ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
பொதுத்தனியன்கள்
மணவாளமாமுனிகள் தனியன் (அழகியமணவாளன் அருளிச்செய்தது)
ஸ்ரீஶைலேஶ த3யாபாத்ரம் தீ4ப3க்த்யாதி3 கு3ணார்ணவம் I
யதீந்த்3ரப்ரவணம் வந்தே3 ரம்யஜாமாதரம் முநிம் II
குருபரம்பரையின் தனியன் (கூரத்தாழ்வான் அருளிச்செய்தது)
லக்ஷ்மீநாத3 ஸமாரம்பா3ம் நாத3யாமுநமத்4யமாம் I
அஸ்மதா3சார்யபர்யந்தாம் வந்தே3 கு3ருபரம்பராம் II
எம்பெருமானார் தனியன் (கூரத்தாழ்வான் அருளிச்செய்தது)
யோ நித்யமச்யுத பதா3ம்பு3ஜயுக்3 மருக்ம
வ்யாமோஹதஸ்த3தி தராணி த்ருணாய் மேநே |
அஸ்மத்3கு3 ரோர் ப4க3வதோS ஸ்ய த3யைகஸிந்தோ3:
ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரப3த்யே ||
நம்மாழ்வார் தனியன் (ஆளவந்தார் அருளிச்செய்தது)
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூ4தி:
ஸர்வம் யதே3வ நியமேத மத3ந்வயாநாம் |
ஆத்3 யஸ்ய ந: குலபதேர்வகுளாபி4ராமம்
ஸ்ரீமத் தத3ங்க்4ரியுக3ளம் ப்ரணமாமி மூர்த்4நா ||
ஆழ்வார்கள் உடையவர் தனியன் (ஸ்ரீ பராசரபட்டர் அருளிச்செய்தது)
பூ4தம் ஸரஸ்ய மஹதா3ஹ்வய ப4ட்டநாத2
ஸ்ரீப4க்திஸார குலஶேக2ர யோகி3 வாஹாந் |
ப4க்தாங்க்4ரிரேணு பரகால யதீந்த்3ரமி ஶ்ராந்
ஸ்ரீமத்பராங்குஶமுநிம் ப்ரணதோஸ்மி நித்யம் II
திருப்பல்லாண்டு தனியன்கள்.
நாதமுனிகள் அருளிச் செய்தது
கு3ருமுக2மநதீ4த்ய ப்ராஹ வேதா3நஶேஷா2ந்
நரபதி2பரிக்லுப்தம் ஶுல்கமாதா3துகாம: |
ஶ்வஷுரமமரவந்த்3யம் ரங்க3 நாத2ஸ்ய ஸாக்ஷாத்
த்3விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி ||
பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை
மின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத்தூர் என்றொருகால் *
சொன்னார் கழற் கமலம் சூடினோம் * – முன்னாள்
கிழியறுத்தான் என்றுரைத்தோம் * கீழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து
பாண்டியன் கொண்டாடப் பட்டர் பிரான் வந்தான் என்று *
ஈண்டிய சங்கம் எடுத்தூத * – வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான் *
பாதங்கள் யாமுடைய பற்று
(1)
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு
(2)
அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே
(3)
வாழாட் பட்டுநின் றீருள்ளீ ரேல்வந்து மண்ணும் மணமும்கொண்மின்
கூழாட் பட்டுநின் றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை
பாழா ளாகப் படைபொரு தானுக்குப் பல்லாண்டு கூறுதமே
(4)
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடு மனமுடை யீர்கள் வரம்பொழி வந்துஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்று
பாடு மனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே
(5)
அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகே சன்தனக்கு
தொண்டக் குலத்திலுள் ளீர்வந் தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்துபல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்மினே
(6)
எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே
(7)
தீயிற் பொலிகின்ற செஞ்சுட ராழி திகழ்திருச் சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழிகுருதி
பாயச் சுழற்றிய ஆழிவல் லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
(8)
நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல
பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே
(9)
உடுத்துக் களைந்தநின் பீதக வாடை யுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன சூடும்இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக்கரு மம்திருத் தித்திரு வோணத் திருவிழவில்
படுத்தபைந் நாகணைப் பள்ளிகொண் டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
(10)
எந்நாள் எம்பெரு மான்உன் தனக்கடி யோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திருமது ரையுள் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நா கத்தலை பாய்ந்தவ னே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே
(11)
அல்வழக் கொன்றுமில் லாஅணி கோட்டியர் கோன்அபி மானதுங்கன்
செல்வனைப் போலத் திருமா லேநானும் உனக்குப் பழவடியேன்
நல்வகை யால்நமோ நாரா யணாவென்று நாமம் பலபரவி
பல்வகையாலும் பவித்திர னேஉன்னைப் பல்லாண்டு கூறுவனே
(12)
பல்லாண் டென்று பவித்திர னைப்பர மேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண் டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்
நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாராய ணாயவென்று
பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே