இராமாநுச நூற்றந்தாதி திருமொழி – 2

(2802)

இடங்கொண்ட கீர்த்தி மழிசைக் கிறைவன் இணையடிப்போ

தடங்கும் இதயத் திராமா னுசன்,அம்பொற்பாத மென்றுங்

கடங்கொண் டிறைஞ்சும் திருமுனி வர்க்கன்றிக் காதல்செய்யாத்

திடங்கொண்ட ஞானியர்க் கேஅடி யேனன்பு செய்வதுவே.

விளக்க உரை

(2803)

செய்யும் பசுந்துள பத்தொழில் மாலையும் செந்தமிழில்

பெய்யும் மறைத்தமிழ் மாலையும் பேராத சீரரங்கத்

தையன் கழற்கணி யம்பரன் தாளன்றி ஆதரியா

மெய்யன் இராமா னுசன்சர ணேகதி வேறெனக்கே.

விளக்க உரை

(2804)

கதிக்குப் பதறிவெங் கானமும் கல்லும் கடலுமெல்லாம்

கொதிக்கத் தவம்செய்யும் கொள்கையற் றேன்,கொல்லி காவலன்சொல்

பதிக்கும் கலைக்கவி பாடும் பெரியவர் பாதங்களே

துதிக்கும் பரமன் இராமா னுசனென்னைச் சோர்விலனே.

விளக்க உரை

(2805)

சோராத காதல் பெருஞ்சுழிப்பால், சொல்லைமாலை யொன்றும்

பாராதவனைப் பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன்தாள்

பேராத வுள்ளத் திராமா னுசன்றன் பிறங்கியசீர்

சாராமனிசரைச் சேரேன் எனக்கென்ன தாழ்வினியே?

விளக்க உரை

(2806)

தாழ்வொன்றில் லாமறை தாழ்ந்து தலமுழுதுங் கலியே

ஆள்கின்ற நாள்வந் தளித்தவன் காண்மின் அரங்கர்மௌலி

சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால்

வாழ்கின்ற வள்ளல் இராமா னுசனென்னும் மாமுனியே.

விளக்க உரை

(2807)

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்

கனியார் மனம்கண்ண மங்கைநின் றானைக் கலைபரவும்

தனியா னையைத்தண் டமிழ்செய்த நீலன் றனக்குலகில்

இனியானை எங்கள் இராமா னுசனைவந் தெய்தினரே.

விளக்க உரை

(2808)

எய்தற் கரிய மறைகளை ஆயிரம் இன்தமிழால்

செய்தற் குலதில் வரும்சட கோபனைச் சிந்தையுள்ளே

பெய்தற் கிசையும் பெரியவர் சீரை உயிர்களெல்லாம்

உய்தற் குதவும் இராமா னுசனெம் உறுதுணையே.

விளக்க உரை

(2809)

உறுபெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர்குருவும்

வெறிதரு பூமகள் நாதனும் மாறன் விளங் கியசீர்

நெறிதரும் செந்தமிழ் ஆரண மெயென்றிந் நீணிலத்தோர்

அறிதர நின்ற,இராமா னுசனெனக் காரமுதே.

விளக்க உரை

(2810)

ஆரப் பொழில்தென் குருகைப் பிரான்,அமுதத் திருவாய்

ஈரத் தமிழின் இசையுணர்ந் தோர்கட்கு இனியவர்தம்

சீரைப் பயின்றுய்யும் சீலங்கொள் நாதமுனியை நெஞ்சால்

வாரிப் பருகும் இராமா னுசனென்றன் மாநிதியே.

விளக்க உரை

(2811)

நிதியைப் பொழியும் முகில்என்று நீசர்தம் வாசல்பற்றித்

துதிகற் றுலகில் துவள்கின்றி லேன், இனித் தூய்நெறிசேர்

எதிகட் கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்

கதிபெற் றுடைய இராமா னுசனென்னைக் காத்தனனே.

விளக்க உரை

(2812)

கார்த்திகை யானும் கரிமுகத் தானும் கனலும்முக்கண்

மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு மூவுலகும்

பூத்தவனே! என்று போற்றிட வாணன் பிழைபொறுத்த

தீர்த்தனை யேத்தும் இராமா னுசனென்றன் சேமவைப்பே.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top