(182)
ஆனிரை மேய்க்கநீ போதி அருமருந் தாவ தறியாய்
கானக மெல்லாம் திரிந்துஉன் கரிய திருமேனி வாட
பானையில் பாலைப் பருகிப் பற்றாதா ரெல்லாம் சிரிப்ப
தேனி லினிய பிரானே செண்பகப் பூச்சூட்ட வாராய்.
(183)
கருவுடை மேகங்கள் கண்டால்உன்னைக் கண்டாலொக்கும் கண்கள்
உருவுடை யாய்உல கேழும் உண்டாக வந்து பிறந்தாய்
திருவுடையாள் மணவாளா திருவரங் கத்தே கிடந்தாய்
மருவி மணம்கமழ் கின்ற மல்லிகைப் பூச்சூட்ட வாராய்.
(184)
மச்சொடு மாளிகை யேறி மாதர்கள் தம்மிடம் புக்கு
கச்சொடு பட்டைக் கிழித்துக் காம்பு துகிலவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள்திரு வேங்கடத்து எந்தாய்
பச்சைத் தமனகத் தோடு பாதிரிப் பூச்சூட்ட வாராய்.
(185)
தெருவின்கண் நின்றுஇள வாய்ச்சி மார்களைத் தீமைசெய்யாதே
மருவும் தமனக மும்சீர் மாலை மணம் கமழ்கின்ற
புருவம் கருங்குழல் நெற்றி பொலிந்த முகிற்கன்று போலே
உருவ மழகிய நிம்பீ உகந்திவை சூட்டநீ வாராய்.
(186)
புள்ளினை வாய்பிளந் திட்டாய் பொருகரி யின்கொம் பொசித்தாய்
கள்ள வரக்கியை மூக்கொடு காவல னைத்தலை கொண்டாய்
அள்ளிநீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன்
தெள்ளிய நீரிலெ ழுந்த செங்கழு நீர்சூட்ட வாராய்.
(187)
எருதுக ளோடு பொருதி ஏதும் உலோபாய்கான் நம்பி
கருதிய தீமைகள் செய்து கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய்
தெருவின்கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்க ளோடு
பொருது வருகின்ற பொன்னே புன்னைப் பூச்சூட்ட வாராய்.
(188)
குடங்க ளெடுத்தேற விட்டுக் கூத்தாட வல்லஎம் கோவே
மடங்கொள் மதிமுகத் தாரை மால்செய்ய வல்லஎன் மைந்தா
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இருபிள வாகமுன் கீண்டாய்
குடந்தைக் கிடந்தஎம்கோவே குருக்கத்திப் பூச்சூட்ட வாராய்.
(189)
சீமா லிகனவ னோடு தோழமை கொள்ளவும் வல்லாய்
சாமாறு அவனைநீ யெண்ணிச் சக்கரத் தால்தலை கொண்டாய்
ஆமா றறியும் பிரானே அணியரங் கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சிப் பூச்சூட்ட வாராய்.
(190)
அண்டத் தமரர்கள் சூழ அத்தாணி யுள்ளங்கி ருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சி லுறைவாய் தூமல ராள்மண வாளா
உண்டிட்டு உலகினை யேழும் ஓரா லிலையில் துயில்கொண்டாய்
கண்டுநான் உன்னை யுகக்கக் கருமுகைப் பூச்சூட்ட வாராய்.
(191)
செண்பக மல்லிகை யோடு செங்கழு நீர்இரு வாட்சி
எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்றுஇவை சூட்டவாவென்று
மண்பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்துரை செய்தஇம் மாலை
பண்பகர் வில்லிபுத் தூர்க்கோன் பட்டர் பிரான்சொன்ன பத்தே.
