மூன்றாந் திருமொழி
(3031)
ஊனில்வாழுயிரே நல்லைபோஉன்னைப்பெற்று,
வானுளார்பெருமான் மதுசூதனென்னம்மான்,
தானும்யானுமெல்லாம் தன்னுள்ளேகலந்தொழிந்தோம்,
தேனும்பாலும்நெய்யும் கன்னலுமமுதுமொத்தே
(3032)
ஒத்தார்மிக்காரை இலையாயமாமாய,
ஒத்தாயெப்பொருட்கு முயிராய், என்னைப்பெற்ற
அத்தாயாய்த்தந்தையா யறியாதனவறிவித்த,
அத்தா, நீ செய்தன அடியேனறியேனே.
(3033)
அறியாக்காலத்துள்ளே யடிமைக்கணன்புசெய்வித்து,
அறியாமாமாயத் தடியேனைவைத்தாயால்,
அறியாமைக்குறளாய் நிலம்மாவலிமூவடியென்று,
அறியாமைவஞ்சித்தா யெனதாவியுள்கலந்தே.
(3034)
எனதாவியுள்கலந்தபெரு நல்லுதவிக்கைம்மாறு,
எனதாவிதந்தொழிந்தே னினிமீள்வதென்பதுண்டே,
எனதாவியாவியும்நீ பொழிலேழுமுண்டவெந்தாய்,
எனதாவியாரயானார தந்தநீகொண்டாக்கினையே.
(3035)
இனியார்ஞானங்களா லெடுக்கலெழாதவெந்தாய்,
கனிவார்வீட்டின்பமே யென்கடற்படாவமுதே,
தனியேன்வாழ்முதலே, பொழிலேழுமேனமொன்றாய்,
நுனியார்க்கோட்டில்வைத்தா யுன்பாதம்சேர்ந்தேனே.
(3036)
சேர்ந்தார்தீவினைகட் கருநஞ்சைத்திண்மதியை,
தீர்ந்தார்தம்மனத்துப் பிரியாதவருயிரை,
சோர்ந்தேபோகல்கொடாச் சுடரை அரக்கியைமூக்
கீர்ந்தாயை அடியேனடைந்தேன் முதல்முன்னமே.
(3037)
முன்நல்யாழ்பயில் நூல் நரம்பின்முதிர்சுவையே,
பன்னலார்பயிலும் பரனே,பவித்திரனே,
கன்னலே,அமுதே, கார்முகிலே,என்கண்ணா,
நின்னலாலிலேன்கா ணென்னைநீகுறிக்கொள்ளே.
(3038)
குறிக்கொள்ஞானங்களா லெனையூழிசெய்தவமும்,
கிறிக்கொண்டிப்பிறப்பே சிலநாளிலெய்தினன்யான்,
உறிக்கொண்டவெண்ணெய்பா லொளித்துண்ணுமம்மான்பின்,
நெறிக்கொண்டநெஞ்சனாய்ப் பிறவித்துயர்க்கடிந்தே
(3039)
கடிவார்தண்ணந்துழாய்க் கண்ணன்விண்ணவர்பெருமான்,
படிவான்மிறந்த பரமன்பவித் திரன்சீர்,
செடியார்நோய்கள்கெடப் படிந்துகுடைந்தாடி,
அடியேன்வாய்மடுத்துப் பருகிக்களித்தேனே.
(3040)
களிப்பும்கவர்வுமற்றுப் பிறப்புப்பிணிமூப்பிறப்பற்று,
ஒளிக்கொண்ட சோதியுமா யுடன்கூடுவதென்றுகொலோ,
துளிக்கின்றவானிந்நிலம் சுடராழிசங்கேந்தி,
அளிக்கின்றமாயப்பிரானடியார்கள் குழாங்களையே.
(3041)
குழாங்கொள்பேரரக்கன் குலம்வீயமுனிந்தவனை,
குழாங்கொள்தென்குருகூர்ச் சடகோபன்தெரிந்துரைத்த,
குழாங்கொளாயிரத்து ளிவைபத்துமுடன்பாடி,
குழாங்களாயடியீருடன் கூடிநின்றாடுமினே.
