(1)
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு
பதவுரை
|
மல் ஆண்ட |
– |
மல்லர்களை நிரஹித்த |
|
திண் தோள் |
– |
திண்ணிய தோள்களையுடையனாய் |
|
மணி வண்ணா |
– |
நீலமணிபோன்ற திருநிறைத்தை யுடையனானவனே! |
|
பல் ஆண்டு பல் ஆண்டு |
– |
பலபல வருஷங்களிலும் |
|
பல் ஆயிரம் ஆண்டு |
– |
அநேக ப்ரஹ்ம கல்பங்களிலும் |
|
பல கோடி நூறு ஆயிரமும் |
– |
இப்படி உண்டான காலமெல்லாம் |
|
உன் |
– |
உன்னுடைய திருவடிகளினுடைய |
|
சே அடி |
– |
சிவந்த |
|
செவ்வி |
– |
அழகுக்கு |
|
திருக்காப்பு |
– |
குறைவற்ற ரக்ஷை உண்டாயிடுக. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – பாண்டியராஜனுடைய பண்டித ஸபையிலேவந்து பரதத்வநிர்ணயம் பண்ணின பெரியாழ்வார்க்கு அவ்வரசன் யானையின்மேலே மஹோத்ஸவம் செய்வித்தபோது அந்த உத்ஸவத்தைக்கண்டு ஆநந்திப்பதற்காக ஸ்ரீவைகுண்ட ஸபரிவாரனாய் எழுந்தருளி எதிரே ஸேவைஸாதிக்க, ஆழ்வார் ஸேவித்து வந்த அருமருந்தன்ன எம்பெருமானுக்கு எழும்பூண்டெல்லாம் அஸுரக்ஷ ஸமயமாயிருக்கிற இந்நிலத்திலே யாராலே என்ன தீங்கு விளைகிறதோ என்று அதிசங்கைப்பட்டு ‘ஒரு அமங்களமும் நேரிடாதபடி மங்களமே உண்டாயிருக்கவேணும்’ என்று பல்லாண்டு பாடுகிறார். அதாவது – ஜய விஜயீபவ என்கிறார்.
ஆழ்வார் இப்படி அதிசங்கையாலே மங்களாசாஸகம் பண்ணுகிறாரென்று தெரிந்துகொண்ட எம்பெருமான் ‘ஐயோ! ஏன் இவர் இப்படி பயப்படுகிறார், எப்படிப்பட்ட எதிரிகளையும் ஒரு விரல் நுனியாலே வென்றொழிக்கவல்ல தேஹவலிவு நமக்கு உண்டென்பது இவர்க்குத் தெரியவில்லை போலும், அந்த வலிவைக் காட்டினோமாகில் இவருடைய அச்சம் அடங்கிவிடும்’ என்று நினைத்து, முன்னோ க்ருஷணவதார காலத்தில் தன்னைக் கொல்லும்படி கம்ஸனால் ஏவப்பட்டுவந்த சாணூரன் முஷ்டிகன் முதலிய மல்லர்களை நொறுக்கித் தள்ளின தன்னுடைய புஜபலத்தைக் காட்டினான்; ஆழ்வாருடைய அச்சம் தணிவதற்காகக் காட்டின அந்த வலிவு ஆழ்வாருடைய பயம் அதிகரிப்பதற்கே காரணமாயிற்று. புத்திரன் சூரனாயிருந்தால் அவனுடைய தாயானவுள் ‘இவன் ஒருவரையும் லக்ஷியம் பண்ணாமல் யுத்தம் செய்யப் போய்விடுவனே! யாராலே என்ன கெடுதி நேர்ந்துவிடுமோ’ என்று பயப்படுவதுபோல் இவரும் அந்த மல்லாண்ட திண்டோள் வலிமைக்குப் பயப்பட்டு மீண்டும் மங்களாசாஸநம் பண்ணுகிறார்.
பல்லாண்டு என்று ஒரு தடவை சொன்னால் போராதா? ‘‘பல்லாயிரத்தாண்டு’’ என்றும் ‘‘பல்கோடி நூறாயிரம் பல்லாண்டு’’ என்றும் அதிகமாகச் சொல்லுவானேன்? என்னில் ; தாஹித்தவன் தாஹம் தீருகிறவரையில் ‘தண்ணீர், தண்ணீர்’ என்றே சொல்லிக் கொண்டிருப்பதுபோல் இவரும் தம்முடைய அச்சம் அடங்குமளவும் மங்களாசாஸகம் ஓயமாட்டார்.
மல்லாண்ட என்றவிடத்தில் மல் என்ற சொல் மல்லர்களைச் சொல்லும். ஆயுதத் துணையின்றி தேஹவலிவையேகொண்டு சண்டை செய்பவர் மல்லர். இனி, மல்லாண்ட என்பதற்கு ‘பலசாலியான’ என்றும் பொருளுண்டு. மல் – வலிவு. ‘‘உன் சேவடி செவ்வி திருக்காப்பு’’ என்று திருவடிக்கு மாத்திரம் மங்களாசாஸநமிருந்தாலும் இது திருமேனி முழுமைக்கும் மங்களாசஸநம் பண்ணினதாகும். சேஷபூதனுக்குத் திருவடியே உத்தேச்யம் என்பதைக் காட்டவே சேவடி செவ்வி திருக்காப்பு என்றார். செவ்வடி என்றாலும் சேவடி என்றாலும் ஒன்றே.
இந்தப் பாசுரம் பல்லவிபோல ஒவ்வொரு பாசுரத்தோடும் சேர்த்துச் சொல்லத் தகுந்தது. இதையும் மேல் பாசுரத்தையும் சேர்த்து ஒரு பாட்டாக அநுஸந்திப்பது ஸம்ப்ரதாயம்.
English Translation
Many years, many years, many thousands of years and many hundred thousands more. Gem-hued Lord with mighty wrestling shoulders, your red lotus feet are our refuge.
English Translation
