங்குநிற்க அழகனே காப்பிட வாராய்.
(198)
கள்ளச் சகடும் மருதும் கலக்கழி யஉதை செய்த
பிள்ளை யரசேநீ பேயைப் பிடித்து முலையுண்ட பின்னை
உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளியுடை வெள்ளறை நின்றாய்
பள்ளிகொள் போது இதுவாகும் பரமனே காப்பிட வாராய்.
(199)
இன்ப மதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய்
கும்பக் களிறட்ட கோவே கொடுங்கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே
செம்பொன்மதிள்வெள் ளறையாய் செல்வத்தி னால்வளர் பிள்ளாய்
கம்பக் கபாலிகாண் அங்குக் கடிதோடிக் காப்பிட வாராய்.
(200)
இருக்கொடு நீர்சங்கில் கொண்டிட்டு எழில்மறை யோர்வந்து நின்றார்
தருக்கேல்நம்பி சந்தி நின்று தாய்சொல்லுக் கொள்ளாய் சிலநாள்
திருக்காப்பு நான்உன்னைச் சாத்தத் தேசுடை வெள்ளறை நின்றாய்
உருக்காட்டும் அந்தி விளக்குஇன் றொளிகொள்ள ஏற்றுகேன் வாராய்.
(201)
போதமர் செல்வக் கொழுந்து புணர்திரு வெள்ளறை யானை
மாதர்க் குயர்ந்த அசோதை மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம்
வேதப் பயன்கொள்ள வல்ல விட்டுசித் தன்சொன்ன மாலை
பாதப் பயன்கொள்ள வல்ல பத்தருள் ளார்வினை போமே.
